அறிவிப்புகள்
Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

பலாமுசு குருமா... பலே... பலே!

வாசகிகள் கைமணம்!

பலாமுசு குருமா

தேவையானவை: லேசான பலாமுசு (பிஞ்சுப் பலாக்காய்) - ஒன்று, வெங்காயம் - 2, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பிரிஞ்சி இலை - 2, சீரகம், சோம்பு, கிராம்பு -  சிறிதளவு, பட்டை - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு  - தேவையான அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, பலாமுசுவை தோல் நீக்கி ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கி... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். சிறிதளவு எண்ணெயில் தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். வேகவைத்த பலா முசுவை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

- எல்.உஷாகுமாரி, சூளைமேடு

கொள்ளு போண்டா

தேவையானவை: கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை, வேர்க்கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், எள்ளு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்பால் அல்லது பால் - தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: கொள்ளை வாசனை வரும் வரை வறுத்து, அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து மேலும் வறுக்கவும். பிறகு இதனுடன் பொட்டுக்கடலையையும், வேர்க்கடலையையும்  சேர்த்து அரைத்துக்கொள்ளவும் இதில் எள்ளு, சீரகம், உப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு தேங்காய் பாலையோ, பாலையோ சேர்த்து, போண்டா போடும் பக்குவத்தில் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை போண்டாக்களாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

- தாரா மணிவண்ணன், கோயம்புத்தூர்

மாம்பழ அவல் கேசரி

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பெங்களூர் மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், கேசரி கலர் - சிறிதளவு, பால் - கால் கப், நெய் - அரை கப், சிறிய துண்டுகளாக்கிய முந்திரி, பாதாம் (சேர்த்து)  - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: கெட்டி அவலை தண்ணீரில் போட்டு பிழிந்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். மாம்பழத் துண்டுகளையும் (தோல் நீக்கி) மிக்ஸியில் அரைக்கவும். கடாயில்  சிறிதளவு நெய் ஊற்றி, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மாம்பழ விழுதை வதக்கவும். பிறகு, பால் சேர்க்கவும். சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். இதனுடன் அவல் ரவையையும் சேர்த்துக் கிளறவும். கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். வறுத்து வைத்த முந்திரி, பாதம் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

- ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்