நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

மீண்டும் முன்னேற்றப் பாதையில்..!

மீண்டும் முன்னேற்றப் பாதையில்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் முன்னேற்றப் பாதையில்..!

ஹலோ வாசகர்களே..!

நம் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக இன்னொரு புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.3 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நமது வளர்ச்சி 5.7 சதவிகிதமாகவே இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மீண்டும் முன்னேற்றப் பாதையில்..!அதுமட்டுமல்ல, கடந்த ஐந்து காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிவின்போக்கில் இருந்துவந்த நம் பொருளாதார வளர்ச்சி, இப்போது மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், இந்த ஆண்டின் மத்தியில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டினால் நமது பொருளாதார வளர்ச்சிப் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. பொருளாதார நிபுணர்கள் பலரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தனர்.

ஆனால், இந்தப் பெரிய சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை உதறித் தள்ளிவிட்டு, மிகக் குறுகிய காலத்துக்குள் நம் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்திருப்பது நம் மக்களின் துணிச்சலையும், எதிர்காலத்தின்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது.

பணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி-யினால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் அதிகரித்திருக்கிறது. இந்த வருவாய், வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். எனவே, அடுத்து வரும் காலாண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தச் சமயத்தில் நமது மத்திய அரசாங்கம் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், நம் நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்பதே.

உற்பத்தி அதிகமானாலும்கூட, விவசாயம் மற்றும் சேவைத் துறையில் வளர்ச்சி கொஞ்சம் குறைந்துள்ளதால் அதையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக, வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலமே நம் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஏற்றப் பாதையில் இருக்கும். இதனையும் செய்துவிட்டால், அடுத்த தேர்தலிலும் இந்த ஆட்சியை ஆதரிக்க மக்கள் தயங்க மாட்டார்கள்!

- ஆசிரியர்