Published:Updated:

இலக்கு நிர்ணயிப்பதுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இலக்கு நிர்ணயிப்பதுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பு 100 பில்லியன் டாலராக (ஏறக்குறைய ரூ.7,50,000 கோடிக்கு மேல்) இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென் மண்டல அளவில் சிறப்பாகச் செயல்பட்ட ஏற்றுமதியாளர் களுக்கான விருதுகளைத் தந்து பேசிய அவர், இந்த இலக்கை நிர்ணயித்திருக்கிறார்.

ஏற்றுமதித் துறையில் தமிழகம் ஏற்கெனவே முன்னணியில்தான் உள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டில் 26 பில்லியன் டாலர் (ரூ.1,93,000 கோடி) அளவுக்கு ஏற்றுமதி செய்து, இந்தியாவின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மகா ராஷ்ட்ராவும், குஜராத்தும் நம்மைவிட சிறப்பாக ஏற்றுமதி செய்து வருகின்றன.

ஆனால், ஏற்றுமதிக்கான வாய்ப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இருக்கிறது. தமிழகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம், விவசாயம். முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளபடி, புவிசார் குறியீடு பெற்ற பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு மட்டுமே கணிசமான அளவில் இருக்கிறது. பழனி பஞ்சாமிர்தத்தையும், வில்லிபுத்தூர் பால்கோவையும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையுடன் பல லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தமிழர்கள், இந்தியர்களைத் தாண்டி, பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த மக்களும் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை வாங்க நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். தமிழகத்திலிருந்து உற்பத்தியாகும் இந்தப் பொருள்களை பிராண்டாக மாற்றி விற்பனை செய்தால், உலக மக்களின் நெஞ்சங்களை நிச்சயம் கொள்ளை கொள்ளலாம்.

உற்பத்தி மற்றும் சேவைத் துறையிலும் நமது மாநிலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. கார் தயாரிப்பதில் தொடங்கி, ஜவுளி ஏற்றுமதி வரை பொருள்களைத் தயாரிப்பதில் நம் மக்களுக்கு இருக்கும் தொழில்நுட்ப அறிவு பெருமைபடத்தக்கது. அதே போல, சேவைத் துறையிலும் நமக்கு இருக்கும் பல வாய்ப்புகளை நாம் இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், மெடிக்கல் டூரிஸம்.

இப்படி பல்வேறு பாசிட்டிவ் அம்சங்கள் நம் மாநிலத்தில் இருந்தாலும், சரியான திட்டமிடலும் சர்வதேச வணிக அணுகுமுறையும் இல்லாததால்தான் நாம் இன்றைக்கும் ஏற்றுமதித் துறையில் சற்று பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலையிலிருந்து மீண்டு வர உதவுகிற மாதிரி, முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது 100 பில்லியன் டாலர் என்கிற இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார்.

ஆனால், இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே போதாது. அந்த இலக்கைச் சென்றடையும் திட்டமிடல் சரியாக இருக்க வேண்டும். ஏற்றுமதி வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும். இந்தத் துறையில் நாம் அடையும் வளர்ச்சி வேகம் ஒவ்வொரு மாதமும் ஆராய்ந் தறியப்பட வேண்டும். சுருக்கமாக, ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவின் திட்டமிட்ட செயல்பாடுகளைப் போல, நமது மாநிலமும் செயல்பட்டால், ஏற்றுமதித் துறையில் நம் மாநிலம் முதலிடத்தில் இருக்கும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்குமா?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism