நமது வங்கிகளின் மொத்த வாராக் கடன் சுமார் ரூ.7 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், 12 நிறுவனங்கள் வாங்கியுள்ள கடனைத் திவால் சட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஒழித்துக்கட்டும் முயற்சியில் மத்திய ரிசர்வ் வங்கி இறங்கியிருப்பதை நிச்சயம் வரவேற்கலாம். இதன் மூலம், வங்கிகளின் மொத்த வாராக் கடனில் சுமார் 25% ஒழிந்துபோகும்.
என்றாலும், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை இத்துடன் முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. காரணம், வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியைக்கூடக் கட்ட முடியாத நிலையில்தான் இன்றைக்குப் பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தில் வட்டி கட்டுவதற்கான செலவு எவ்வளவு என்பதைச் சொல்வது ‘இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ’ என்னும் விகிதம். இது 1-க்கு மேல் இருந்தால் மட்டுமே வாங்கிய கடனுக்கான செலவை ஒரு நிறுவனத்தினால் ஈடுகட்ட முடியும் ஆனால், மின் உற்பத்தித் துறையில் 70% , தொலைத் தொடர்புத் துறையில் 57%, இரும்பு உற்பத்தித் துறையில் 55% நிறுவனங்களிலும் இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ 1 என்கிற அளவைவிடக் குறைவாக இருக்கிறது. இது போன்று முக்கியக் கட்டமைப்புத் துறைகளில் கடன் செலவு அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும். இந்திய வங்கிகள் தந்துள்ள மொத்தக் கடனில் 17% கடன் மிக மோசமான நிலையில் உள்ளன.

வீடியோகான் நிறுவனத்தின் வட்டிச் சுமையை சுமார் 90% வரை குறைத்தால் மட்டுமே வாங்கிய கடனுக்கான செலவை அந்த நிறுவனத்தினால் ஈடுகட்ட முடியும். அபன் ஆப்சோர் நிறுவனத்துக்கு 80%, பூஷன் ஸ்டீலுக்கு 70%, அதானி பவர் நிறுவனத்துக்கு 40%, ஜி.எம்.ஆர். இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 30% வரை வட்டிச் சுமையைக் குறைத்தால் மட்டுமே வாங்கிய கடனுக்கான செலவை இந்த நிறுவனங்களினால் ஈடுகட்ட முடியும் என்கிறபோது, நமது நிறுவனங்கள் எத்தனை மோசமான நிலையில் இருக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
நமது பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையவில்லை என்பதால்தான், பல்வேறு தனியார் நிறுவனங்கள் இப்படிக் கடனில் சிக்கித் தவிக்கின்றன. அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, வருமானத்தை அதிகரித்து, நுகர்தலை அதிகப்படுத்துவதன் மூலமே நிறுவனங்களின் வருமானம் உயர்ந்து, அதிக லாபமும் கிடைக்கும்.
அடிப்படையாகச் செய்ய வேண்டிய இந்த விஷயங்களைச் செய்தால்தான், வங்கிகள் பலம் பெற்றுப் பொருளாதாரம் உயரும்; நிறுவனங்களின் கடன் சுமையும் குறையும்; நம் மக்கள் முன்னேற்றமும் காண முடியும். இல்லாவிட்டால், நாம் இன்னும் மோசமான பொருளாதார நிலையைத்தான் அடைவோம்!
- ஆசிரியர்
