Published:Updated:

"வாராரு வாராரு அழகர் வாராரு" - சித்திரை திருவிழா எனும் கலர்ஃபுல் கொண்டாட்டம்!

கொண்டாட்டங்களுக்கு பெயர்போன ஊரு மதுரை. வருஷத்துல பன்னிரண்டு மாதங்களும் தினுசு தினுசா திருவிழா கொண்டாடினாலும், மதுரையோட திருவிழானா அது சித்திரைத் திருவிழாதான்.  வீரத்தையும் பாசத்தையும் தாண்டி இந்த மண்ணுக்கு இருக்கும் இன்னொரு மகத்துவம் ஊரே இணைஞ்சு கொண்டாடும் இந்த பண்டிகைதான். ஊரே கூடுற பண்டிகைனா சும்மாவா, சித்திரை திருவிழா கொண்டாட்டங்கள் இதோ...

"வாராரு வாராரு அழகர் வாராரு" - சித்திரை திருவிழா எனும் கலர்ஃபுல் கொண்டாட்டம்!
"வாராரு வாராரு அழகர் வாராரு" - சித்திரை திருவிழா எனும் கலர்ஃபுல் கொண்டாட்டம்!

கொண்டாட்டங்களுக்குப் பெயர்போன ஊரு மதுரை. வருஷத்துல பன்னிரண்டு மாதங்களும் தினுசு தினுசா திருவிழா கொண்டாடினாலும், மதுரையோட திருவிழான்னா அது சித்திரைத் திருவிழாதான்.  வீரத்தையும் பாசத்தையும் தாண்டி இந்த மண்ணுக்கு இருக்கும் இன்னொரு மகத்துவம், ஊரே இணைஞ்சு கொண்டாடும் இந்த பண்டிகைதான். ஊரே கூடுற பண்டிகைன்னா சும்மாவா, பட்டையைக் கிளப்பும்ல! சித்திரை திருவிழா கொண்டாட்டங்கள் இதோ... 

தமிழ்ப்புத்தாண்டு பிறந்த அன்னைக்கே அழகர் மலையில மாலையைப் போட்டு, தங்கத் தாமரை தெப்பத்துல கால்களை நனைச்சுட்டா திருவிழா மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சுனு அர்த்தம்.  அப்பறம் மதுரையில் திரும்புற பக்கமெல்லாம் பட்டையும் நாமமும்தான். ரொம்ப வைராக்கியம் புடிச்சவங்க நம்ம பங்காளீஸ். அழகர் மதுரைக்கு வந்து மறுபடி கோயிலுக்குள்ள போகுறவரை கடுமையான விரதம்தான்.

மற்ற நாட்களில் தலைக்கறி, கறிதோசை, மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட்னு மெனுகார்டை மிரள வைச்ச நம்ம பயலுக, சித்திரை பொறந்ததும் "தயிர் உடல் சூட்டை தணிக்குமாம் மாப்ள, கீரை உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா பங்கு" என சுத்த சைவமாகிப் போவார்கள். சித்திரைத் திருவிழா பார்க்க மதுரைக்கு வரும் மக்காஸ் ஞாபகம் வைச்சிக்கோங்க, இங்கே வந்தா உறவுக்காரங்க வீட்டுச்சாப்பாடு சாம்பாரும், ரசமும்தான். ரசம் செரிமானதுக்கு நல்லது. ஹிஹி...

மீனாட்சிக்கும் சொக்கருக்குமான முதல் பத்து நாள் திருவிழாவுல பராம்பரியக் கலைகளும் நடனங்களும் ஆளை அசர வெச்சிரும். ஒவ்வொரு வீட்டுலேயும் இருக்கிற பெண்  பிள்ளைகளெல்லாம் பெண் தெய்வங்களா உருவெடுக்கும். அம்மாக்களின் கிரியேடிவிட்டில இன்டர்நேஷனல் ஃபேஷன் ஷோ எல்லாம் தோத்துடும் போங்க! பெண் பிள்ளைகளுக்கு ஈக்வலா  அழகர்,முருகன், கருப்பசாமி வேஷம்னு  குட்டிப் பயலுகளும் போட்டிப் போட்டு மிரட்டுவாய்ங்க.

மற்ற பண்டிகையை நீங்க வேற ஆளுக நாங்க வேற ஆளுகன்னு தனித்தனியா கொண்டாடிக்கிட்டாலும், சித்திரைத் திருவிழானு வந்துட்டா சாதி,மதம் பார்க்காம ஒண்ணு கூடிடுவாங்க மதுரகாரய்ங்க. மாட்டுவண்டி வழக்கொழிஞ்சுட்டாலும் குட்டியானையில் வந்து கிறங்கடிக்கும் நம்ம கிராமத்து சனங்க. கோடையையும் கொண்டாடும் இவங்க ரசனைக்கு ஈடு இணை ஏதுமில்லை. 

திக் விஜயம் முடிஞ்சுட்டா மீனாட்சியும் சொக்கரும் தெய்வங்கள் இல்ல. இவங்க வீட்டு பொண்ணு, மாப்பிள்ளை. ஊருலயே பெரிய கல்யாணமப்பு!  தடபுடலா இருக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. இந்தப் பக்கம் திருக்கல்யாணம் நடப்பது, அந்தப்பக்கம் கல்யாண விருந்து ரெடி ஆகுறதுனு அட்மாஸ்பியரே அப்புடி  இருக்கும். யாரும் அந்த பக்கம், இந்த பக்கம் போயிரக் கூடாது. கையப் புடிச்சு இழுத்து பந்தியில உக்கார வைச்சிருவாங்க. இத்தனை பேரோட சேர்ந்து சாப்பிடுற சந்தோஷம் எங்க கிடைக்கும். அப்புறம் என்ன பாஸ், ஒரு வெட்டு வெட்டுங்க.

பாவடை தாவணி கட்டிகிட்டு பட்டாம்பூச்சியாய் மாறிப்போகும் பொண்ணுங்க, நாலு வீதிகளிலும், ஒரே மூச்சுல தேரை  இழுத்து வீரத்தை காட்டும் இளவட்டங்கள், 'சாமி எப்படா வரும்'னு காத்துக்கிட்டு நிக்கும் பெரியவங்கன்னு பலதரப்பட்ட மனநிலையில மனுஷங்க சுத்திட்டு இருப்பாங்க.

உள்ளூர் டி.வி சேனலைப் பார்த்து, சாமி வரும் தடத்தை தெரிஞ்சுகிட்டு, கூட்டத்துக்குள்ள முண்டியடிச்சு நுழைஞ்சு ஒரு இடம் பார்த்து நின்னா, 'இந்த மண்டகப்படி இல்லையாம்... சாமி அங்க இருக்குதாம்' என அலற விடுவார்கள். சரி... அங்க போயாச்சும் பார்க்கலாம்னு வாழ்க்கையில் செய்யாத சாகசமெல்லாம் செஞ்சு சாமி பக்கத்துல போனா, மின்னல் வேகத்துல சப்பரம் கிளம்பிடும்."ஆனா ஒண்ணுடா சாமி முகத்தைக் கூட நான் சரியா பார்க்கலடா" என கடைசியில் வரும் புலம்பல்தான் ஹைலைட்.

இப்ப வருகிற சினிமா படங்களுக்கு தீம் சாங் இருக்கோ, இல்லையோ. சித்திரைத் திருவிழாவுக்குன்னே ஒரு தீம் சாங் இருக்கு (வாராரு வாராரு அழகர் வாராரு). இலட்சக்கணக்கான ஜனங்களுக்கும் கேட்குற மாதிரி பெரிய சைஸ் ஹோம் தியேட்டர் ரெடி ஆயிடும். இதோட உறுமிமேளம், ஆட்டம் பாட்டம்னு விடிய விடிய சவுண்ட் ஆன். பிளாஷ் மாப், டீஜே க்கு எல்லாம் முன்னோடி யாருன்னு நினைக்கிறீங்க, எல்லாம் நம்ம பயலுகதான். 

ஒன் ஹம்பிள் ரெக்வஸ்ட்...இந்த தடவை வால்யூமை கொஞ்சம் கம்மி பண்ணுங்க சவுண்ட் பாய்ஸ். காது கிழியுது! ஜல்லிக்கட்டு போராட்டத்துல தமிழகத்த திரும்பிப் பார்க்க வெச்ச தமுக்கம் மைதானம், மதுரைக்காரய்ங்களுக்கு அறிமுகம் ஆனது என்னவோ பொருட்காட்சியாலதான். மீனாட்சியைப் பார்த்துட்டு சொக்கரப் பார்க்கப் போகணும்கிறது எப்படியோ அதுமாதிரி தான் திருவிழா பார்த்துட்டு தமுக்கத்துக்குப் போறதும். பொருட்காட்சியின் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜியோட டேஸ்ட் அதகளம் பண்ணிடும். இதைவிட முண்டியடித்து வாங்கும் பொங்கல், புளியோதரை,  தாகம் தணிக்கும் நீர்மோர், ரஸ்னா என அத்தனையும் அமேசிங் யு நொ?

தோப்பறையில் (தோல் பை) கொண்டு வரும் தண்ணீரை அழகர் மேல அடிக்குறாங்களோ இல்லயோ, பக்தர்கள் மேல கண்டிப்பா அடிப்பாங்க. அடிக்கிற வெயிலுக்கு இதமா இருக்கும். இவங்க பத்தாதுன்னு திரும்பிய பக்கமெல்லாம் ஆசி வழங்கும் திரியாட்டக் காரர்கள் இன்னொரு ரகம். இப்படியே நீண்டுக் கொண்டே போகும் அதகளங்களை மிஸ் பண்ணிடாதிங்க மக்காஸ். இந்த 30-ம் தேதி அழகர் வராரு... மறக்காம மருதைக்கு வந்துடுங்க...