வேறு வழியில்லாமல் வாய் திறந்து பதில் சொல்லியிருக்கிறது தமிழக அரசாங்கம். தமிழகத்தில் தொழில் தொடங்கவிருந்த கியா மோட்டர்ஸ் நிறுவனம் ‘சொந்தக் காரணங்களால் ஆந்திராவுக்குச் சென்றது’ என்று சொல்லி, முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறது நம் மாநில அரசாங்கம்.

தமிழகத்தில் பெரிய அளவில் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ‘கவனிக்க’ சொல்வது பல ஆண்டு காலமாகவே இருந்துவருகிறது என்பதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சிவாஜி’ சினிமா படமே சிறந்த உதாரணம். ‘இதெல்லாம் உண்மையில்லை. வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் எந்த கமிஷனையும் கேட்பதில்லை’ என அமைச்சர்கள் சொன்னாலும், அதுதான் உண்மை என்பது தொழில் துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ‘அவர்கள் கேட்டார்கள்; நாங்கள் தர மறுத்துவிட்டோம். அதற்கு மேல் என்ன சொல்ல...?’ எனத் தொழில் நிறுவனங்கள் ஒதுங்கி நிற்பதாலேயே, அரசியல்வாதிகள் பலரும் காந்தியின் வாரிசுகளாகத் தங்களை வெளிக்காட்டி வருகிறார்கள். தங்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பற்றித் தொழில் நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்லத் துணிந்துவிட்டால், சுயநல அரசியல்வாதிகளின் முகமூடி கிழிந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘போனது ஒரு நிறுவனம் மட்டுமே. இன்னும் நிறைய நிறுவனங்கள் வருகின்றன’ என அரசு சொல்வதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இப்படி வரும் நிறுவனங்களை விரட்டியடிக்காமல் இருக்க வேண்டுமே என்பதே நமது கவலை.
தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதென்பது முன்புபோல இல்லை. ‘எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள். உங்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்துதருகிறோம்’ என எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களும் கூவிக்கூவி அழைக்கிறார்கள். அதிலும், தொழில் செய்வதற்கு இணக்கமான சூழலை (Ease of Doing Business) உருவாக்குவதில் மாநில அரசாங்கங் களுக்கு இடையே பெரும் போட்டி நடந்துவரும் இந்த வேளையில், தமிழக அரசின் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால், நம் மாநிலத்துக்கு வர நினைக்கும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் வராமலே போய்விடுமே.
அதிக அளவில் தொழில்மயமான மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கக் காரணம், அரசின் ஆதரவு என்பதைவிட, தொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் நம் தொழிலதிபர்களும், உழைத்து வாழ வேண்டும் என நினைக்கும் நம் மக்களும்தான். வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தொழில் செய்வதற்கான இயற்கை வளமும், மனித வளமும் நிறைந்தது நம் மாநிலம். இந்த வளங்களை எல்லாம் செம்மையாகப் பயன்படுத்தி, தொழில் முன்னேற்றம் அடையச் செய்வதற்கு நம் மாநில அரசாங்கம் பெரிய தடங்கல் எதுவும் செய்யாமல், சின்னச் சின்ன உதவிகளைச் செய்தாலே போதும்!
- ஆசிரியர்