Published:Updated:

தலைநகரை மிரட்டும் காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம்.? இது தமிழகத்தை தாக்குமா.? #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லி மாசுபாட்டிற்கு என்ன காரணம்
டெல்லி மாசுபாட்டிற்கு என்ன காரணம்

உலகளவில் அதிகளவு மாசடைந்த காற்றைக் கொண்ட நகரமாக நம் தலைநகர் டெல்லி இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இந்த மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இந்த மாசுபாடு தமிழகத்தைத் தாக்குமா? புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`காற்று மாசுபாடு' உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகில் மனிதன் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ, காற்று மிக அவசியம். நம் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன், 1% கரியமில வாயு மற்றும் மேலும் சில வாயுக்கள் மிகச் சிறிய அளவிலும் உள்ளன. இந்த வாயுக்களின் சமச்சீர் நிலை என்பது சரியாக இருக்கும்வரையில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை.

Delhi Air Pollution
Delhi Air Pollution
நவயுகன்

நகரமயமாக்கலும் தொழில் வளர்ச்சியும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் காடுகளும் வளிமண்டலத்தில் நிலவும் சமச்சீர் நிலையைக் குலைத்துக்கொண்டிருக்கிறது. காற்று மாசுபாடு என்பது மிக மோசமானது. காரணம், ஓரிடத்தில் காற்று மாசுபடும் போது, அந்தக் காற்று மற்ற இடங்களுக்கும் பரவி அங்குள்ள காற்றையும் மாசடையச் செய்யும் அபாயம் அதிகம்.

காற்று மாசுபாடுதான் உலகளவில் ஐந்தாவது பெரிய உயிர்க்கொல்லி. உலகளவில் 46 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் இந்தியாவில் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர்.

காற்றை மாசுபடுத்தும் காரணங்கள்!

வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை காற்றை மாசுபடுத்துகின்றன.

தலைநகர் டெல்லி இந்தளவு மாசடையக் காரணம் என்ன..?

உலகளவில் காற்று அதிகளவு மாசடைந்த நகரமாகத் தலைநகர் டெல்லி இருக்கின்றது.  இங்கு கடந்த சில வருடங்களாகப் பலமுறை காற்றின் மாசுபாடு அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது. அதிலும் கடந்த சில நாள்களாக டெல்லியின் சராசரி காற்று தரம் குறியீடு (Air Quality Index, AQI) மிக மோசமாக உள்ளது. அதுவும் தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுப் புகைகளால் மாசுபாடு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.

உலகளவில் காற்று அதிக மாசடைந்த முதல் பத்து நகரங்களின் பட்டியலை பின்வரும் படத்தில் காணலாம்...

Top 10 polluted city in World
Top 10 polluted city in World

இதன் காரணமாக, டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவித்தது. பள்ளிகளுக்கு வரும் 8ம்- தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனங்கள் இயக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கனரக வாகனங்கள், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நகரத்தைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையும், அங்குள்ள வாகனங்களிலிருந்து வரும் புகையும், அங்கு அளவுக்கு அதிகமாக எரிக்கப்படும் குப்பைகளும் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு காரணங்களாக இருந்தாலும், மற்றொரு முக்கியக் காரணம், அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை முடிந்தபின் வயல்களில் சருகுகள் எரிப்பதுதான் முக்கியக் காரணமென்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தப் புகை டெல்லியை நோக்கி நகர்ந்து, மாசுபாட்டைத் தீவிரப் படுத்துகின்றது.

அண்டை மாநில விவசாயிகள், தங்கள் வயல்களில் அதிகளவு சருகுகளை எரிப்பதுதான் முக்கியக் காரணமென்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் , உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் அறுவடை முடிந்தபின் விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் வயல்களில் சருகுகள் எரிக்கப்பட்டதாக 22 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஹரியானாவில் 4,288 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்தியாவில் காற்று அதிக மாசடைந்த முதல் பத்து நகரங்களின் பட்டியலை பின்வரும் படத்தில் காணலாம்...

Top 10 polluted city in India
Top 10 polluted city in India

காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் உள்ள பலருக்கு, சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் முடங்கியுள்ளது. அதோடு புகைமூட்டத்தின் காரணமாக 30-க்கும் அதிகமான விமானங்கள் டெல்லியில் தரையிறங்க முடியாமல், மற்ற இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

Delhi Air Pollution
Delhi Air Pollution
நவயுகன்

நவம்பர் 4-ம் தேதி மாலை 4 மணி நிலவரப்படி காற்று வேகமாக வீசியதன் காரணமாக தரக்குறியீட்டு எண் சற்று மேம்பட்டுள்ளது என்றும், இன்னும் மேம்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

டெல்லியின் தாக்கம் சென்னையைப் பாதிக்குமா..?

டெல்லியில் மாசடைந்த காற்றால் சென்னைக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருந்தார். அடுத்த வாரம் டெல்லி மாசு கிழக்கு கடற்கரை வரை பரவும். அப்போது அது சென்னைக்கும் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக AQI (காற்று தரம் குறியீடு) 200-லிருந்து 300 வரை செல்லும் என்றும் இதனால் வானம் புகைமூட்டமாய்க் காட்சியளிக்கும் என்றும் அவர் சமூக வலைதளத்தில் தகவலை வெளியிட்டிருந்தார்.

Delhi Air Pollution
Delhi Air Pollution
நவயுகன்

ஆனால் ``டெல்லி மற்றும் சென்னையின் அட்சரேகை வெவ்வேறாக இருப்பதாலும் தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து காற்று வீசுவதாலும் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டைக் கண்டிப்பாகப் பாதிக்காது'' என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்

மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்: தலைவலி மற்றும் தலை சுற்றல், செயல்திறன் அளவு குறையும். சுவாச மண்டலத்தின் நோயான மார்புச் சளியை அதிகரிக்கும், இனப்பெருக்கத் தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் பாதிப்பு, முதிர்ச்சியற்ற இறப்பு, நரம்பு மண்டல இயக்கத்தில் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தாவரங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்: அமில மழையால் மரங்கள் அழிந்து, தாவரங்களின் இலைகள் அழிந்து, மண்ணை வளமற்றதாக மாற்றுகிறது. ஓசோனின் கீழ்ப்படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைத் தடை செய்வதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கிறது.

விலங்குகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்: ஓசோனின் கீழ்ப் படலத்தில் சீர்குலைவு ஏற்படும்போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது. ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றன.

உலகில் அனைத்து உயிர்களும் உயிர் வாழ காற்று அத்தியாவசியம். அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டினைக் குறைக்க நம் அனைவருடைய பங்கும் மிக அவசியம். நம் இன்றைய செயல்பாடு, நாளை நம்முடைய தலைமுறையினரின் வாழ்கையை அமைத்துத்தர வழிவகை செய்யும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு