Published:Updated:

பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!
பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

ஹலோ வாசகர்களே..!

அண்மையில் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், ஒரு முக்கியமான விவரத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், சுமார் 9.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து, விநியோகித்திருப்பதாகச் சொல்லி, எல்லோரையும் அதிர வைத்திருக்கிறார் ஆர்பிஐ கவர்னர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு சுமார் ரூ.15.2 லட்சம் கோடி. இதில் பெருமளவு நோட்டுக்களை திரும்பப் பெற்ற ஆர்பிஐ, வெறும் ரூ.9.2 லட்சம் கோடிக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டிருக்கிறது. ஏறக்குறைய ரூ.6 லட்சம் கோடி  அளவுக்குப் பணப் புழக்கத்தைக் குறைத்திருக்கிறது ஆர்பிஐ. குறைவாக இருக்கும்  பணப் புழக்கத்தை, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் சமாளிக்குமாறு ஆர்பிஐ-யும் மத்திய அரசும் சொல்லி வருகின்றன.

ஆனால், யதார்த்தத்தில் இருக்கும் நிலைமையே வேறு. 100, 500, 2,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த 2,000 ரூபாய் நோட்டினைப் பயன்படுத்தி, பல பொருட்களை மக்களால் வாங்க முடியவில்லை.

தவிர, அரசாங்கம் நிர்ணயம் செய்திருக்கும் குறைந்தபட்ச அளவுக்குக்கான பணம்கூட வங்கி மற்றும்  ஏடிஎம்-கள் மூலம் எடுக்க முடியாத சூழலே இப்போதும் நிலவுகிறது. ஏடிஎம்-களில் எவ்வளவு பணத்தை வைத்தாலும், சில மணி நேரங்களிலேயே தீர்ந்துபோய்விடுகிற  நிலையே இப்போதும் இருக்கிறது.

பணப் புழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!

ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறதா என்றால், அதற்கும் வழி இல்லை.  ஆன்லைனில் பொருட்களை வாங்கச்  சொல்லும் அரசாங்கம், அதற்குரிய வழிகளை செய்து தராமல் இருப்பது வேடிக்கையான முரண்பாடு!

பணப் புழக்கத்தைக் குறைவாக வைத்திருப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி என்கிற மிக முக்கியமான விஷயம் பறிபோய்விடும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா? பணப் புழக்கம்தான் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரம் என்பதை வேறு யாரையும்விட குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்?

நமது பொருளாதாரம் வேகமாக வளரவேண்டும் எனில், பணப் புழக்கம் மிக அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கையை மத்திய அரசாங்கம் இனியாவது எடுக்கட்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கட்டும்! 

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு