இளசுகள்தான் புல்லட்டின் ‘தட் புட்’ ஹார்ட் பீட்டுக்குச் சரியான பீட் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு விட்டது ராயல் என்ஃபீல்டு. இதன் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் புகுந்து களம் இறங்கியிருக்கிறது RE. சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.
பைக் நிறுவனங்களுக்கு ஷோரூம் தெரியும்… சர்வீஸ் சென்டர் தெரியும். அதென்ன பயற்சி மையம்? இது அதையும் தாண்டி!

இந்தப் பயிற்சி மையம் என்பது எல்லோருக்குமானது. அதாவது கல்லூரி மாணவர்களுக்கு, பொறியாளர்களுக்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு என எல்லோருக்கும் ஒரு கற்றல் மற்றும் டெக்னாலஜி அறிவை வழங்கும் மையம். இதை ஆங்கிலத்தில் Experiential Training Hub அல்லது National Training Centre என்கிறது ராயல் என்ஃபீல்டு.
இதற்கு சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள HITS (Hindustan Institute of Technology and Science) பல்கலைக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
இந்தப் பல்கலைக் கழக கேம்பஸில் கிட்டத்தட்ட 11,000 சதுர அடியில் Skill Development மற்றும் Technical Training பயிற்சியை அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்களுடன் வழங்குகிறார்கள். பொதுவாக, இளைஞர்கள் பைக் புக்கிங் செய்ய ஷோரூமுக்குப் போவார்கள். இங்கே ராயல் என்ஃபீல்டு புல்லட்களையும் புக்கிங் செய்து கொள்ளலாம் என்பதைத் தாண்டி – ஒரு ராயல் என்ஃபீல்டு இன்ஜின் எப்படி இயங்குகிறது; என்னென்ன இன்ஜின் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன; முறையான டிரைவிங் கற்றுக் கொள்ள சிமுலேட்டர்கள், RE நிறுவனத்தின் Workbay-க்கள் என எல்லா அனுபவங்களையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பது ஸ்பெஷல்.

ஒரு ப்யூர் மோட்டார் சைக்கிளிங்கின் எக்கோ சிஸ்டம் என்ன என்பதை வரை தெரிந்து கொள்ளலாம். இங்கே ராயல் என்ஃபீல்டு ஜென்யூன் ஆக்சஸரீஸ்க்கான ஆக்சஸும் உண்டு. பைக் விற்பனையில் சேவை மற்றும் பராமரிப்புக்கான பயிற்சியும் கொடுக்க இருக்கிறார்கள்.
‘‘பைக் விற்பனையைத் தாண்டி, பல பொறியாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை ராயல் என்ஃபீல்டு மூலமாக உருவாக்குவதற்குத்தான் இந்தப் புது முயற்சி!’’ என்கிறார் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன்.
நிஜம்தான்; நீங்கள் வெறுமனே பைக் வாங்க மட்டுமில்லாமல், ராயல் என்ஃபீல்டைப் பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டும் என்றால், அப்படியே இந்துஸ்தான் பல்கலைக் கழகம் பக்கம் நடையைக் கட்டலாம்!