Published:Updated:

செயற்கை முறையில் அடைகாக்கப்பட்ட முட்டைகள்; வெளிவந்த மலைப்பாம்புக் குட்டிகள் - வனத்துறையின் சாதனை

பி.ஆண்டனிராஜ்

நெல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 30 மலைப்பாம்பு முட்டைகளை செயற்கை முறையில் பொறிக்க வைத்ததில் அவற்றில் இருந்து குட்டிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மலைப்பாம்பு முட்டைகள்
மலைப்பாம்பு முட்டைகள்

நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை உள்ளது. அந்த மீன் பண்ணையில் இருந்து ஏராளமான மீன்கள் காணாமல் போனதால் உரிமையாளர் சந்தேகம் அடைந்துள்ளார். அதனால் சுற்றுப்பகுதிகளில் தீவிரமாகக் கண்காணித்தபோது மீன்களை உட்கொள்ள மலைப்பாம்பு வந்ததைக் கண்டுள்ளார். அந்தப் பாம்பு அருகில் உள்ள முட்புதரில் பதுங்கியதால் அச்சம் அடைந்த அவர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

மலைப்பாம்புக் குட்டிகள்
மலைப்பாம்புக் குட்டிகள்

தீயணைப்புத் துறையினர் சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு குழிக்குள் 30 முட்டைகளுடன் மலைப்பாம்பு அடைகாத்துக் கொண்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், புதரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் அதனுடன் இருந்த முட்டைகளையும் பத்திரமாக மீட்டனர். மலைப்பாம்பையும் முட்டைகளையும் அருகில் உள்ள பொன்னாகுடி வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

மலைப்பாம்பை வனத்தில் கொண்டுசென்று விட்ட அதிகாரிகள், முட்டைகளைச் செயற்கை முறையில் அடைகாக்க வைத்தனர். அந்த முட்டைகளில் இருந்து நேற்று நான்கு குஞ்சுகள் வெளிவந்தன. மீதியுள்ள முட்டைகளும் விரைவில் குஞ்சு பொரிக்கும் என வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். வனத்துறை கால்நடை உதவி மருத்துவர் சுகுமார், ஆய்வாளர் அர்னால்ட் வினோத், உதவியாளர்கள் கிருஷ்ணன், கந்தசாமி ஆகியோர் முட்டைகளைத் தொடர்ந்து பராமரித்ததால் தற்போது நான்கு பாம்பு குஞ்சுகள் வெளிவந்துள்ளன.

வனத்துறை மருத்துவர் சுகுமாரன் குழுவினர்
வனத்துறை மருத்துவர் சுகுமாரன் குழுவினர்

இது குறித்து வனத்துறை உதவி மருத்துவர் சுகுமார் கூறுகையில், ``கடந்த ஜூன் மாதம் பிடிபட்ட மலைப்பாம்பு மணிமுத்தாறு வன எல்லைக்குள் கொண்டுசென்று விடப்பட்டது. அதனுடன் இருந்த 30 முட்டைகளை எடுத்து வந்திருந்தோம். பொதுவாக மலைப்பாம்பு 74 நாளில் குஞ்சு பொறிக்கும். ஏற்கெனவே 45 முதல் 50 நாள் அடைகாத்த நிலையில் எடுத்து வரப்பட்ட முட்டைகளை 27 முதல் 32 டிகிரி வெப்பத்தில் வைத்தோம். அதற்காகத் தனியாக அறையை உருவாக்கி சாக்குகளில் ஈரத்தை ஏற்படுத்தி எப்போதும் ஈரப்பதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டோம்.

Vikatan

வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்ட 25-வது நாளில் நான்கு குட்டிகள் வந்திருக்கின்றன. எஞ்சிய முட்டைகளும் பொறிக்கும் நிலையில் இருக்கின்றன. மலைப்பாம்புக் குட்டிகள் இன்குபேட்டர் இல்லாமல் இது போன்று செயற்கையான முறையில் பொறிக்க வைக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை. இது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. அனைத்து முட்டைகளும் குஞ்சுகளைப் பொறித்தவுடன் அவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவோம்’’ என்றார்.