Published:Updated:

`துறவி மம்தா’... ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! - ஒரு லைவ் ரிப்போர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`துறவி மம்தா’... ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! - ஒரு லைவ் ரிப்போர்ட்
`துறவி மம்தா’... ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! - ஒரு லைவ் ரிப்போர்ட்

`துறவி மம்தா’... ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! - ஒரு லைவ் ரிப்போர்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அந்த இடம். உயரமான மரங்கள், வண்ணப் பூச்செடிகள் என அழகான சோலை. அதற்கு நடுவே வெள்ளைப் பளிங்கு மாளிகைபோல கம்பீரமாகக் காட்சியளிக்கிறது சென்னை அயனாவரம், தாதாவாடி ஜெயின் கோயில். முகப்பில் மிகப் பெரிய எல்.சி.டி திரை. அதில், மேடையில் ஆண்களும் பெண்களும் கூட்டமாக அமர்ந்து பஜனை பாடிக்கொண்டிருக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். சாலைகளில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தன... பாக்கு, மிட்டாய், காற்றாடி போன்றவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள்... மொத்தத்தில் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. `துறவற விழா’ என்பதுகுறித்து நாம் கற்பனை செய்துவைத்திருந்ததையெல்லாம் தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தன அந்தக் காட்சிகள்.

சிவப்புக் கம்பள சாலையைக் கடந்தால், அரசியல் கட்சிகளின் மாநாட்டுக்குப் போடுவதைப்போல் மிகப்பெரிய மேடை. அதில் ஜைன மதப் பெரியவர் ஒருவர் நடுவில் அமர்ந்திருக்கிறார். சற்றுத் தள்ளி ஆண்களும் பெண்களுமாக அமர்ந்திருக்கிறார்கள். மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்கள் மட்டும் சுமார் ஐயாயிரம் பேர் இருக்கலாம்... ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

திடீரென்று டிரம்ஸ் இசைக்கும் சத்தம் கேட்டது. ஒரு வாத்தியக் குழு டிரம்ஸ் இசைத்துவர, பின்னால் ஜீப்பில் கழுத்து நிறைய நகைகளும், கையில் கொஞ்சம் பணத்தையும் ஏந்திக்கொண்டு ஒரு பெண் அழைத்துவரப்பட்டார். அவர்... மம்தா கட்டாரியா. வயது இருபத்தியெட்டு. எம்.பி.ஏ படித்தவர். மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். நாளைக்கு இவை அத்தனையையும் தூக்கி எறிந்து, துறவியாகப் போகிறவர். அதன் தொடக்கம்தான் முதல் நாள் நிகழ்வு. கோயிலின் வாசலை அடைந்ததும் கையில் இருந்த நகைகளையும் பணத்தையும் சாலையில் விசிறி அடித்தார். அவர் வீசியெறிந்ததை ஜெயின் சமூக மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிறரும் வாரி எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் துறவறம் மேற்கொள்ள இருக்கிறாரா? அதற்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பணம், நகை அத்தனையையும் தான, தர்மம் செய்துவிட வேண்டும்... இது முதல் சடங்கு.

வாசலிலிருந்து மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மம்தா. ஓர் இருக்கையில் அமரவைக்கப்பட்டார். அவரைச் சுற்றிச் சில பெண்கள் உட்கார்ந்துகொண்டார்கள். மேடையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உற்சாகமாகப் பாட்டுப் பாட சிறியவர்-பெரியவர், ஆண்-பெண் பேதமில்லாமல் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆடுகிறார்கள். மேடையில் மம்தாவைப்போலவே அலங்கரிக்கப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் இருந்தார்கள். அவர்கள் அடுத்த மாதம் துறவறம் மேற்கொள்ள இருக்கிறவர்கள். இது அவர்களுக்கு ஒத்திகை நிகழ்வு.

மேடைக்கு எதிரே விதவிதமான நிறங்களில், வித்தியாசமான சுவைகளில் உணவு பறிமாறப்பட்டது. வரிசையாக நின்று அனைவரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் சுவைத்தார்கள். பலர் எதை வாங்குவது என்று தெரியாமல் அனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியாமல் தவித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும், தட்டுகளை வைக்கப்போகும் இடத்தில் இருவர் கண்காணிக்கிறார்கள். ஒரு சிறிய உணவுத் துண்டு தட்டில் இருந்தாலும், `மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுட்டு வாங்க...’ என்று சொல்லித் தட்டை வாங்க மறுத்தார்கள். இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவிக்க, "எவ்வளவோ பேர் சாப்பாடு கெடைக்காம வெளியில கஷ்டப்படுறாங்க...வேஸ்ட் பண்ணாதீங்கோ... ப்ளீஸ் சார்’’ என்று அன்புக் கட்டளை இட்டார்கள்.

இதற்கு முன்னர் இந்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்கள், உணவின் சுவை எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லாதவர்கள்தான் சாப்பிட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். உணவை மிச்சம்வைத்தவர்கள் பெரும்பாலும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவராக அல்லாத பிறராக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

துறவறத்துக்கான முதல் நாள் நிகழ்வு, ஆடல், பாடல் என்று ஒரு திருமணத்துக்கு முந்தைய நாள்போலவே கழிந்தது. அடுத்த நாள் துறவறம் செல்லும் நிகழ்வு.

காலை 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. முதல் நாள் போல் ஆட்டம், பாடலெல்லாம் இல்லை. மத குருமார்கள் சூழ, மந்திரங்கள் முழங்க, பக்திமயமாக இருந்தது மேடை. மத குருமார்கள் பேசி முடித்ததும் சடங்குகள் ஆரம்பித்தன. மேடைக்கு நடுவே கும்பம்போல ஒன்றை வைத்திருந்தார்கள். அதற்கு முன்பாக ஒருமுறை விழுந்து கும்பிட்டார் மம்தா. குருமார்கள் சொல்லச் சொல்ல சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார்.

ஜெயின் சமூகத்தில் ஒருவர் துறவறம் மேற்கொள்ளும்போது, அவருடைய பெற்றோர் வேறு யாருக்காவது தங்கள் பிள்ளையைத் தத்துக் கொடுத்துவிட வேண்டும். அந்தப் பிள்ளையைத் தத்தெடுப்பதற்கு ஏலம் நடக்கும். யார் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ, அவர்களுக்குப் பிள்ளையைத் தத்தெடுக்கும் பாக்கியம் கிடைக்கும். இதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறார்கள் ஜெயின் இனத்தைச் சேர்ந்தவர்கள். மம்தாவுக்கு இந்த இரண்டு நாள்களுக்கான அம்மாவும் அப்பாவும் அவரருகே நின்றுகொண்டிருந்தார்கள்.

இரண்டு நாள்களும் மிகச் சாதாரணமாக, முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமலிருந்தார் மம்தா. துறவறத்துக்கான சடங்குகள் ஆரம்பமானதும் உற்சாகத்தோடு காணப்பட்டார். முகத்தில் புன்னகை ததும்ப ஒவ்வொரு சடங்காகச் செய்துகொண்டிருந்தார். நடக்கும்போது தரையிலிருக்கும், தரையில் நகரும் உயிர்களைக் கொன்றுவிடக் கூடாது என்பதால், பஞ்சால் ஆன விசிறி ஒன்றைக் கையில் வைத்து, வீசிக்கொண்டே செல்வது ஜைன மதத் துறவிகளின் வழக்கம்.

மத குரு ஒருவர், தன் கையில் அந்த விசிறியைத் தயாராக வைத்துக்கொண்டு மேலேயிருந்து தூக்கிப்போட, கீழே கைகளை விரித்து, அதை லாகவமாகப் பிடித்தார் மம்தா. அப்போது அவர் முகத்தில் விரிந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. துள்ளிக் குதித்து, அதைப் பெற்றுக்கொண்டபோது அவர் ஒரு சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை.

ஆன்மா ஒன்று துள்ளிக்குதித்து இறைவனிடம் தஞ்சமடைவதுபோல இருந்தது. மம்தாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு, மகிழ்ச்சி, நிம்மதியின் சாயல்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த விசிறியை தலையருகே வைத்துக்கொண்டு குதித்துக் குதித்து நடனமாடி நடுவிலிருக்கும் கும்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார் மம்தா. அப்போதும் அவரின் முகத்தில் அதே பூரிப்பு!

அடுத்ததாக நடந்தது முடி எடுத்து வெள்ளை உடை உடுத்தும் முக்கியமான சடங்கு. பெண் சந்நியாசிகள் புடைசூழ மேடைக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் இறங்கி வந்தார் மம்தா. நடைமேடையில் அவர்கள் அனைவரும் நடந்து வர, மக்கள் கூட்டம் மேடையை நோக்கி ஓடியது. ஆசீர்வாதம்தான் வாங்கச் செல்கிறார்கள் என்று நினைத்தால், நடைமேடையில் தங்கள் இரு கைகளையும் வைத்தார்கள். பெண் துறவிகள், மம்தா அனைவரும் அவர்களின் கைகளின் மீது ஏறி நடைமேடையைக் கடந்தார்கள். பாதத்துக்காக கைகளை நீட்டிய பெண்களின் முகத்தில் அப்படியொரு பக்தி, பரவசம்!

மீண்டும் ஜீப்பில் டிரம்ஸ் செட் சகிதம் கோயிலின் முகப்பில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மம்தா. அங்கேதான் அவருக்கு முடி எடுக்கும் நிகழ்வு நடக்கவிருந்தது. முன்னரெல்லாம் துறவறம் மேற்கொள்ள இருப்பவரின் அனைத்து முடிகளையும் கைகளாலேயே பிடுங்குவார்களாம். இப்போது அப்படி நடப்பதில்லை. கத்தியைவைத்து ஒருவர் எடுக்கிறார். உச்சியில் உள்ள நாலு முடியை மட்டும் லாகவமாக விட்டுவிட்டு மற்ற முடிகளை வழித்தெடுக்கிறார். தலை உச்சியிலுள்ள முடிகளை மட்டும் பெண் துறவிகள் தங்கள் கைகளால் பிடுங்குகிறார்கள். அப்போது புகைப்படம் எடுப்பதற்கோ, பார்ப்பதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை.

ஒருபுறம் இந்தச் சடங்கு நடந்துகொண்டிருக்க, மேடையில் ஏலம் நடந்துகொண்டிருந்தது. மம்தா இனி அணியப் போகும் வெள்ளை உடையையும், அவர் கையில் வைத்திருக்கப்போகும் செங்கோலையும் அங்கே ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஏலம் முடிந்ததும் சிலர் அவற்றை இங்கே கொண்டு வந்தார்கள். இனி அவற்றைத்தான் மம்தா அணிந்துகொள்வார். ஏலத்தில் கிடைக்கும் பணம் முழுவதும் ஜெயின் டிரஸ்டுக்குத்தான் போகும். இந்த இரண்டு நாள்களும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவளித்தது, நிகழ்ச்சிகளுக்கான செலவுகள், வெளியில், மேடைக்கருகே எல்.சி.டி ஸ்கிரீனில் நிகழ்வு ஒளிபரப்பட்டது, டிரம்ஸ் செலவு உள்பட அனைத்தையும் அந்த டிரஸ்ட்தான் கவனித்துக்கொண்டது.

சிறிது நேரத்தில் சேலை, கோல் என ஒவ்வொன்றாகக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள். தலையில் முடியில்லாமல் வெள்ளை உடை அணிந்து பெண் துறவிகள் புடைசூழ வெளியில் வந்தார் மம்தா. மீண்டும் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேடையில், மீண்டும் சில சடங்குகள் நடந்தன.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக பெண் துறவிகளுடன் வெள்ளைச் சேலை, கையில் ஒரு விசிறி எனத் தனது துறவறப் பயணத்தைத் தொடங்கினார் மம்தா. இனி அவர் வீட்டுக்குப் போக முடியாது; கூடாது. காசு கொடுத்து எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. யாசகம் பெற்றுத்தான் சாப்பிட வேண்டும். நடைப்பயணமாகவே ராஜஸ்தான் செல்ல வேண்டும். வழியிலிருக்கும் ஜெயின் கோயில்களில் தங்கிக்கொள்ளலாம். செல்வி மம்தா இனி துறவி மம்தா.

அவருக்கு இனி தாயில்லை, தந்தையில்லை... ஏன் மம்தா என்பதே இனி அவர் பெயரில்லை. "அம்மா, அப்பா , நண்பர்கள் இந்த பந்தம் எல்லாம் நிலையில்லாதது. இறைவனுக்கும் நமக்கு உள்ள பந்தம் மட்டுமே நிலையானது" என்று தனது துறவறப் பயணத்தைத் தொடங்கினார் மம்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு