Published:Updated:

சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!

சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!

ந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து முன்பு ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும்தான் விவாதித்து வந்தனர். ஆனால், இப்போது ஆளுங் கட்சியினரே அதுகுறித்து விவாதித்து வருகின்றனர். ‘பொருளாதார வளர்ச்சி சரிவதைப் பார்த்து சும்மா இருக்க முடியாது’ என பா.ஜ.க-வின் யஷ்வந்த் சின்ஹா சொல்ல, ‘நாட்டின் வளர்ச்சி கடந்த காலத்திலும் குறைந்திருப்பதை’  பிரதமர் மோடி எடுத்துச்சொல்ல, நாட்டின் வளர்ச்சி மீதான மக்களின் சந்தேகம் மேலும் வலுவடையவே செய்கிறது.

சொல் அல்ல, செயல்தான் வேண்டும்!



 இன்றைய நிலையில், நமக்குத் தேவை பொருளாதாரம் குறித்த விவாதம் அல்ல. வேகம் குறைந்த பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள்தான். அதிலும் குறிப்பாக, இந்தச் சர்ச்சையில் பிரதமர் மோடியே நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து, வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அவர் வேகம் காட்ட வேண்டும். கடந்த மூன்றரை ஆண்டுகளில் அவர் செய்யத் தவறிய விஷயங்களில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

முதல் விஷயம், வேலை வாய்ப்பு. பல லட்சம் இளைஞர்கள் ஆண்டு தோறும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார்கள். ஆனால், சில லட்சம் வேலைகளைக்கூட மத்திய அரசு உருவாக்காமல் போனால், பொருளாதாரம் எப்படி வளரும்? அந்த இளைஞர்கன் குடும்பம் எப்படி நிம்மதியாக இருக்கும்?

அதுமட்டுமல்ல, தொழில் துறையில் கடந்த 15 காலாண்டுகளாகத் தனியார் முதலீடு வெகுவாகக் குறைந்து வருவதைப் பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். அரசு முதலீட்டை மட்டுமே வைத்து நாம் வளர்ச்சி காண முடியாது என்பது பிரதமருக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?

அடுத்த முக்கியமான விஷயம், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை. இன்றைய நிலையில், வங்கிகளிடம் நிறையவே பணம் உள்ளது. ஆனால், எந்த வங்கியும் கடன் தரத் தயாரில்லை. காரணம், கடனாகத் தரும் பணம் வராமல் போய்விடுமோ என்கிற பயம்தான். இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைப் பிரதமர் காணாவிட்டால், வங்கித் துறையும் வளராது; தொழில் துறையும் வளராது.

அண்மைக் காலம் வரை நம்மைவிட மெதுவாக வளர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்,  இன்றைக்கு நம்மைவிட வேகமாக வளரத் தொடங்கி விட்டன. ஆனால், நாமோ வளர முடியாமல் தவிக்கிறோமெனில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டாமா?

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்கள் நிறைய இருக்க, ‘இதற்குமுன் நடக்காத எது இப்போது நடந்துவிட்டது’ என்பதுபோல பிரதமரே பேசுவது வருத்தத்தையே அளிக்கிறது. பிரதமரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது சரியான செயலேயன்றி, பதில் அல்ல!

- ஆசிரியர்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism