Published:Updated:

'தூய்மையான இந்தியா அமைப்போம்' - அப்துல் கலாம் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்

இரா.மோகன்

 நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, 'தூய்மையான இந்தியா'வை அமைக்க அப்துல்கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

'தூய்மையான இந்தியா அமைப்போம்' - அப்துல் கலாம் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்
'தூய்மையான இந்தியா அமைப்போம்' - அப்துல் கலாம் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவிகள்

நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, 'தூய்மையான இந்தியா'வை அமைக்க அப்துல் கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக இளைஞர்கள், மாணவர்களிடையே நாட்டுப் பற்று, சேவை மனப்பான்மை ஆகியவற்றை உருவாக்க, கடந்த 1969 செப்டம்பர் 24ல் நாட்டு நலப்பணித் திட்டம் நாடெங்கிலும் தொடங்கப்பட்டது. இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டு நலப் பணித்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். நாட்டு நலப்பணித் திட்டம் தொடங்கப்பட்ட இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் நாட்டு நலப்பணித் திட்ட தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

இவ்வாண்டு, இத்திட்டம் தொடங்கப்பட்ட 50-வது பொன் விழா ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுதும் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரம் தீவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள், பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் வளமான, வலிமையான, தூய்மையான இந்தியாவை அமைப்போம் என உறுதிமொழி ஏற்றனர். 

நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரம் சுழல் சங்கத்தின் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் துணைத்தலைவர் தில்லை பாக்கியம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், யாத்திரைப் பணியாளர்கள் சங்கச் செயலர் காளிதாஸ், நுகர்வோர் இயக்க நிர்வாகிகள் களஞ்சியம், பசுமை ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் சரசுவதி, கிரியேட் அறக்கட்டளை நிர்வாகிகள் முருகன், சுடலை மற்றும் கம்பன் கழகம் நந்தகோபால், ராமச்சந்திரன், திட்ட அலுவலர்கள் மாரிபருவதம், அந்தோணிமுத்து, ஜீவா ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றனர். 

 இந்நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெண்கள் பள்ளி, புனித ஜோசப் பள்ளி, தங்கச்சிமடம் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின் அப்பகுதியில் துப்புரவுப் பணியும், தூய்மைப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டன. தூய்மை இந்தியாகுறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் மற்றும் துப்புரவுப் பணிகள், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் கூறினார்.