Published:Updated:

நேர்மையான நிர்வாகத்துக்குத் தேவை இளைஞர்களும் தொழில்நுட்பமும்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நேர்மையான நிர்வாகத்துக்குத் தேவை இளைஞர்களும் தொழில்நுட்பமும்தான்!
நேர்மையான நிர்வாகத்துக்குத் தேவை இளைஞர்களும் தொழில்நுட்பமும்தான்!

ஹலோ வாசகர்களே..!

பிரீமியம் ஸ்டோரி

‘‘நம் நாட்டின் நிர்வாகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்குகொள்ள வேண்டும்’’ என அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த வியாழன் அன்று, முக்கியமான ஐம்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அதிபர்களைச் சந்தித்தபின், பிரதமர் மோடி இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். பிரதமரின் இந்த அழைப்பை உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்க வேண்டும்.

நேர்மையான நிர்வாகத்துக்குத் தேவை இளைஞர்களும் தொழில்நுட்பமும்தான்!



‘‘இடைத்தரகர்களின்’ நடவடிக்கைகளை ஒழிக்க அரசு நிர்வாகத்தில் ஸ்டார்ப்அப்கள் பங்கெடுக்க வேண்டும்’’ எனப் பிரதமர் மோடி சொல்லியிருப்பது சரியான காரணம்.

இன்றைய நிலையில், நமது அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. உலகமே டிஜிட்டல்மயமாகி வரும் வேளையில், இன்னும்கூடப் பல ஆவணங்களைக் காகிதங்களில்தான் நாம் பதிவு செய்துவைக்கிறோம். புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழைய முடியாதபடி கைகளைப் பரப்பி தடுத்து நிற்கிறார்கள் பழம்பெருச்சாளிகள். ஏன் தெரியுமா? ‘எந்தக் காரியமும் சீக்கிரம் நடந்துவிடக் கூடாது. காசு தருபவர்களுக்கு  மட்டுமே சீக்கிரமாகக் காரியத்தை முடித்துத் தரவேண்டும்’ என்பதே அவர்களின் நோக்கம். இதனால், அரசு இயந்திரம் ஆமை வேகத்தில் செயல்படுவதுடன், ஊழலின் உறைவிடமாகவும் இருக்கிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், இளைஞர்களின் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், அவர்களின் அதிநவீன தொழில் நுட்பங்களையும் அரசு நிர்வாகத்தில் கொண்டுவருவது தவிர, வேறு வழி இல்லை.

அரசு சேவைகள் மக்களுக்கு வேகமாகவும், சரியாகவும் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இன்றைய இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஆயிரக்கணக்கில் அருமையான ஐடியாக்களைக் கொட்டுவார்கள். இந்த ஐடியாக்களில் சிறப்பானவற்றைத் தேர்வு செய்து, அரசு இயந்திரத்தில் புகுத்தினாலே, இடைத்தரகர்களின் இடையூறுகளை ஒழித்து, மக்களுக்குச் சரியான சேவை வேகமாகக் கிடைக்கத் தொடங்கிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் எப்போதோ இதைச் செய்துவிட்டதால், அந்த நாடுகளில் ஊழல் ஒழிந்து, மக்களுக்கான தேவைகளை அரசு இயந்திரங்களால்  சிறப்பாக நிறைவேற்ற முடிகிறது. இனியாவது, இளைஞர்களையும், தொழில் நுட்பத்தையும் நம் அரசு நிர்வாகத்தில் பங்கெடுக்க நாம் அனுமதிப்போம். அதன் மூலம் சிறப்பான சேவையானது நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு