Published:Updated:

இந்த வேகம் நிச்சயம் போதாது!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி
இந்த வேகம் நிச்சயம் போதாது!

தொழில் செய்யத் தொடங்குவதற்கான சூழல் (Ease of Doing Business) குறித்த பட்டியலில் நம் நாடு ஒரே ஒரு இடத்தில் உயர்ந்திருப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறது. கடந்த ஆண்டில் 131-வது இடத்தில் இருந்த நம் நாடு, இந்த ஆண்டு 130-வது இடத்துக்கு வந்திருப்பது மத்திய அரசு, தொழில் வளர்ச்சிக்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் மீது பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. 

இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பெறுவதே எங்கள் நோக்கம் என்று சொன்னார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இருக்கிற நிலையிலிருந்து நாம் பின்தங்கி விடவில்லை என்றாலும் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை.

இந்த வேகம் நிச்சயம் போதாது!

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சில சீர்திருத்தங்களை, மோடி அரசாங்கம் பொறுப்பு உணர்வுடன் வேகமாகக் கொண்டு வந்திருந்தாலும், அதனால் பாசிட்டிவ் விளைவுகள் அதிகம் ஏற்படவில்லை. திவால் சட்டம், பொருள் மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகியவை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தவிர, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய முன்னேற்றமும் இல்லை. சாலை வசதி, மின்சார வசதி, வங்கிக் கடன் உதவி போன்றவற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் வராததால்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழில் தொடங்க விரும்பவில்லை. உதாரணமாக, சுவீடன் நாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நொவார்டிஸ், நம் நாட்டில் தொடங்க வேண்டிய தொழிற்சாலையை சீனாவில் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் நாம் அடைந்த இழப்பு ரூ.7,000 கோடி.  

நம் நாடு தொழில் முன்னேற்றம் அடையவேண்டுமெனில், வளர்ச்சி குறித்து மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நாட்டின் வளங்களைப் பகிர்ந்துகொள்வதில், மாநிலங்கள் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கவேண்டும். உள்கட்டமைப்புத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அரசியல் கட்சிகளின் ஆட்சி மாறுவதால் நிறுத்தப்படக் கூடாது. இப்படி பல்வேறு வாக்குறுதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தந்தால் மட்டுமே பல தொழில் நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வந்து தொழில் தொடங்கும்.

இதை எல்லாம் செய்யாமல் நம் தொழில் வளர்ச்சி பெருகவில்லையே என்று புலம்பிப் பயனில்லை. இன்று நாம் அடைந்துவரும் தொழில் வளர்ச்சி நிச்சயம் போதாது. அடுத்த ஆண்டிலேயே நாம் 50 இடங்களுக்குள் வந்துவிட முடியாது. ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில் 100 இடங்களைத் தொடுகிற அளவுக்காவது நாம் முன்னேறவில்லை எனில், இந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறக்கவேண்டியதுதான்!      
                                                      
 - ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு