Published:Updated:

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" - ராஜூமுருகன்

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" -  ராஜூமுருகன்
"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" - ராஜூமுருகன்

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" - ராஜூமுருகன்

‘காதலர் தின விழா’ என்கிற பெயரில் சாதி, மத மறுப்புத் திருமணம் செய்த இணையர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி கோவையை அன்பால் நனைத்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். கடந்த 17- ம் தேதி,  இரவு கோவை சித்தா புதூரில் நடந்த இந்த நிகழ்வு  நிமிர்வு கலையகத்தின் பறை நிகழ்ச்சி, புதுகை பூபாளம் குழுவின் பகுத்தறிவு கலைநிகழ்ச்சி ஆகியவற்றோடு தொடங்கியது.  நிகழ்வில் இயக்குநர் ராஜூமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" -  ராஜூமுருகன்


முதலில் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், “காதல் திருமணம் பண்ணி வெச்சிட்டா சாதி ஒழிஞ்சிருமான்னு எல்லோரும் கேட்கிறாங்க. அதனால, அடுத்த நிமிடமே சாதி ஒழிஞ்சிரும்னு நாங்களும் நம்பலை. இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் சாதியக் கட்டுமானத்தில் சாதிமறுப்பு திருமணம் ஒரு லேசான கீறல் போடும். கீறல் விழுந்தாவே போதும். பின்நாள்களில் கட்டடம் தன்னால ஆட்டம் காணும். இதுவரைக்கும் நாங்கள் நாலாயிரம் காதல் திருமணங்களைப் பண்ணி வெச்சிருக்கோம். நாலாயிரம் தம்பதிகளும் சாதி ஒழியணும்னு நெனைச்சவங்களானு கேட்டால், இல்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களா என்றால், இல்லை. அதெல்லாம் விபத்து. விபத்தில் சாதி மாறிடுது. நாங்கள் அதை ஊக்குவிக்கிறோம். காதலிக்கிறவங்க பொதுஇடத்தில் ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நீ.. சமூகத்தில் காதலை ஏற்றுக்கொள். காதலை அங்கீகரி. அப்போது, யாரும் ரோட்டுக்கு வரமாட்டார்கள். கூட்டுக்குடும்பத்தில் இருக்கின்ற கணவன் மனைவிகளே தங்களுக்குள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. செய்வறியாது தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில் வேறு வழியில்லாமல்தான் காதலர்கள் பார்க், பீச்சிற்கு செல்கிறார்கள். 

தாலியைப் புனிதச் சின்னம் என்று சொல்லும் காவிக் கூட்டம்தான், அதே தாலியை நாய்க்கும், கழுதைக்கும் கட்டிவிடுகிறார்கள். இப்போது, உங்கள் புனிதம் எங்கே போச்சு? “பெத்து வளர்த்து ஆளாக்கின பொண்ணை எவனோ ஒருத்தன் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பான். நாங்க சும்மா இருக்கணுமா?” என்று பெரியவங்களும், பழைமைவாதிகளும் சொல்வார்கள். மதிக்காமல் போவதை நாங்களும் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்கு உரிமை இருக்கிறது. வளர்த்தது, படிக்க வெச்சது, ஆளாக்கினது எல்லாம் சரிதான். ஆனால், பதினெட்டு வயசுக்குமேல வாழ்க்கைனு ஒண்ணு இருக்குதுல்ல. அந்த வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையாக இருக்குதுல்ல. அதை அவங்கதானே தீர்மானிக்கணும். சாதிக்குள்ளயே மாமன் மகள், அத்தை மகன்னு பார்த்துப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களே... எத்தனை வீடுகள்ல அத்தை மகனும், மாமன் மகளும் வயசான பின்னாடி பெத்தவங்களைக் காப்பாத்துறாங்க? ஆகவே, நமக்குத் தேவையானது மனிதநேயம், அன்பு...  அது காதல் திருமணம் செய்து கொண்ட இணையர்களிடம்தான் அதிகம் இருக்கும்’ என்று தீர்க்கமாகச் சொல்லி அமர்ந்தார்.

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" -  ராஜூமுருகன்

அடுத்ததாக சாதி, மத மறுப்பு காதல் திருமணம் செய்த இணையர்களைப் பாரட்டி பரிசு வழங்கிவிட்டு,  மைக் பிடித்த இயக்குநர் ராஜூமுருகன்,  “காதல் என்பது மனிதனுக்கான உணர்வு. அது ஒண்ணும் புனிதமான வெங்காயமெல்லாம் கிடையாது. ஒருவேளை அது புனிமானால். சாதி, மதங்களை உடைக்கும்போதுதான் அது புனிதமாக மாறும்" என்று சொன்னார் பெரியார். சாதியையும் மதத்தையும் உடைப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் அன்பு மட்டும்தான், காதல் மட்டும்தான். எனக்கு முன்னால் பேசியவர்கள், கேரளாவில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றிவிட்டார்கள். அது இங்கே எப்போது வரப்போகிறது என்று கேட்டார்கள். கேரளாவில் அந்தச் சட்டம் நிறைவேறியதற்கு காரணம், அங்கு நடப்பது பொதுவுடைமை ஆட்சி.  தமிழ்நாட்டில் நடப்பதோ மதுவுடமை ஆட்சி. அவ்வளவுதான் அந்தக் கேள்விக்கான பதில். சாதியும் மதமும் சமீபகாலமாக மிகத்தீவிரமாக வளர்ந்துவருகிறது. டிஜிட்டல் இந்தியா, மேக்-இன் இந்தியாவெல்லாம் வந்தபிறகு நாம் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் அந்த வார்த்தையை உச்சரிக்க ஆரம்பித்த பிறகுதான் சாதியும் ,மதமும் இந்த மண்ணில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. இந்த இரண்டையும் நாம் முடிச்சிப் போட்டுப் பார்க்கணும். டிஜிட்டல் இந்தியாவையும்,மேக்-இன் இந்தியாவையும் சாதி, மத வேறுபாட்டின் மேல் கட்டுவதற்குத்தான் இவர்கள் பிரியப்படுகிறார்கள். அதற்காக இந்தியா முழுவதும் மிகப்பெரிய அடையாள அரசியலை செய்துகொண்டிருக்கிறார்கள். நம்முடைய உணவில், வாழ்வின் அத்தனை அங்கங்களிலும் சாதியையும் மதத்தையும் புகுத்தி மிகப்பெரிய பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்கிறார்கள். அதன் மூலம் சமூகத்தை பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

'ஜோக்கர்' படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு உதாரணமாகச் சொல்கிறேன். அந்தப் படம் முழுக்க தர்மபுரியில்தான் ஷூட்டிங். ஒவ்வொரு நாளும் ஷூட் போகும்போதும் எனக்கு ஓர் அச்ச உணர்வு இருக்கும். நடிகர்கள் அதிகார வர்க்கத்தையும், அரசியல்வாதிகளையும் சாடும் வசனங்களைப் பேசி நடிக்கும்போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு அதுகேட்டு, அதன் மூலமாக ஏதாவது பிரச்னை வந்து, படப்பிடிப்பு தடங்கலாகுமோ... என்ற அச்சம் அது. அதனால், முக்கியமான காட்சிகளை எடுக்கும்போது,  ‘நீங்க மியூட்ல பேசுங்க நான் டப்பிங்ல சேர்த்துக்கிறேன்’னு நடிகர்கள்கிட்ட சொன்னேன். மியூட்ல பேசும்போது, உணர்ச்சிகள் சரியா வரலை. வேறுவழியில்லாம சத்தம்போட்டுப் பேச வெச்சு ஷூட் பண்ணோம். ஆனா, எந்த இடத்திலேயும் பிரச்னை வரலை. ஒரேயொரு காட்சி. அது, காட்சிகூட கிடையாது ஒரு மாண்டேஜ் ஷாட். பெரியார் சிலைக்குக் கீழே இரண்டுபேர் திருமணம் செஞ்சிக்குவாங்க. பொன்னூஞ்சல் காதாபாத்திரம்தான் திருமணத்தை செஞ்சு வைக்கும். அவர்களுக்கு மேலே, ‘இது சாதி மறுப்புத்திருமணம்' என்று ஒரு அட்டையில் எழுதி வெச்சிருப்போம்’. அந்தக் காட்சியை தர்மபுரி பேருந்து நிலையத்துகிட்ட இருக்கிற பெரியார் சிலை அருகேதான் எடுத்தோம். அதை எடுப்பதற்கு எனக்கு இருபது நிமிடம்தான் தேவைப்பட்டது. அந்தக் காட்சிகளை யாரோ போட்டோ எடுத்து இப்படியான ஒரு படத்தை தர்மபுரியில எடுத்துகிட்டு இருக்காங்கனு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து, பிரச்னையைக் கிளப்பிவிட்டுட்டாங்க. அன்றைக்கு சாயங்காலமே படப்பிடிப்பை நிறுத்தச்சொல்லி ஒரு குழு வந்து இறங்கிடுச்சி. விடியவிடிய பஞ்சாயத்து பேசினேன். இந்தப் படம் ‘இளவரசன் - திவ்யா’ பற்றிய படமெல்லாம் இல்லை’னு புரியவெச்சி சமாதானம் பண்ண பிறகுதான், என்னால படப்பிடிப்பைத் தொடர முடிஞ்சது. ஒரேயொரு ஷாட்.. அவர்களை எந்த அளவுக்கு அச்சப்பட வைக்கிறது என்பது எனக்கு அப்போ புரிஞ்சது. எல்லாவாற்றைவிடவும்  மிகமுக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னையாக இங்கே சாதிதான் இருக்கிறது என்பதை நான் அப்போது உணர்ந்தேன்.

"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்!" -  ராஜூமுருகன்

சாதியையும், மதத்தையும் ஒழித்துவிட்டால் இங்கே அதிகாரமும், அரசியலும் இயங்கவே இயங்காது. இதை வைத்துதான் அவர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எதிர்ப்பதற்குக் 'காதல்’ங்கிற விஷயம்தான் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். நானும் காதல் திருமணம்தான் செஞ்சிருக்கேன். உண்மையிலேயே சொல்றேன், இப்போ வரைக்கும் என் பொண்டாட்டி என்ன சாதினு எனக்குத் தெரியவே தெரியாது. சாதியை நம்மிடமிருந்து பிரித்தெடுப்பதற்கான ஒரேவொரு விஷயம் அன்பு மட்டும்தான். ஆணவக்கொலை செய்தவர்களே கொஞ்சம் காலம் கழித்து மிகவும் வலியிலும், வருத்தத்திலும், தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகி சிதைக்கப்பட்ட சூழலில் இருக்கிறார்கள். ஒரு ஆவணப்படத்திற்காக ஆணவக்கொலை நடத்தப்பட்ட, நடத்திய குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆணவக்கொலையை நடத்தியவர்களிடம் பேசும்போது, ‘இந்த விஷயத்தை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார்கள். அதுதான் உண்மை. 

சொந்தங்கள். உறவுகள் கொடுக்கக்கூடிய நெருக்கடிகளால்தான் ஆணவக்கொலைகள் நடக்கிறது. ஒரு பொண்ணு சாதி மாறி காதல் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பொண்ணோட பெற்றோர்களை அவங்க சொந்தக்காரங்க சுத்தி சுத்தி நின்னு பேசுறது இருக்கு பார்த்தீங்களா... அதுதான் காரணம். அந்தச் சொந்தக்காரங்களால ஒரு பிரயோஜனமும் கிடையாது. அவர்கள் எதையுமே நமக்காக முன்னெடுக்கிறது கிடையாது. வாழ்ந்து முடித்துத் திரும்பிப் பார்த்தால், தோழர்கள் மட்டும்தான் நமக்கு உதவியா இருந்திருப்பாங்க. தோழர்கள் மட்டும்தான் நம்ம கூடவே இருந்திருப்பாங்க. தோழர்கள்தான் நம் உண்மையான உறவுக்காரங்க. ஏன்னா தோழன் சாதி பார்க்க மாட்டான். சொந்தங்களுக்கும் ஒரு நெருக்கடி இருக்குது. அது என்னன்னா, சாதி அமைப்புகள். சாதி அமைப்புகளுக்கு ஒரு நெருக்கடி இருக்கிறது. அது, அரசியல் நெருக்கடி. அந்த அரசியல் நெருக்கடிக்குமேல ஒரு மோடி மஸ்தான், மோடி மஸ்தானுக்கு மேல ஒரு ரிங்மாஸ்டர்... இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த சிஸ்டமாக இருக்கிறது. இதை அடித்து உடைத்து நொறுக்கக்கூடிய ஆயுதமாக அம்பேத்கரும், பெரியாரும், மார்க்ஸும் நமக்கு அளித்த தத்துவங்களும் சிந்தனைகளும் இருக்கின்றன. அதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான மிகப்பெரிய ஆயுதமாக காதல் இருக்கும்!" என்று முடித்தார், இயக்குநர் ராஜூமுருகன். 

அடுத்த கட்டுரைக்கு