Published:Updated:

என்றென்றும்!

பசுமை விகடன் 15
(விவசாயிகளோடு)
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன் 15 (விவசாயிகளோடு)

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

பசுமை விகடன் 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘இந்தப் பதினைந்து ஆண்டுகள் குறித்துப் பேசுவதற்கு அதற்குள்ளாக என்ன இருந்துவிடப் போகிறது?’ என்றுதான் தோன்றியது. இந்தச் சிறப்பிதழ் பற்றி ஆசிரியர் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்தபோது, குழுவிலிருக்கும் ஒவ்வொருவரும் பேசப்பேச.... வந்துவிழுந்த ஒவ்வொன்றும் பிரமிப்பைக் கூட்டுவதாகவே இருந்தது.

‘1966 தொடங்கி, 54 ஆண்டுகளாக அரசாங்க எந்திரன்களை வைத்துக்கொண்டு ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் அரசாங்கம் நடத்திவரும் திட்டமிட்டத் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதலைத்தான் கடந்த 14 ஆண்டுகளாகப் பசுமை விகடன் நடத்திக்கொண்டிருக்கிறது!’

‘இயற்கை வேளாண்மையை வீரியமாக விதைத்தது தொடங்கி, அரசாங்கத்தின் அநியாய சட்டத்தைத் தூள்தூளாக்கியது வரை பசுமை விகடனின் களப்பணிகள் ஒவ்வொன்றும் வரலாறே!’

இதையெல்லாம் நினைக்கும்போது... ‘நிச்சயமாக மார்தட்டிக் கொள்ளவேண்டிய விஷயங்களே’ என்கிற தெம்பு தானாகவே வந்து சேர்ந்துகொள்கிறது. 15-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில்! நான்கு தலைமுறைகளாக அடித்து நொறுக்கப்பட்டு மூளையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நம்முடைய பாரம்பர்ய அறிவை மீட்டெடுக்கும் யுத்தத்தை, இந்த ஒரு தலைமுறை யுகத்துக்குள்ளாகவே தமிழகம் கடந்தும் பரவலாக்கியிருக்கிறது பசுமை விகடன் என்பதை, பசுமையால் பயன்பட்டவர்களும் இதற்காகவே வாழ்நாளெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் சொல்லச் சொல்ல... கேட்கக் கேட்க... தெம்புகூடுவது இயல்புதானே!

பசுமை விகடன் 15
(விவசாயிகளோடு)
பசுமை விகடன் 15 (விவசாயிகளோடு)

நேரடியாக விவசாயிகளின் தோட்டம் தேடிச் சென்றதும்... அவர்களுடைய வேளாண் அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள், புதுமுயற்சிகள், கண்டுபிடிப்புகள், பிரச்னைகளுக்கு அவர்களே தேடிக் கண்டெடுத்தத் தீர்வுகள் என்று அனைத்தையும் அறுவடை செய்து, ஆர்வலர்கள் அனைவருக்கும் பகிர்ந்துதான், அனைவர் மனதிலும் பசுமை விகடன் ஆழமாக இடம்பிடிக்க முக்கியக் காரணம்.

வெறுமனே வெற்றிக்கதைகளை மட்டுமே பகிர்ந்துகொண்டிருக்காமல், விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக்கொடுக்கவும் ஆரம்பித்தபோது, உழவர்களின் தோழனாகவும் மாறிப்போனது பசுமை விகடன். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, நீர்ப்பாசனம், கொள்முதல், இன்ஷூரன்ஸ், பேரிடர் நிவாரணம், கடன்பிரச்னை என்று அனைத்து வகைகளிலும் விவசாயிகளுக்குத் தோள்கொடுப்பதை பெருமையோடு என்றென்றும் தொடர்கிறது பசுமை விகடன்.

இப்படி... விவசாயிகளின் தேவைகளை, அவர்களிடமே கேட்டறிந்தும், அவர்களுக்குத் தேவையானவற்றைத் தேடியறிந்தும் கொடுக்க ஆரம்பித்ததுதான், இந்த 14 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு சாதனைகளுக்கு அடிப்படை. ஜீரோபட்ஜெட், இயற்கை வேளாண்மை, பூச்சிமேலாண்மை, பஞ்சகவ்யா, பாரம்பர்ய நெல் ரகங்கள், வேளாண் மன்றச் சட்டம், நீர் மேலாண்மை, இ.எம்- வேஸ்ட் டீ கம்போஸர், காட்டாமணக்கு- ஈமு கோழிகள், நாட்டுமாடுகள், மரம் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், மீத்தேன், மரபணு மாற்றப்பட்ட விதைகள், வேளாண்மையில் இளைஞர்கள் என்று பசுமை விகடனின் சாதனைகளாக 15 விஷயங்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் இந்த இதழில் நெகிழ்ந்திருக்கிறார்கள் பயன்பாட்டாளர்களும் செயற்பாட்டாளர்களும்!

கூடவே, ‘இந்த பதினைந்து மட்டும்தானா... இல்லையில்லை இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கின்றன’ என்று பலவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

‘‘விவசாயிகளை மேடையில் அமர வைத்து, விவசாயத் துறை அதிகாரிகளை மேடைக்கு எதிரே அமர வைத்து, ஒற்றை நாற்று நடவு பற்றி ஈரோட்டில் பசுமை விகடன் பயிற்சி கொடுத்தபோது, ‘விவசாயத்துக்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது’ என்று அன்றைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பெருமை பொங்கக் குறிப்பிட்டது... குறிப்பிடத்தக்க சாதனையல்லவோ!’’

‘‘மூட்டைக்கு இத்தனை ரூபாய் என்று கட்டாயமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களை, ‘குத்தூசிக் கொள்ளையர்கள்’ என்கிற பெயரில் தோலுரித்த பிறகுதானே, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகப் பணத்தை வரவு வைக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இது சாதனையில்லையா!’’

‘‘இன்னும் சிறுதானிய பெருமை, இயற்கை அங்காடிகள், செக்கு எண்ணெய், நாட்டுக்கோழி, மதிப்புக்கூட்டல், பிற மாநிலங்களுக்கும் சென்று இயற்கை விவசாய பயிற்சி...’’ என்று பசுமை விகடனை விடாமல் பின்தொடரும் உழவர்களும் இயற்கை ஆர்வலர்களும் சொல்லச் சொல்ல... பிரமிப்பு மேலும்மேலும் கூடவே செய்கிறது. வழக்கம்போல... பொறுப்பும் அதிகரிக்கவே செய்கிறது.

அதேபோல... சாதனைகள் என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும்... தீராத வேதனைகளின் பட்டியல் கவலை சூழவைக்கத் தவறவில்லை. குறிப்பாக, சுதந்திர காலம் தொடங்கி இன்று வரையிலும் அரசாங்க போர்வையைப் போர்த்திக்கொண்டு, ‘விவசாய காவலர்கள்’ என்கிற பெயரில் விவசாயிகளுக்குத் துரோகமிழைப்பது தொடர்கதையாகவே இருப்பது, பெருங்கவலையே! என்றாலும், வழக்கம்போல இணைந்தே இருப்போம் ஓர் இயக்கமாக... துணிந்தே இருப்போம் என்றென்றும்!

-ஆசிரியர்