Published:Updated:

`256 டன் செம்மண்; 1.46 கோடி விதைகள்!’- ராமநாதபுரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து உலக சாதனை

விதைப்பந்து தயாரிப்பில் மாணவர்கள்
விதைப்பந்து தயாரிப்பில் மாணவர்கள் ( உ.பாண்டி )

சரக்கொன்றை, மயில்கொன்றை, பூவரசம் உள்ளிட்ட 6 வகையிலான 1.46 கோடி விதைகள் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம் 72 மணி நேரத்தில் 30 லட்சத்து 65,000 விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டன.

பசுமைப் புரட்சிக்கு உதவும் வகையில் ராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்டது. உலக சாதனையாக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வை அங்கீகரித்து 3 விருதுகள் வழங்கப்பட்டன.

விதைப்பந்துகள் உருவாக்கி மாணவர்கள் உலக சாதனை
விதைப்பந்துகள் உருவாக்கி மாணவர்கள் உலக சாதனை
உ.பாண்டி

ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளி குழுமம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை அமைப்பு ஒருங்கிணைந்து மாவட்டத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். கடந்த 21-ம் தேதி துவங்கிய இந்த உலக சாதனை நிகழ்வில் ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2,500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

விதைப்பந்துகள் தயாரிப்பில் மாணவிகள்
விதைப்பந்துகள் தயாரிப்பில் மாணவிகள்
உ.பாண்டி

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கிவைத்த இந்த விதைப்பந்து தயாரிப்பு பணியில் 256.5 டன் செம்மண், 45 டன் இயற்கை உரம், சீதாப்பழம், கொய்யா, விளாம்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை, பூவரசம் உள்ளிட்ட 6 வகையிலான 1.46 கோடி விதைகள் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம் 72 மணி நேரத்தில் 30 லட்சத்து 65,000 விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டன.

நேற்றுடன் நிறைவு பெற்ற இந்நிகழ்வு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய அமைப்புகளின் மூலம் நேரடியாக ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். இந்தச் சாதனை நிகழ்வின் மூலம் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகளைக் கொண்டு மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சி பகுதிகளிலும் விதைக்கப்பட்டு பசுமைப்புரட்சி ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

சாதனை விருதுகளுடன் மாவட்ட ஆட்சியர்
சாதனை விருதுகளுடன் மாவட்ட ஆட்சியர்
உ.பாண்டி

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், மார்டின் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் லீமாரோஸ், உதவி ஆட்சியர் சுகபுத்ரா, உலக சாதனை நிறுவன பிரதிநிதிகள் கார்த்திகேயன் ஜவஹர், செந்தில்குமார், ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பின் செல்ல