Published:Updated:

ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

சோலைவனம் என்னும் வாட்ஸ் அப் குழு மூலம், தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் இணைந்து, இரண்டு லட்சம் பனை விதைகளை இன்று ஒரே நாளில் விதைத்து, காண்போரை வியக்க வைத்திருக்கிறார்கள்.

Young people sow palm seeds
Young people sow palm seeds ( நா.ராஜமுருகன் )

தமிழகம் முழுக்க உள்ள இயற்கை மீது நாட்டம் கொண்ட இளைஞர்கள், சோலைவனம் என்ற வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கி, மனிதர்களால் சீரழிந்து கிடக்கும் இயற்கையை மறுபடியும் கட்டமைக்கும் காரியங்களில் இறங்கிவருகிறார்கள். அந்த வகையில்தான், அந்த அமைப்பு மற்ற இயற்கை மீதான ஆர்வம் கொண்ட அமைப்புகளை இணைத்துக்கொண்டு, இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுக்க இரண்டு லட்சம் பனைவிதைகளை விதைத்து, ஆச்சர்யபட வைத்திருக்கிறார்கள்.

Young people sow palm seeds
Young people sow palm seeds

அதன் ஒருபகுதியாக, 2,000 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி மற்றும் காதப்பாறை ஊராட்சி பெரிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பெற்றது. ஏராளமான இளைஞர்களும், இயற்கை ஆர்வலர்களும் இந்தப் பனைவிதைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, பனைவிதைகளை விதைத்தனர்.

Vikatan

இதுகுறித்து, சோலைவனம் அமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் இசக்கிகுமாரிடம் பேசினோம். "தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப் மூலம் நூறு குழுக்களை இணைத்து, சோலைவனம் அமைப்பு மூலம், தமிழகம் முழுவதும் 2 லட்சம் விதைகள் நட்டு இயற்கையைக் காப்பதற்கு முயன்றுள்ளோம்.

Young people sow palm seeds
Young people sow palm seeds

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள குளம், காதப்பாறை ஊராட்சி பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குளம் என்று நீர்நிலைகளில் அந்தந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உதவியோடு, 2000 பனை விதைகளை நட்டுவருகிறோம். மேலும், தன்னார்வ குழுக்கள் மூலம் கரூர் வெள்ளியணை அருகே உப்பிடமங்கலம் பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதேபோல, இளைய தலைமுறை, பசுமை கரூர் என்னும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்திகுளம் பகுதியில் மற்றொரு பிரிவாக பனை விதைகளை நட்டு வருகின்றனர். மனிதனுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், மீண்டும் மனிதன் உயிர் வாழ்வதற்கு ஏற்றபடி பூமியை மாற்றவும்தான், இப்படி பனை விதைகள் நட்டு வளர்த்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம்.

மனிதனுக்கும், பனைக்கும் உள்ள உண்மையான தொடர்பை மக்களுக்கு இதன்மூலம் மெல்ல மெல்ல புரியவைக்க இருக்கிறோம். அதேபோல், மனிதனுக்கும், மரத்துக்கும் இடையிலான உறவின் மகத்துவத்தையும் கடைசி மனிதன் வரை உணர்த்துவதற்காகவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

isakkikumar
isakkikumar

இதற்கு எல்லாத்துக்கும் மேலாக, இப்படி பனைவிதைகள் நடவு செய்வதன் மூலமாக, காடுகள் பற்றிய புரிதலை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் எங்களது இறுதியான நோக்கம். சமவெளியில வாழக்கூடிய மக்களாகிய நாம், மரங்களை அழித்து, பெரிய பெரிய விளைநிலங்களை ஏற்படுத்தி, உணவுதானியங்களை உற்பத்தி செஞ்சுக்குறோம்.

ஆனா, அதற்கான நீரும், காற்றும், சரியான பருவநிலையும் நமக்கு வழங்கி உதவுவது, பெரிய இயற்கைசுழற்சி இயந்திரமாக இருக்கக் கூடிய மேற்குதொடர்ச்சிமலைக்காடுகள்தான். அந்தக் காடுகளைப் பற்றிய புரிதலும், அத்தகைய காடுகளைப் பாதுகாக்கவேண்டிய புரிதலும் மக்களுக்கு ஏற்படுத்துவதே எங்களது உச்சப்பட்ச இலக்கு" என்று தெரிவித்தார்.