Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

கூட்டுப் பயிற்சி முகாம்
பிரீமியம் ஸ்டோரி
கூட்டுப் பயிற்சி முகாம்

25-26 வயதுக்குப் பிறகுதான் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவே எனக்குக் கிடைத்தது, இதுபோன்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய கற்றுக்கொள்ளுங்கள்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

25-26 வயதுக்குப் பிறகுதான் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவே எனக்குக் கிடைத்தது, இதுபோன்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய கற்றுக்கொள்ளுங்கள்

Published:Updated:
கூட்டுப் பயிற்சி முகாம்
பிரீமியம் ஸ்டோரி
கூட்டுப் பயிற்சி முகாம்

நூற்றாண்டை நெருங்கும் விகடன் குழுமத்தின் பெருமைமிகு முன்னெடுப்புகளில் ஒன்று மாணவப் பத்திரிகையாளர் திட்டம். இன்றைய அச்சு, இணைய ஊடகங்கள் தொடங்கி சினிமா, இலக்கியம், அரசு நிர்வாகம் எனப் பல துறையிலும் உயர்ந்து சிறக்கும் பலரின் பயணம் இந்தத் திட்டத்திலிருந்தே தொடங்கியது. 2022-23-ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு 2,416 விண்ணப்பங்கள் வந்தன. பலகட்ட தேர்வுகளுக்குப் பின்னர் 56 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.இவர்களுக்கான கூட்டுப்பயிற்சி முகாம், சென்னையில் ஜூலை 30, 31 ஆகிய நாள்களில் நடந்தது. தொடக்க நிகழ்வாக விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், மாணவ நிருபர் படையை வரவேற்றுப் பேசினார். திட்ட காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், களத்தில் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை அவர் வழங்கினார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

அடுத்ததாக, ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் ‘நியூஸ் மினிட்’ செய்தி ஊடகத்தின் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அகமது உரையாடினார். ஒரு செய்தியின் தொடக்கப் புள்ளியாக இருப்பது எது, அதை எப்படிக் கண்டடைவது என்பதில் தொடங்கி இன்றைக்கு பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்து விரிவாக உரையாடினார் ஷபீர். மோட்டார் விகடன் இதழாசிரியர் பி.ஆரோக்கியவேல், அவள் விகடன் துணை நிர்வாக ஆசிரியர் ஆர்.வைதேகி, ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் பரிசல் கிருஷ்ணா மூவரும் ‘விகடன் 360, டேட்டா, யுட்டிலிட்டி, ஆர்.டி.ஐ’ முதலிய தலைப்புகளில் உரையாற்றி மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

அடுத்து, ஜூனியர் விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் பிரிட்டோ, விகடன் டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா எடிட்டர்கள் ம.காசி விஸ்வநாதன், ஆர்.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர், ஓர் ஊடகம் அதன் சமூக வலைதளப் பக்கங்களைச் சரியாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாகப் பேசினர். இப்படி காலை முதல் அனைத்து அமர்வுகளும் படு சீரியஸாகப் போய்க்கொண்டிருக்க, மதிய உணவுக்குப் பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார் யூடியூபர் மதன் கௌரி. வீடியோவுக்கான ஐடியாக்கள் பிடிப்பது தொடங்கி யூடியூப் போன்ற தளங்களின் அசுர வளர்ச்சி வரை மாணவப் பத்திரிகையாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்தார் மதன்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23 - கூட்டுப் பயிற்சி முகாம்

அடுத்து, ‘மொபைல் ஜர்னலிசம்’ என்ற தலைப்பில் அதன் முக்கியத்துவத்தை சீனியர் சோஷியல் வீடியோ புரடியூசர் அசோக்குமார் விளக்க, ‘Let’s Make Videos’ என்ற தலைப்பில் வீடியோ எடுப்பதில் உள்ள நுணுக்கங்களை விளக்கினர், புகைப்படம் மற்றும் வீடியோ டீம் தலைவர் கே.கார்த்திகேயன் மற்றும் முதன்மைப் புகைப்படக்காரர் தி.விஜய். இவர்களையடுத்து, ‘We are VJs’ என வந்திறங்கினர் விகடனின் ஆஸ்தான தொகுப்பாளர்கள் ஆர்.சரண், நா.சிபிசக்கரவர்த்தி, சே.த.இளங்கோவன் மற்றும் உ.சுதர்சன் காந்தி. கேமரா முன் தோன்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய உடல்மொழி தொடங்கி விவரித்து, ‘எல்லா நிருபர்களும் VJ-க்கள்தான், எல்லா VJ-க்களும் நிருபர்கள்தான்’ என முடித்தார்கள். முதல்நாளின் கடைசி நிகழ்வாக விகடன் குழுமம் வெளியிடும் ஒவ்வொரு இதழுக்கும் என்ன மாதிரியான செய்திகளைச் சேகரித்து அனுப்பலாம் என அந்தந்த இதழ்களின் சீனியர் பத்திரிகையாளர்களோடு கேள்வி பதில் கலந்துரையாடல் நிகழ்ந்தது.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
சிவபாலன் இளங்கோவன்
சிவபாலன் இளங்கோவன்

இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக ‘செய்தி… ஏன், எதற்கு, எப்படி’ என்ற தலைப்பில் ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டன் மற்றும் அவள் விகடன் பொறுப்பாசிரியர் ஜெ.எம்.ஜனனி இருவரும் உரையாற்றினர். அடுத்து, தற்கால இளைஞர்களின் மனநலம், அதன் முக்கியத்துவம் குறித்து ‘டிஜிட்டல் காலத்து இளைஞர்கள்’ என்ற தலைப்பில் பேசினார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். இரண்டாவது நாளின் முதல் சர்ப்ரைஸாக ‘நாயகன் மீண்டும் வர…’ பி.ஜி.எம்-மோடு என்ட்ரி கொடுத்தார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். “25-26 வயதுக்குப் பிறகுதான் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவே எனக்குக் கிடைத்தது, இதுபோன்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்ன லோகேஷ், மாணவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்தார். (மாணவ நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் தந்த பதில்கள் அடுத்த இதழில்!)

 ஷபீர் அகமது
ஷபீர் அகமது
மதன் கௌரி
மதன் கௌரி

அடுத்த அமர்வாக ‘சுவாரஸ்யம் கூட்டுவோம், பிழையை ஓட்டுவோம்’ என்ற தலைப்பில் மொழிநடை, தவறின்றி எழுதுவதன் முக்கியத்துவம் குறித்து ஜூனியர் விகடன் இதழாசிரியர் வெய்யில் பேசினார். தொடர்ந்து, கடந்த ஆண்டு மாணவ நிருபர்களான கார்த்திகா, அர்ஜுன், அடலேறு, சௌமியா, ஜீவ கணேஷ், சூர்யா ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். அடுத்த சர்ப்ரைஸாக நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மேடையேறினார். தேசிய விருது அங்கீகாரத்துக்குப் பிறகு ஜி.வி ஏறும் முதல் மேடை. சுவாரசியமான கேள்விகளுக்கு மனம்திறந்து பதில் சொன்ன ஜி.வி, யுவன், இளையராஜா, ரஹ்மான் பாடல்களைத் தன் குரலில் பாடி மயக்கினார்.

சென்னையைத் தாண்டி வெளி மாவட்டங்களின் மாணவ நிருபர்கள் என்ன மாதிரியான செய்திகளைச் சேகரிக்கமுடியும் என்பது குறித்துப் பேசினார் ஜூனியர் விகடன் முதன்மை நிருபர் இரா.குருபிரசாத். அடுத்து மாணவ நிருபர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன் விளக்கமளித்தார். இறுதி நிகழ்வாக ‘எங்க ஏரியா... உங்க ஏரியா?’ என தாங்கள் சார்ந்த மாவட்ட நிருபர்களுடன் கலந்துரை யாடிவிட்டு உற்சாகமாக விடை பெற்று, களத்தில் இறங்கியிருக்கிறது விகடனின் புதிய மாணவ நிருபர் படை.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!