நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

ஹலோ வாசகர்களே...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது, 2005-ல் நம் இந்திய பொருளாதாரமும் பங்குச் சந்தையும் ஒருசேர முன்னேறத் தொடங்கி இருந்த காலகட்டம். இதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை சமூகத்தில் ஒருசிலர் மட்டுமே அனுபவித்துவந்த வேளையில், அந்த நன்மைகள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கிடைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் நாணயம் விகடன். அந்த நாணயம் விகடன், ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்திசெய்து, இந்த இதழில் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாணயம் விகடன், வாசகர்களுக்கு சொல்லித்தந்த சேமிப்பு மற்றும் முதலீட்டு உத்திகளும், நிதி நிர்வாகம் தொடர்பான பல யோசனைகளும் அவர்களுடைய முதலீடு பன்மடங்கு பெருகுவதற்கு உதவியாக இருந்தது என்பதை அவர்களே சொல்வதைக் கேட்கும்போது நாணயம் விகடனின் நோக்கம் நிறைவேறி வருவதாகவே தெரிகிறது.

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

அதிக லாபம் தருகிறோம் என மோசடி நிறுவனங்கள் ஆசை காட்டிய போது, அவற்றின் முகமூடியைக் கிழித்து, அப்பாவி மக்கள் பணத்தை இழக்காமல் தடுத்த பெருமை நாணயத்துக்கு உண்டு. விர்ரென்ற விலைவாசி ஏற்றத்தில், வீணான செலவுகளால் குடும்பத்தின் சேமிப்பு கரைவதை எடுத்துச்சொல்லி, சிக்கனமாக  செலவழிக்கும் வழிகளையும், முதலீட்டு முறைகளையும் சொன்னதன் மூலம் பல குடும்பங்கள் இன்றைக்கு நிம்மதியான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதிலும் நாணயத்தின் பங்கு உண்டு.

கடந்த 10 வருட காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய ஏற்றங்களையும், இறக்கங்களையும் கண்டதன் மூலம் நம் வாசகர்கள் எல்லாவிதமான நிதிச் சூழல்களையும் சமாளிப்பதில் தேர்ந்தவர்களாகிவிட்டார்கள். சமீபகாலமாக இருந்தவந்த பொருளாதார மந்தநிலை ஒரு முடிவுக்கு வந்து, மீண்டுமொரு அற்புதமான ஏற்றம், நம் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தக் காத்திருக்கிறது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நம்மை உயர்த்திக்கொள்வதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துவது நம் கடமை. இந்தக் குறிக்கோள் நிறைவேற, உங்கள் எல்லா முயற்சிகளிலும் நாணயம் விகடன் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வாருங்கள், கைகோத்தபடி, நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவோம்! வாசகர்கள் அனைவருக்கும் நாணயம் விகடனின் வாழ்த்துக்கள்!    
    
 - ஆசிரியர்.