Published:Updated:

வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!
வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி
வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!

வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!

ஏடிஎம் கார்டினைப் பயன்படுத்தும் அத்தனை பேரின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது கடந்த வாரத்தில் வெளியான அதிர்ச்சி செய்தி. கிட்டத்தட்ட 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளின் ரகசியத் தகவல்கள் திருடு போயிருப்பதாகவும், இதனால் டெபிட் கார்டுகளின் பின்நம்பர்களை உடனடியாக மாற்றும்படியும் பல வங்கிகள் அபயக்குரல் எழுப்பி இருக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் கார்டினைப் பயன்படுத்த பலரும் தயங்கினார்கள்.  ஆனால் வங்கிகளோ, எல்லோருக்கும் ஏடிஎம் கார்டினைத் தந்தே தீருவது என்று முடிவெடுத்தது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களைக் கொண்டு நிறைய பேருக்கு வங்கிகளால் சேவை செய்ய முடிந்தாலும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய வங்கிகள் தவறிவிட்டன.

‘ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ்’ என்னும் நிறுவனம் வழங்கும் ஏடிஎம் சேவை, வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என  ‘நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ கடந்த மே மாதமே கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனை எல்லாம் காற்றில் பறக்கவிட்டதன் விளைவே  இப்போது 1.3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிபோயிருக்கிறது.

இவ்வளவு பெரிய ஆபத்து நடந்த பின்னும் பல வங்கிகள், எங்கள் சேவையில் எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் இல்லை என்றுதான் சொல்கின்றன. எஸ்பிஐ வங்கி மட்டுமே பழைய கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளை வழங்க முன் வந்திருக்கிறது. மற்ற வங்கிகள், சிக்கலில் சிக்காமல் இருக்க உடனே பின்நம்பரை மாற்றுங்கள் என்றுதான் சொல்கின்றன.

வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!


தொழில்நுட்பங்கள் தொடர்பான குறைபாடுகளை வங்கிகள் எவ்வளவுதான் களைந்தாலும், ஏதாவது ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்து, பணத்தைக் கொள்ளை அடிப்பதே தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். இந்த மாதிரியான கொள்ளை முயற்சிகள் இனியும் நடக்காமல் இருக்க, வங்கிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பதே மக்கள் கேட்கும் முக்கியமான கேள்வி.

வங்கிகள் மீதுள்ள நன்னம்பிக்கையினால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மக்கள் அங்கு போட்டு வைக்கின்றனர். இந்த நம்பிக்கை வீணாகும்பட்சத்தில் வங்கியில் பணத்தைப் போட்டு வைப்பதையே மக்கள் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் வீட்டின் பீரோவில் பணம் தூங்க ஆரம்பித்துவிடும். பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்திவிடும் என்பதால், அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, வங்கிகளின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்!

 -ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு