##~## |
இயற்கை எரிவாயுவின் விலையை ஒன்றுக்கு இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதுநாள் வரை ஒரு எம்.எம்.பி.டி.யூ.க்கு (மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) 4.2 டாலருக்கு விற்ற இயற்கை எரிவாயுவின் விலை, தற்போது


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
8.4-8.5 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவை தொழில் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. பங்குச் சந்தைகூட இந்த அறிவிப்பினால் நல்ல ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச சந்தையின் விலையைவிட குறைவாக இருப்பதால், அரசின் இந்த முடிவை விமர்சிக்கத் தேவையில்லை என்பது ஒரு தரப்பினரின் வாதம்.
ஆனால், அரசின் இந்த முடிவின் பின்னால் 'அரசியல்’ இருக்கிறது என்ற வாதத்தையும் மறுப்பதற்கில்லை. ஒருசில நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்தி ருக்கிறது. சாதாரண மனிதர்களின் நலனைப் புறந்தள்ளிவிட்டு மத்திய அரசாங்கம் இப்படி ஒரு முடிவை எடுக்கவேண்டுமா என எழுந்துள்ள குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை.
காரணம், அரசின் இம்முடிவினால் மிகப் பெரிய அளவில் பயனடையப்போவது ரிலையன்ஸ்தான். அண்மைக்காலமாக ரிலையன்ஸ் நிறுவனம், கேஜி-6 படுகையில் எரிவாயு கிடைக்கவில்லை என்று கூறியதுகூட இந்த விலையேற்றத்தை எதிர்பார்த்துதானோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அது மட்டுமல்ல, இயற்கை எரிவாயுவின் விலை உயர்ந்தால் மத்திய அரசாங்கத்திற்கு சுமார் 21,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும், உரம் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிக விலை தந்து இயற்கை எரிவாயுவை வாங்கவேண்டியிருக்கும். இதனால், மின்சாரம் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, அரசின் மானியச் செலவும் அநியாயத்துக்கு அதிகரிக்கும். மின்சாரத்துக்கான மானியம் மட்டும் 28,000 கோடியும், உரங்களுக்கான மானியச் செலவு 13,200 கோடியும் அதிகரிக்கும்.
தேர்தலை மனதில்கொண்டு, அரசாங்கம் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக நடக்கும் இந்த காங்கிரஸ் அரசுக்கு மக்கள்தான் தக்க பாடம் புகட்டவேண்டும்.
- ஆசிரியர்.