Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2020

மோட்டார் விகடன் விருதுகள் 2020
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் விகடன் விருதுகள் 2020

இந்த ஆண்டு மோட்டார் விகடன் விருது வாங்க இருக்கும் கார்/பைக்ஸ் இதோ!

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இந்த ஆண்டு மோட்டார் விகடன் விருது வாங்க இருக்கும் கார்/பைக்ஸ் இதோ!

Published:Updated:
மோட்டார் விகடன் விருதுகள் 2020
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் விகடன் விருதுகள் 2020

து விருதுகள் காலம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த கார்கள் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள், ஒப்பீடுகள், ஃபர்ஸ்ட் ரைடு, டிராவல் என எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி, அதில் சிறந்த வாகனங்களுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நேரம். மோட்டார் விகடன் ஆசிரியர் குழு மற்றும் நிபுணர்கள் விருதுகளுக்கான கார்/பைக்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த ஆண்டு மோட்டார் விகடன் விருது வாங்க இருக்கும் கார்/பைக்ஸ் இதோ!

மோட்டார் விகடன் விருதுகள் 2020
மோட்டார் விகடன் விருதுகள் 2020

நம்முடைய விருதுப் பட்டியலைச் சரியாகக் கணித்த பரிசுபெறும் வாசகர்கள்: வி.மோகன்ராஜ், ராமன் லக்ஷ்மண், நரேந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறந்த கார் - கியா செல்ட்டோஸ்

‘அடிச்சான் பார்யா முதல் பால்லயே சிக்ஸர்’ - முதல்வன் படத்தில் அர்ஜுனைப் பார்த்து மணிவண்ணன் சொல்லும் இந்த வசனம், கியாவின் செல்ட்டோஸுக்கு அப்படியே பொருந்தும். ஆகஸ்ட் 2019 மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த மிட்சைஸ் எஸ்யூவி, ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் யுட்டிலிட்டி வாகனங்களில் தவிர்க்க முடியாத தயாரிப்பாக மாறிவிட்டதில் ஆச்சர்யம் இல்லை.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

க்ரெட்டாவின் தனி ஆவர்த்தனத்தை முறியடித்திருக்கும் செல்ட்டோஸ், 18 வேரியன்ட்கள் - 3 BS-6 இன்ஜின்கள் (1.5 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர் டீசல்/1.4 லிட்டர் டர்போ பெட்ரோல்) - 3 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் (MT, CVT, DCT) - 2 ஸ்டைலிங் ஆப்ஷன்கள் (GT Line, Tech Line) என வெரைட்டியாக வந்ததும், அதன் அசுரத்தனமான வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. (60,000-க்கும் அதிகமான கார்கள் புக் ஆகிவிட்டன).

ஐரோப்பிய கார்களைப்போலத் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, சிறப்பான பர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல், மனநிறைவைத் தரும் இன்ஜின் ரிஃபைன்மென்ட் மற்றும் கையாளுமை என அசத்தியது. மேலும் தரமான கேபின், வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்திலும் எகிறியடித்தது. இதனுடன் ப்ரீமியம் டிசைன் மற்றும் கட்டுபடியாகக்கூடிய விலை சேரும்போது, இந்த விருதுக்கான முழுத் தகுதியை கியா செல்ட்டோஸ் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250

ஆட்டோமொபைல் துறையின் தேக்க நிலைக்கும் மாற்றங்களுக்கும் இடையே, 2019-ம் வருடத்தில் தனித்தன்மையோடு பல பைக்குகள் விற்பனைக்கு வந்தன. இதில், சிறந்த பைக் எது என்பதற்கான தேடல், மிகப் பெரிய சவாலாக இருந்தது.

தினசரிப் பயன்பாட்டுக்கும், வீக்எண்ட் ரைடுக்குமான சராசரி மைலேஜ், ரைடிங்கை உற்சாகம் ஆக்கக்கூடிய பர்ஃபாமன்ஸ், ப்ரீமியம் வசதிகள், ஸ்போர்ட்டி டிசைன், விலைக்கேற்ற தரம், விற்பனை, தொழில்நுட்பம் என சிறந்த பைக்கைத் தேர்ந்தெடுக்க சில செக்லிஸ்ட்டை உருவாக்கியிருந்தோம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இந்த செக்லிஸ்ட்டில் அதிகப்படியாக டிக் அடிக்கப்பட்ட பைக், ஜிக்ஸர் SF 250. தேர்வுக்குழுவிலும், மக்கள் மத்தியிலும்கூட அதிக ஓட்டுகள் வாங்கிய பைக் இதுவே. BS-6 இன்ஜின் மட்டும் விட்டுப்போயிருந்தாலும், பைக் வாங்க விரும்பும் எல்லோரையும், ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்த்துவிடுகிறது ஜிக்ஸர் SF 250. இன்னும் சிம்பிளாகச் சொல்லவேண்டும் என்றால், ஜிக்ஸர் ரைடர்களுக்கான/ஆர்வலர்களுக்கான பைக்.

சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி - மஹிந்திரா XUV3OO

ஸாங்யாங் நிறுவனத்தின் டிவோலி கார்தான் XUV 300-வின் இன்ஸ்பிரேஷன். இதை காம்பேக்ட் எஸ்யூவியாக மாற்றியதில் மஹிந்திராவின் பங்கு அளப்பரியது. இதனால் பின்பக்க இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் கொஞ்சம் குறைவாகத் தெரிந்தாலும், 5 பேர் உட்காருவதற்கான அகலத்தைக் கொண்டிருக்கிறது XUV300. பிப்ரவரி 2019 மாதத்தில் வெளியான இந்த கார், தனது வகையிலேயே அதிக டார்க்கைத் தரும் ஸ்மூத்தான இன்ஜின்களைக் கொண்டிருந்தது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதில் பெட்ரோல் இன்ஜின் BS-6 வெர்ஷனில் வந்துவிட்டதுடன், டீசல் மாடலில் AMT ஆப்ஷனும் கிடைக்கிறது. எடை குறைவான மோனோகாக் சேஸி - ஸ்டீயரிங்குக்குக்கூட மோடுகள் - கச்சிதமான சஸ்பென்ஷன் செட்அப் ஆகியவை இதை எல்லோருக்குமான கார் ஆக்குகின்றன. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் விலை அதிகமாகத் தோன்றினாலும், அதிகப்படியான வசதிகளுடன் அந்தக் குறையைச் சரிக்கட்டிவிட்டது மஹிந்திரா.

ரீடர்ஸ் சாய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி - ஹூண்டாய் வென்யூ

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் லேட்டாகவே நுழைந்தாலும், லேட்டஸ்ட்டாக கோதாவில் குதித்தது ஹூண்டாய். விற்பனையில் டாப்பராக இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு வென்யூ கடும் சவால் அளித்தது (80 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் புக் ஆகிவிட்டன). இந்த கார் பார்க்கச் சிறிதாகவே காட்சியளித்தாலும், வசதிகளின் பட்டியல் மிக நீளம்; BlueLink கனெக்ட்டிவிட்டி அதற்கான உதாரணம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

1.2 பெட்ரோல்/1.4 லிட்டர் டீசல்/1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்கள் காரணமாக, அவரவர் தேவைக்கேற்றபடி காரை வாங்க முடிந்தது ப்ளஸ். அதுவும் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான DCT ஆப்ஷன் இருந்தது வரவேற்கத்தக்க அம்சம். இன்ஜின்களின் பர்ஃபாமன்ஸ் - ஓட்டுதல் அனுபவம் - வசதிகள் எல்லாமே மனநிறைவைத் தந்தது. நாங்கள் இதைச் சொல்லவில்லை; வென்யூ உரிமையாளர்களின் ஸ்டேட்மென்ட் இது.

எஸ்யூவி ஆஃப் தி இயர் - எம்ஜி ஹெக்டர்

‘இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்’ என்ற பெருமையைத் தாண்டி, போட்டி கார்களில் இல்லாத டர்போ பெட்ரோல் இன்ஜின் - ஹைபிரிட் கூட்டணி மற்றும் ஃபியட்டின் பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் என இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் அதிரடி வேற லெவல். ஜூன் 2019-ல் குறைவான விலையில் வந்த ஹெக்டர், மளமளவென 40 ஆயிரம் புக்கிங்குகளைக் கடந்துவிட்டது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதனால் இடையே காரின் புக்கிங்கை நிறுத்தவேண்டிய சூழலுக்கு எம்ஜி தள்ளப்பட்டது என்பதுடன், பிப்ரவரி 2020 வரை இந்த மிட்சைஸ் எஸ்யூவி Sold Out என்பதே இதன் வெற்றிக்குச் சாட்சி. அற்புதமான ரோடு பிரசன்ஸ், சொகுசான கேபின், நிறைய வசதிகள், இன்ஜின் பர்ஃபாமென்ஸ், அதிக கி.கிளியரன்ஸ், மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக அசத்தும் ஹெக்டர், இந்த ஆண்டுக்கான சிறந்த எஸ்யூவிக்கான விருதைத் தட்டிச் செல்கிறது.

டிசைன் ஆஃப் தி இயர் - டாடா ஹேரியர்

‘நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கேன்’ - ஹேரியரின் தோற்றத்தைத் தீர்மானிக்கும்போது டாடாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருந்திருக்குமோ? பின்னே... லேண்ட்ரோவரின் டிஸ்கவரி ஸ்போர்ட் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டுதான் ஹேரியர் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றால் சும்மாவா! இதனாலேயே காருக்குத் தானாகவே ஒரு கட்டுமஸ்தான எஸ்யூவி உணர்வு வந்துவிட்டது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இந்த மிட்சைஸ் எஸ்யூவி, தரம் - வசதிகள் - ஓட்டுதலில் ஸ்கோர் செய்தது. அதை விடுங்கள்; எஸ்யூவி என்றால், அதன் முதல் கவர்ச்சி டிசைனில்தானே இருக்க வேண்டும்? அதில் சொல்லியடித்துவிட்டது ஹேரியர். டிசைனுக்காகவே ஒரு விருது கொடுக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது என்றால், அது ஹேரியராகத்தான் இருக்கும். மாடர்னான Impact 2.0 டிசைன் கோட்பாடுகளின் வடிவமைக்கப்பட்ட ஹேரியர்தான், டிசைன் ஆஃப் தி இயர் விருதினைப் பெறும் கார்.

ப்ரீமியம் செடான் ஆஃப் தி இயர் - ஹோண்டா சிவிக்

ஒரு செடானுக்கு கார் ஆர்வலர்கள் நீண்ட நாள்களாகக் காத்திருந்த வைபவம்.... அநேகமாக வேறு எந்த காருக்கும் கிடைத்திருக்காது. அப்படி 10-வது தலைமுறை சிவிக், செம கெத்தாக மார்ச் 2019 மாதத்தில் கம்பேக் கொடுத்தது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

வழக்கமான 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (அப்டேட் செய்யப்பட்டது) - CVT தவிர, இம்முறை 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு MT கூட்டணியும் வந்தது பெரிய ப்ளஸ். முந்தைய மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்பதால், புதிய மாடலில் அது திருத்தப்பட்டு விட்டது. Lane Watch Camera போன்ற லேட்டஸ்ட் வசதிகளுடன், ஸ்போர்ட்ஸ் கூபே போன்ற டிசைனுடன் கவர்ந்திழுக்கிறது சிவிக். வசதிகள், தோற்றம், பர்ஃபாமன்ஸ் என எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, இந்த ஆண்டின் ப்ரீமியம் செடானுக்கான விருது, நிச்சயம் சிவிக்குக்குத்தான்.

காம்பேக்ட் ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர் - மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோ

அறிமுகமான 10 நாள்களிலேயே 10,000 கார்கள் புக் செய்யப்பட்டது என்றால், அது மாருதி சுஸூகியின் எஸ்-ப்ரஸ்ஸோவாகத்தான் இருக்கும். காரின் பாக்ஸ் போன்ற தோற்றம், சிறிய கேபினில் இடவசதியை அதிகரிக்கப் பயன்பட்டிருக்கிறது. இதனுடன் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்ற மாடர்ன் அம்சங்கள் சேரும்போது, இன்டீரியரை லைக் செய்யத் தோன்றுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

1.0 லிட்டர் K-சீரிஸ் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் காம்போவுக்கு ஹார்ட்டின் கொடுக்கலாம். AMT ஆப்ஷன் இருப்பதும் புத்திசாலித்தனம். முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் எஸ்-ப்ரஸ்ஸோதான், இந்த ஆண்டின் பெஸ்ட் காம்பேக்ட் ஹேட்ச்பேக்.

ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர் - ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

லேட்டஸ்ட் டிசைனுடன் ப்ரீமியம் வசதிகளையும் கொண்டு வருவதில் ஹூண்டாய் செமையாக ஸ்கோர் செய்யும். கிராண்ட் i10 நியோஸ் இதற்குச் சாட்சி. பூமராங் வடிவ LED DRL, கறுப்பு நிற C-பில்லர் என ஸ்போர்ட்டி அம்சங்களும் காரில் எட்டிப் பார்த்தது ஹைலைட்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

`9 லட்ச ரூபாய்க்கு ஒரு ஹேட்ச்பேக் வாங்கணுமா’ என்பவர்களை நிச்சயம் திருப்திப்படுத்துகிறது நியோஸ். Driver Rear View Monitor, வயர்லெஸ் சார்ஜிங், MID உடனான அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை அதில் சாம்பிள். BS-6 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனைக் கொண்டிருந்த கிராண்ட் i10 நியோஸில், டீசல் மாடலில் AMT ஆப்ஷன் சேர்க்கப்பட்டிருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக். இதன் ஓட்டுதல் அனுபவமும் அற்புதம். விலையும் ‘Icing On The Cake’ ரகம். இந்த ஆண்டின் பெஸ்ட் ஹேட்ச்பேக் - நிச்சயம் நியோஸ்தான்.

எம்பிவி ஆஃப் தி இயர் - ரெனோ ட்ரைபர்

க்விட் மூலமாக மைக்ரோ எஸ்யூவி போன்ற கார்களை உருவாக்க முடியும் என்பதை உணர்த்திய ரெனோ, ட்ரைபரிலும் ஒரு சாதனை செய்திருக்கிறது. 4 மீட்டருக்குள் 7 சீட்டரை அசால்ட்டாகச் செய்ததிலேயே ட்ரைபரின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. விலையும்தான். ஒரு ஹேட்ச்பேக்கின் விலையிலே ஒரு எம்பிவியை வாங்க முடியும் என்பது உண்மையிலேயே வாவ்!

மோட்டார் விகடன் விருதுகள் 2020

அதோடு, லேட்ட்ஸ்ட் கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - ரிவர்ஸ் கேமரா - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - புஷ் பட்டன் ஸ்டார்ட் - ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் - அலாய் வீல்கள் - B-பில்லரில் ஏசி வென்ட்கள் - எலெக்ட்ரிக் மிரர்கள் - LED DRL - Defogger உடனான ரியர் வைப்பர் - 4 காற்றுப்பைகள் - கூல்டு க்ளோவ்பாக்ஸ் - ரூஃப் ரெயில் என... அடேங்கப்பா! இதோடு ஓட்டுதல் அனுபவமும் இடவசதியும் சேர்ந்து கொண்டதும் ட்ரைபரை வெற்றியாளராக்குகிறது. (BS-6 டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் AMT எப்போ வரும்?)

எலெக்ட்ரிக் கார் ஆஃப் தி இயர் - ஹூண்டாய் கோனா

‘25-30 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் காரா? சார்ஜிங் பாயின்ட் எங்க இருக்கு?’ எனப் பல கேள்விகள், ஹூண்டாய் கோனாவுக்கு முன்பாக இருந்தன. ஆனால் கோனாவை 300-க்கும் அதிகமானோர் புக் செய்திருப்பதுடன், மத்திய அரசும் (EESL) தன் பங்குக்கு இந்த கார்களை முன்பதிவு செய்திருக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

வழக்கமான கார்களின் ரன்னிங் காஸ்ட்டில் 20%தான் ஆகும். அதேபோல, ஒரு எலெக்ட்ரிக் காரில் மைனஸாக இருக்கக் கூடிய ரேஞ்ச் மற்றும் வேகம் பற்றிய கவலை இதில் இல்லை. எனவே கோனா முதலில் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும், அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது இதைச் சரிக்கட்டி விடலாம். தவிர, ஹூண்டாயின் ஸ்டைலான டிசைன் மற்றும் அதிக வசதிகள், இங்கேயும் தொடர்கின்றன. மார்க்கெட்டில் இன்னும் எலெக்ட்ரிக் ஷாக் அடிக்க அடித்தளம் இட்டிருக்கும் கோனாவுக்கு வாழ்த்துகள்!

லக்ஸூரி எம்பிவி ஆஃப் தி இயர் - மெர்சிடீஸ் பென்ஸ் V-க்ளாஸ்

‘V - க்ளாஸ், ஒரு மினி வேன் டிசைன்தான். ஆனால், எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ப்ரீமியமாகவே உள்ளது. 6/7 சீட்டராகவே இருந்தாலும், அது வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் இருந்தே புதுமை தொடங்குகிறது. கேபின், செம சொகுசாகவும் லக்ஸூரி வசதிகளுடனும் ஈர்க்கிறது. பெரிய காராக இருந்தாலும், புல் லோடில் சிக்கலின்றி இயங்குகிறது இதன் 2.0 லிட்டர் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி. (0 - 100 கி.மீ வேகம் - 11 விநாடிகள்).

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதில் LWB மற்றும் 7 சீட் ஆப்ஷன் தவிர, Elite எனும் டாப் வேரியன்ட் உண்டு. இது எக்ஸ்ட்ரா லக்ஸூரி விரும்பிகளுக்கானது. ஓட்டுதல் அனுபவத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கும் V-க்ளாஸ், விலை விஷயத்திலும் எகிறியடிப்பது உண்மைதான். ஆனால் பென்ஸ் லோகோவுக்காகவே விலையெல்லாம் ஒரு விஷயமே இல்லை எனலாம்.

லக்ஸூரி கார் ஆஃப் தி இயர் - பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

கிட்டத்தட்ட 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்த 7-வது தலைமுறை 3 சீரிஸுக்கு அதிகப் பொறுப்பு இருந்தது. ஆகஸ்ட்டில் வெளியான இந்த லக்ஸூரி 3 சீரிஸ் - நீட் & ஸ்போர்ட்டி டிசைன், மாடர்ன் & சொகுசான கேபின், எக்கச்சக்க வசதிகள், பவர்ஃபுல் & ஸ்மூத் டீசல் இன்ஜின், அற்புதமான ஓட்டுதல் அனுபவம் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாகச் சொல்லியடித்தது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இன்னும் ஸ்போர்ட்டியான ஓட்டுதல் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கு, பெட்ரோல் இன்ஜின் உடனான M Sport இருக்கிறது. பெ/டீ இரண்டுமே 7 விநாடிகளுக்குள்ளாகவே 100 கி.மீ வேகத்தை எட்டிவிடக்கூடிய திறனைத் தன்வசம் வைத்துள்ளன. ‘ஒரு சொகுசான லக்ஸூரி கார் ஸ்போர்ட்டியாகவும் இருக்கலாம்’ - இதுதானே பிஎம்டபிள்யூவின் பலம். 3 சீரிஸ் இதற்கு நல்ல உதாரணம்.

ஃபேஸ்லிஃப்ட் ஆஃப் தி இயர் - இசுஸூ D-மேக்ஸ் V-க்ராஸ்

குறைவான அளவுதான் விற்பனை; ஆனால் இசுஸூவுக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. D-மேக்ஸ் V-க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டைப் பார்த்தால் இன்னும் ஆசை கூடுகிறது. ‘அதிக மாற்றம் இருந்தால் விலை இன்னும் கூடும்; மாற்றம் கொஞ்சமானால் விற்பனையும் குறையும்.’

மோட்டார் விகடன் விருதுகள் 2020

- இதில் கவனமாக இருந்த இசுஸூ, 2019 நடுவில் இதை ஃபேஸ்லிஃப்ட் செய்தது. சிறிய, ஆனால் பவர்ஃபுல் 1.9 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியை வழங்கியதிலேயே பாதி வெற்றி கிடைத்து விட்டது இசுஸூவுக்கு. மேலும் டிசைனில் மாற்றங்கள், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள், புதிய சிறப்பம்சங்கள் என D-மேக்ஸ் V-க்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட்டை, பக்காவான பேக்கேஜாக மாற்றி அசத்தியிருக்கிறது இசுஸூ.

சிறந்த கம்யூட்டர் பைக் - பஜாஜ் பிளாட்டினா H கியர்

கம்யூட்டிங் போட்டிக்கு, பிளாட்டினா 110 H கியர், ஸ்ப்ளெண்டர் i-smart BS-6, பல்ஸர் 125 நியான், ஷைன் SP 125 BS-6 என நான்கு பைக்குகள் இருந்தன. கம்யூட்டிங் என வரும்போது, குறைவான தூரங்களில் மட்டுமே அதிக நேரம் பைக் ஓட்ட வேண்டியது வரும்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

அதில் குடும்பத்தோடு கடைவீதிக்குப் போவது முதல் லோடு ஏற்றுவது வரை நடக்கும். இதில் கம்யூட்டர்களுக்கு, பயன்பாட்டைவிட மைலேஜ் - விலை ரொம்பவே முக்கியம். முதல்முறையாக பைக் வாங்குபவர்களை பல்ஸர் ஈர்த்தாலும் - மைலேஜ், சொகுசு, சர்வீஸ் விஷயத்தில் பிளாட்டினாவுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அது மட்டுமில்லை... பல்ஸர் போலவே பிளாட்டினாவும் 5 கியருடன் வந்துவிட்டது. இந்தப் போட்டியின் வின்னர் பிளாட்டினா H கியர்தான்.

சிறந்த எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர் - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S

முதல்முறை பைக் வாங்கும் இளைஞர்கள்தான், இந்த எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர் செக்மென்ட்டின் வாடிக்கையாளர்கள். இதில் புதுவரவு கேடிஎம் டியூக் 125 / RC 125. பர்ஃபாமன்ஸ், தரம், வசதிகளில் இவை சிறப்பாக இருந்தாலும், அதன் விலை கொஞ்சம் ஏமாற்றத்தில் தள்ளிவிடுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

FZ, ஜிக்ஸர் பைக்குகளின் பர்ஃபாமன்ஸ் - கேடிஎம் உடன் ஒப்பிடும்போது ஓகே! கிட்டத்தட்ட இந்த இரு பைக்குகளுக்கு நிகரான விலையில், கேடிஎம்-மைவிட அதிக பர்ஃபாமன்ஸ் தவிர, ஃபுல் ஃபேரிங் மற்றும் புளூடூத் க்ளஸ்டர் வைத்து வருகிறது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S. இது மைலேஜிலும் பெஸ்ட்தான். எனவே, இந்த செக்மென்ட்டில் எந்த எதிர்க்கருத்தும் இல்லாமல் வெற்றி பெற்ற பைக் இதுதான்.

சிறந்த மிட்சைஸ் பைக் - பெனெல்லி இம்பீரியல் 400

இந்த ஆண்டு மிட்சைஸ் பைக் செக்மென்ட்டில் தான் கடும்போட்டி. பெனெல்லி, ஜாவா ஆகியோர், விருதுக்காகக் கைவசம் மூன்று பைக்குகளையும், ஹோண்டா CB300 பைக்கையும் வைத்திருந்தார்கள். வசதிகள், பர்ஃபாமன்ஸ், தரம், ரைடிங் அனுபவம் என அள்ளிக் கொடுத்தன எல்லாம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

புதிதாக வந்த கேடிஎம் 790-ம் இதில் சேர்த்தி. ஆனால், இந்த விருதைத் தட்டிச்செல்லத் தகுதியான பைக் என எல்லோரும் தேர்ந்தெடுத்தது, பெனெல்லி இம்பீரியல் 400. ஜாவா, RE-க்குப் போட்டியாக வந்துள்ள இந்த பெனெல்லி, மேக் இன் இந்தியாவாக எல்லாவற்றிலும் ஈர்க்கும்படியாக வந்துள்ளது இந்த பைக். தற்போது பைக்கின் முன்பதிவுகள் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன என்பது, இதன் மீதான வரவேற்பை உணர்த்துகிறது.

சிறந்த அட்வென்ச்சர் பைக் - ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

இந்திய பைக் சந்தையில் ஹீரோ இம்பல்ஸ் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. அதன் வாரிசான எக்ஸ்பல்ஸ் 200, ட்ரையம்ப், பிஎம்டபிள்யூ போன்ற பெரிய அட்வென்ச்சர் பைக்குகளுக்கு மத்தியில், ஒன்றே கால் லட்சம் ரூபாயில் நீங்கள் அட்வென்ச்சர் ரைடிங் செய்யலாம் என்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இம்பல்ஸின் எல்லா குறைகளையும் பூர்த்தி செய்துவிட்டு, அதன் தகுதியான வாரிசாக வந்திருக்கிறது எக்ஸ்பல்ஸ். பெரிய இன்ஜின், பர்ஃபெக்ட்டான எர்கானமிக்ஸ், சிட்டி கம்யூட்டிங்குக்கு ஏற்ற மைலேஜ் என பாக்கெட்டுக்கு அடக்கமான எக்ஸ்பல்ஸ் மாடல்தான், 2020-ன் சிறந்த அட்வென்ச்சர் பைக்.

சிறந்த ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா 125

இந்தியாவில் பைக்குகளின் விற்பனையை இப்போது ஸ்கூட்டர்களின் விற்பனை ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறது. சிறந்த ஸ்கூட்டர் போட்டிக்கு இம்முறை ப்ளெஷர் ப்ளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஏப்ரிலியா ஸ்டார்ம், ஆக்டிவா 125 ஆகியவை போட்டியிட்டன.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதில் அதிக வாக்குகளைப் பெற்று சிறந்த ஸ்கூட்டர் எனத் தேர்வாகியிருப்பது ஹோண்டாவின் ஆக்டிவாதான். `இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்’ என்ற பெருமை தவிர, அதிக வசதிகள் மற்றும் போதுமான பவர் உடன் வந்திருக்கும் இதன் ரைடு ரிப்போர்ட், 54-ம் பக்கத்தில். போட்டியாளர்களைவிட முன்னோக்கிச் சிந்தித்து, சரியான நேரத்தில் BS-6 இன்ஜினைக் கொண்டுவந்துள்ளது ஹோண்டா. அதற்கான அங்கீகாரம்தான் இது.

சிறந்த ஃபேஸ்லிஃப்ட் - பஜாஜ் டொமினார் 2019

பஜாஜ் பைக்குகளில் விலை உயர்ந்த பைக்காக இருக்கும் டொமினாரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்தது. வெறும் டிசைன் மாற்றங்கள் மட்டுமில்லாமல், கிட்டத்தட்ட ஒரு ஜெனரேஷன் மாற்றமாகவே அது இருந்தது. அடிப்படை டிசைன் அதேதான் என்றாலும் புது நிறங்கள், பவர்ஃபுல் இன்ஜின், கூடுதல் ஸ்மூத்னெஸ், USD ஃபோர்க் எனச் சில வசதிகளும் இணைந்திருந்தன.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதெல்லாம் சேர்த்த பின்பும்கூட, டொமினார்தான் இந்த செக்மென்ட்டின் விலை குறைவான பைக்காக இருக்கிறது என்பது இதற்கு இன்னும் வலுச் சேர்க்கும் விஷயம்தான். கடந்த ஆண்டின் சிறந்த ஃபேஸ்லிஃப்ட் என்ற பெயருக்கு ஏற்ற ஒரே பைக், பஜாஜின் டொமினார் 2019 மாடல்தான்.

சிறந்த போன் - ரியல்மீ XT

18,999 ரூபாய் விலைக்கு நான்கு கேமராக்கள், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் எனப் பார்த்ததும் கவரும் வசதிகளுடன் வந்திருந்தது ரியல்மீ XT.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

கொடுக்கும் விலைக்கு முழுமையான ஒரு ஸ்மார்ட்போனாக இது அமைந்தது செம! இந்த போன் மூலமாக, மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் ரெட்மியை பரபரவென ஓவர்டேக் செய்தது மட்டுமல்லாமல், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை நிறுவியிருக்கிறது ரியல்மீ. 64MP கேமரா, AMOLED டிஸ்ப்ளே இதன் துருப்புச்சீட்டு.

பட்ஜெட் மொபைல் - ரெட்மி 8

இப்போது மிட்-ரேஞ்ச் பிரிவில்தான் அதிக மொபைல்கள் விற்பனையாகின்றன. அப்படி இருந்தும் கவனத்தைக் கைவிடாமல், மக்களைக் கவர ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயத்தை வைத்திருக்கிறது ரெட்மி.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

அப்படி மக்களைக் கவர்ந்த ஒரு போன்தான் ரெட்மி 8. நல்ல பில்டு குவாலிட்டி, நீடித்த பேட்டரி லைஃப் என முக்கிய பாக்ஸ்களை டிக் அடிக்கும் ரெட்மி 8, இந்த விலையில் மேம்பட்ட USB-C போர்ட்டை எடுத்து வந்தது சிறப்பு. இதனால் 'விளம்பரம் வர்றதுதாங்க பயம்... மத்தபடி ரெட்மிதான் மாஸ்' என்ற மக்களின் மைண்ட் வாய்ஸ் இந்த ஆண்டும் தொடர்ந்திருக்கிறது.

ப்ரீமியம் மொபைல் - ஒன்ப்ளஸ் 7 ப்ரோ

முதல் முறையாக 50,000 ரூபாய் விலையில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட முதல் போன் 7 ப்ரோதான். பாப்-அப் செல்ஃபி கேமரா, 90 Hz ஃபுல் டிஸ்ப்ளே என பல புதிய விஷயங்களை எடுத்து வந்தது 7 ப்ரோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2020

இதன் வருகைக்குப் பின்புதான், ப்ரீமியம் போன் என்றாலே 90 Hz டிஸ்ப்ளே இருக்கவேண்டும் என்பது சட்டமானது. மூன்று லென்ஸ்களுடன் கேமராவிலும் வெரைட்டி காட்டியதால் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் போன்களையும் ஓரம்கட்டி, இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ.