நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பயம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருந்தாலே போதும்!

பயம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருந்தாலே போதும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருந்தாலே போதும்!

ஹலோ வாசகர்களே..!

ங்கியில் டெபாசிட் செய்த பணம் இனி திரும்பக் கிடைக்காது எனப் பலரும் தேவையில்லாத வதந்தியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஆர்.பி.ஐ வெளியிட்ட ஓர் அறிவிப்பு மக்களை மேலும் குழப்பி யிருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை பி.சி.ஏ (Prompt Corrective    Action) நடவடிக்கையின் கீழ் கொண்டுவர ஆர்.பி.ஐ செய்த அறிவிப்பு, வங்கிகள்மீது மக்களுக்கு இருக்கும் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது. 

பயம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருந்தாலே போதும்!


 
வாராக் கடன்கள் அதிக அளவில் இருப்பது, வங்கிகள் மூலம் கிடைக்கும் சராசரி வருமானம் குறைவது ஆகிய காரணங்களால் ஒரு வங்கியின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி அபாயமான கட்டத்தை அடையலாம். அந்த நிலையில் வங்கியானது தனது வாராக் கடனைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைதான் பி.சி.ஏ ஆகும். இப்போது பேங்க் ஆஃப் இந்தியாமீது பி.சி.ஏ நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், ஒன்பது வங்கிகள்மீது ஆர்.பி.ஐ ஏற்கெனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

வாராக் கடனை மிகவும் குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்துவதன் மூலமே பி.சி.ஏ போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் சிக்காமல் இருக்க முடியும். ஆனால், வாராக் கடனை எப்படிக் குறைப்பது என்பதே நம்முன் இருக்கும் முக்கியமான கேள்வி. 

கடன் தரும் வங்கி அதிகாரிகள், பெரிய அளவில் கடன் வாங்கும் தொழிலதிபர்கள் ஆகியோர்தான் வங்கிகளுக்கான வாராக் கடன் அதிகரிக்க முக்கியக் காரணம். நம் நாட்டில் யாருக்குக் கடன் தரவேண்டும், யாருக்குக் கடன் தரக்கூடாது என்பதை வங்கி அதிகாரிகள் நேர்மையாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு சில அரசியல்வாதிகள் தலையீடு செய்கின்றனர். அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் வங்கி அதிகாரிகள் எப்போது நேர்மையாகக் கடன் தரமுடிகிறதோ, அப்போதுதான் வாராக் கடனானது குறையும். அதேபோல, தொழில் செய்வதற்காக வங்கியிலிருந்து வாங்கும் கடனை எப்பாடுபட்டாவது திரும்பத் தரவேண்டும் என்கிற எண்ணம் எல்லாத் தொழிலதிபர்களிடமும் வரவேண்டும். கல்விக் கடனோ, வீட்டுக் கடனோ வங்கியில் வாங்கிய கடனைக் கட்டாயம் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடமும் வரவேண்டும். இந்த மூன்று தரப்பினரும் வங்கிக் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தினால் வங்கிகளுக்கு வாராக் கடன் என்கிற பிரச்னையே இருக்காது.

ஒரு வங்கியானது பி.சி.ஏ நடவடிக்கைக்கு உள்ளானாலே திவாலாகிவிடும் என்றெல்லாம் நினைத்து பயப்படாமல், இனி எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் வாராக் கடனைக் குறைத்து, லாபத்தைப் பெருக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொண்டால், வங்கிகள்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நிச்சயம் அதிகரிக்கும். 

  - ஆசிரியர்