Published:Updated:

குருப்பெயர்ச்சி சிம்மம் ராசிபலன்கள்

சிம்மம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்மம்

13.11.21 முதல் 13.4.22 வரை

எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். உங்களின் பூர்வபுண்யாதிபதி குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளை பாக்கியத்துக்காக ஏங்கும் அன்பர்களுக்கு அந்த வரம் கிடைக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள்.

குருப்பெயர்ச்சி 
சிம்மம் ராசிபலன்கள்

குரு லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் மனத்தாங்கல் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீண் கோபம் நீங்கும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி, பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் சுக - பாக்கியாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். தாயாருடனான மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும்.

31.12.21 முதல் 2.3.2022 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்கள் பூர்வபுண்ய - அஷ்டமாதிபதியான குரு, பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் பண வரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் படிகளில் ஏறி இறங்கும்போது கவனம் தேவை; எடை மிகுந்த பொருள்களைச் சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். திடீர்ப் பயணங்கள், செலவுகள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடனைத் தீர்க்க புது வழி கிடைக்கும்.

வியாபாரத்தில் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் உயர்வு உண்டு. மேலதிகாரி ஆதரிப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களே, அரசாங்க கெளரவம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருவதுடன், மனநிம்மதியைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: அனுஷ நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருளும் குருபகவானை நெய் விளக்கேற்றி வணங்கி வாருங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.