Published:Updated:

நிறைவடைந்தது மகா கும்பாபிஷேகம்... திருப்பதியில் நாளைமுதல் வழக்கமான தரிசனம்!#Tirupati

நிறைவடைந்தது மகா கும்பாபிஷேகம்... திருப்பதியில் நாளைமுதல் வழக்கமான தரிசனம்!#Tirupati
நிறைவடைந்தது மகா கும்பாபிஷேகம்... திருப்பதியில் நாளைமுதல் வழக்கமான தரிசனம்!#Tirupati

கோவிந்தா... கோவிந்தா... கோஷங்கள் முழங்க திருப்பதியில் மகா கும்பாபிஷேகம்!

திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) இன்று 16-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 

இதற்கு முன் 2006-ம் ஆண்டு (12 ஆண்டுகளுக்கு முன்) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்விப்பதால் கோயிலின் ஜீவ சக்தி மேலும் வலுவடையும் என்பது ஐதிகம். 

(Photos courtesy - Tirumala Tirupati Devasthanams)

பொதுவாக, திருப்பதிக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வட இந்திய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளார்கள். தினமும் 80,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். கும்பாபிஷேகக் காலத்தில் நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 25,000 பக்தர்களையே தரிசனத்துக்கு அனுமதித்தது. 

கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பதி கோயிலில் மூலவர் குடியிருக்கும் ஆனந்த நிலையம், கருடாழ்வார் சந்நிதி, வரதராஜர் சந்நிதி, யோக நரசிம்மர், ஆஞ்சநேயர் சந்நிதி எனக் கோயிலின் எல்லா பகுதிகளும் கர்ம சிரத்தையுடன் சுத்தம் செய்யப்பட்டன. கோயிலில் மூலவர் இருக்கும் தங்க விமானம், துவஜஸ்தம்பம், பலிபீடம்,  மகா துவாரம், பங்காரு வாகிலி ஆகிய பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு தகதகவென ஜொலிக்கின்றன.

யாக சாலைகள் அமைக்கப்பட்டு, வைதீக பூஜைகளை மேற்கொள்வதற்காக இந்தியா முழுவதுமிருந்து 48 வேத விற்பன்னர்கள் திருமலைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களது வேத மந்திர கோஷங்கள் முழங்க, கடந்த 11-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு 'அங்குரார்ப்பணம்' நிகழ்ச்சி நடைபெற்றது. யாகசாலை பூஜையின்போது, பெருமாளின் கருவறையில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு எழுந்தருளுச் செய்தனர். 

முன்னதாக, எம்பெருமான் சீனிவாசனின் சேனைத்தலைவர் 'விஸ்வக்சேனர் உலா' கோயிலின் நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து மகா சம்ப்ரக்ஷணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக, 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடியற்காலை 5 மணி அளவில் ஹோம குண்டங்களில் வேத மந்திரங்கள் ஒலிக்க யாகம் வளர்க்கப்பட்டது. 

புண்ணியாவசனம், பஞ்சகவ்யா ஆராதனை, வாஸ்து சாந்தி, ரக்ஷ்சாபந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயிலில் உள்ள மூலவர் வேங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் சக்தியை 18  கும்பங்களில் ஆவாகனம் செய்யப்பட்டது. 

13-ம் தேதி (திங்கள்கிழமை) 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாள்களும் எட்டுவிதமான மூலிகைத் திரவியங்களால் அஷ்டபந்தனம் தயார் செய்யப்பட்டது. இந்த அஷ்ட பந்தனம் கோயிலின் மூலவர் மற்ற பரிகார மூர்த்தி சிலைகளின் பீடத்தில் வைக்கப்பட்டது. 

15-ம் தேதி (புதன்கிழமை) காலையில் பூஜைகள், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, 12 மணியளவில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு 14 கலசங்களுடன் மகா சாந்தி, திருமஞ்சனம் செய்யப்பட்டது. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இன்று 16-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு மூலவர் வெங்கடாஜலபதிக்கும் தங்க விமான பிரகாரத்துக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மூலவர் வேங்கடேச பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தபோது, வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, ராமாநுஜர், யோக நரசிம்மர், விஸ்வக்சேனர் சந்நிதிகளிலும் புனித கலச நீர் ஊற்றப்பட்டது. கோயிலில் இருக்கும் மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  

இதன் பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனித கலச நீரைத் தெளித்தனர். பக்தர்கள் அப்போது, 'கோவிந்தா கோவிந்தா' என விண்ணதிர முழங்கினர்.

நாளை 17-ம் தேதி காலை முதல் அனைத்து தரிசன முறைகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி தேவஸ்தானத்தின் கெடுபிடிகளால் திருமலையில் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி மலைப்பாதை வழியே நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பதி பஸ் ஸ்டாண்டில் இருந்து மலைக்குச் செல்லும் பஸ்கள் யாவும் இயக்கப்படவில்லை. இதனால் திருப்பதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம்  மிகவும் குறைவாகவே இருந்தது. திருப்பதி கோயிலின் ஒரு நாளைய உண்டியல் வசூல் சராசரியாக ரூ.3 கோடி இருக்கும். ஆனால், அது 54 லட்சமாகக் குறைந்தது.

 திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயிலின் அடுத்த குபாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடைபெறும்.

அடுத்த கட்டுரைக்கு