Published:Updated:

அவமானங்கள் மாறி வெகுமானங்கள் பெருக்கும் 2020... ரிஷப ராசிக்குரிய ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்! #Video

2020 - ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக் கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்...

ராசிபலன்
ராசிபலன்

2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கின்றார். குரு சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவ பலன்களே மிகுதியாக இருக்கும். 2020 ஆங்கிலப் புத்தாண்டு, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு புதிய விடியலாக அமையவிருக்கிறது. ரிஷப ராசிக்காரர்கள், 2017 தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாகவே அஷ்டமச் சனியின் பிடியில் சிக்கித் தவித்து வந்தனர். எந்தக் காரியத்திலும் தடை ஏற்படுவது, வருடமெல்லாம் அவமானப்படுவது, என்கிற நிலையில் பல துன்பங்களை அனுபவித்துவந்தனர். அதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வைத் தரக்கூடிய ஆண்டாக இந்த 2020 அமையப்போகிறது.

ரிஷப ராசி
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர், சிறுவயது, நடுத்தர வயதுள்ளவர், வயதானவர் என்று பல நிலைகளிலுமே அவர்கள் பலவிதமான குறைபாடுகளையும் துன்பங்களையும் சந்தித்துவந்தனர். இந்த மனக் குறைகளெல்லாம் இந்த வருடம் பிறந்த மூன்றாவது வாரத்திலேயே உங்களுக்கு நீங்கப்போகிறது.

இதுநாள் வரை ரிஷப ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துகொண்டு துன்பம் விளைவித்து வந்த சனி பகவான், தற்போது ஜனவரி மாதம் 24 - ம் தேதி முதல் மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். எனவே, இத்தனை நாள்களாக இருந்துவந்த தடைகளையும் துன்பத்தையும் எளிதாகக் கடந்து விடுவார்கள். சனி பகவான் 9 - ம் இடத்துக்குச் செல்வதால், மிகப்பெரிய அளவில் நல்ல பலன்கள் நடைபெறாவிட்டாலும், கெடுபலன்கள் இனி நடைபெறாது என்பது நிச்சயம்.

ராசிபலன்
ராசிபலன்

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொழில்துறையில் சரிவைச் சந்தித்துவந்தவர்கள், தொழில் நன்றாக அமையாமல் இருந்தவர்கள், அலுவலகத்தில் அனுபவம் குறைவானவர்களிடம் அவமானத்தைச் சந்தித்துவந்தவர்களெல்லாம், இனி வரும் காலங்களில் 'ராஜ நடை' போட்டு நடக்கக்கூடிய ஒரு காலகட்டத்தை அடைவார்கள்.

வேலையில்லாமல் சிரமப்பட்டுவந்தவர்களுக்கு, புதிய இடத்தில் வேலை அமையும். கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியில் சொல்ல முடியாத அளவு அவமானங்களைச் சந்தித்துவந்த ரிஷப ராசிக்காரர்கள், உத்தியோகத்தில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் அவஸ்தைப்பட்டுவந்தார்கள். அவையெல்லாம் இனி மாறிப்போய் கௌரவமும் சந்தோஷமும் பெறும் சூழ்நிலை இனி உருவாகும்.

ராசிபலன்
ராசிபலன்

உழைப்புக்கேற்ற ஊதியமும் திறமைக்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் இனி சுப பலன்களைப் பெறுவார்கள். சுபிட்சமான வாழ்வை நோக்கிச் செல்வார்கள். திருமணமாகாமல் இருந்துவந்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இந்த ஆண்டு திருமணம் ஆகும். அஷ்டமத்திலிருக்கும் குரு பகவான் எப்படி திருமண பாக்கியத்தைத் தருவார் என்று சிலர் கேட்கலாம். எட்டாமிடத்தில் குரு இருக்கும்போது தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால், திருமண வாய்ப்புகள் அதிகம்.

கிராமப் பொருளாதாரம்தான் இந்தியப் பொருளாதாரமென்பதால், கிராமம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, பயிர்த் தொழில் போன்றவை எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நல்ல வருமானத்தைப் பார்ப்பார்கள். மழை சிறப்பாக இருப்பதால் மகசூலும் சிறப்பாக இருக்கும். பயிர்த் தொழில் செழித்து வளரும்.

ராசிபலன் 2020
ராசிபலன் 2020

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் எட்டாமிடத்திலிருந்து தன ஸ்தானமான இரண்டாமிடத்தைப் பார்ப்பதால், கையில் காசு, பணம் புரளும். சமூகத்தில் இவர்களின் பேச்சுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இது அமையும். ரிஷப ராசிக்கு 12 - ம் இடமான மேஷத்தை குரு பகவான் பார்ப்பதால், வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு மனு செய்திருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர், சுற்றுலா விசாவில் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள்.

தென்கோடி கிராமங்களில் இருக்கக்கூடியவர்களில் பலரும் தலைநகரான சென்னையை நோக்கி வருகைதருவார்கள். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்புகளும் நல்ல வருமானமும் கிடைக்கப்போவதால், இந்த வருடத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்து வரப்போகும் ஆண்டுகளுக்கான அஸ்திவாரத்தை ரிஷப ராசிக்காரர்கள் இப்போதே அமைத்துக்கொள்வது நல்லது.

ரிஷப ராசி
ரிஷப ராசி

அஷ்டமச்சனி விலகினால், அதன் பிறகு அந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதி. ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த விதமான எதிர்மறை பலன்களும் இந்த ஆண்டு நிகழாது என்பது நிச்சயம். இதுநாள் வரை நீங்கள் விருப்பப்பட்டுக் கிடைக்காத விஷயங்கள் எல்லாம் இப்போது உங்களுக்குக் கிடைக்கும்.

மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரக்கூடிய புத்தாண்டாக இந்த 2020 ஆங்கில புத்தாண்டு, ரிஷப ராசிக்காரர்களுக்கு அமையும் என்பது திண்ணம்.

எடுத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே... 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! #Video