Published:Updated:

மினிமம் முதலீடு... நிறைய டெக்னாலஜி... பிசினஸ் டெக்னிக்..! நாணயம் விகடன் விருது விழா

மினிமம் முதலீடு... நிறைய டெக்னாலஜி... பிசினஸ் டெக்னிக்..! நாணயம் விகடன் விருது விழா
மினிமம் முதலீடு... நிறைய டெக்னாலஜி... பிசினஸ் டெக்னிக்..! நாணயம் விகடன் விருது விழா

தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழ்நாடு. தொழில்துறையில் தமிழகம் மிக வேகமாக முன்னேறிவரும் இந்த வேளையில், தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களைக் கௌரவிக்கும் நாணயம் விகடனின் `பிசினஸ் ஸ்டார் அவார்டு’ விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தமிழகத்தின் பத்து தொழிலதிபர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுத்தியது நாணயம் விகடன். 

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சி.ஐ.ஐ அமைப்பின் (தமிழ்நாடு) தலைவரும், பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி சிறப்புரை ஆற்றினார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அவர், ``தொழில் துறையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட இன்னும் நிறைய வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பினை எல்லாத் தொழில்முனைவர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார். 

நிகழ்வில் `டெக்னாலஜி அஸ் எ பிசினஸ் எனேபிலர்’ (Technology as a business enabler) என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தக் கலந்துரையாடல் தெளிவாக எடுத்துச் சொன்னது.

``ஏழையாக வாழ்க்கையைத் தொடங்கிய பலரும் விரைவிலேயே பிசினஸ்மேனாக வளர்ந்ததற்குக் காரணம், அவர்கள் டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டதுதான். இனிவரும் காலங்களில் டெக்னாலஜி இல்லாத தொழிலே இருக்க முடியாது” என்றார் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் ராஜேந்திரன் தண்டபாணி. 

``இனி எல்லாத் தொழிலிலும் டெக்னாலஜி முக்கியத்துவம் வகிக்கும். டிஜிட்டலைஸ் மூலம் பிசினஸில் அதிக வளர்ச்சி இருக்கும். மினிமம் முதலீடு… நிறைய டெக்னாலஜிதான் இப்போதைய பிசினஸ் டெக்னிக்” என்று முடித்தார் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் சங்கர் வேணுகோபால்.

``வேலை இழப்புகளைவிட டெக்னாலஜியால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும்” என்றார் எல் அண்ட் டி நிறுவனத்தின் பொன்மணிவண்ணன்.

இந்தக் கலந்துரையாடலை மிகச்சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் சென்னை ஐ.ஐ.டி-ன் எம்.பி.ஏ துறை பேராசிரியர் எ.தில்லை ராஜன்.  பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் நிபுணர்கள் பதிலளித்தனர்.  

கலந்துரையாடலை அடுத்து தமிழகத்தின் மிகச் சிறந்த தொழில்முனைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில், 'எம்.எஸ்.எம்.இ ஸ்டார் அவார்ட்' ஈரோட்டைச் சேர்ந்த டி.எம்.டபிள்யூ சி.என்.சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஒ என்.சண்முகத்துக்கு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எ.ஆனந்த் சுந்தரேசன் இந்த விருதினை வழங்கினார். பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு, சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கிய சண்முகம், இன்று 150 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் செய்துவருகிறார். 

அடுத்து, மிகச் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான `ஸ்டார்ட் அப் சாம்பியன்’ விருது `ஃப்ரெஷ்ஒர்க்’ நிறுவனத்தின் சி.இ.ஒ. கிரிஷ் மாத்ருபூதத்துக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சி.ஐ.ஐ-ன் தலைவர் பொன்னுசாமி, சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் தலைவருமான எல்.ராம்குமாரும் இணைந்து இந்த விருதினை வழங்கினார்கள். `ஃப்ரெஷ்ஒர்க்’ என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதன் மதிப்பை 10,500 கோடி ரூபாய்க்கு உயர்த்தியவர் கிரிஷ் மாத்ருபூதம்.

ரஜினிகாந்த் ரசிகரான கிரிஷ், விருதினைப் பெற்றுக்கொண்டு, ‘‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தை ஏறு’ என தனக்குப் பிடித்த ரஜினியின் பன்ச் லைனைச் சொன்னபோது அரங்கமே விசில் போட்டது. 

“என்னைப் போலவே, எங்க திருப்பூர்ல 200 பேருக்கு மேல இருப்பாங்க. எங்க ஊர் மக்களோட உழைப்புதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்த விருதைத் திருப்பூர் மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என நெகிழ்ந்தார் `ரைசிங் ஸ்டார் ஆன்ட்ரப்ரனர்’ விருது பெற்ற `ஈஸ்ட்மேன் எக்‌ஸ்போர்ட்ஸ் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரன். கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனும், அரவிந்த் ஐ கேர் சிஸ்டம் நிறுவனத்தின் புராஜெக்ஸ் இயக்குநரான டாக்டர் எஸ்.அரவிந்த் இந்த விருதினை வழங்கினார்கள். 

சோதனைகள் பல வந்தபோதும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்ற லைஃப் செல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமாருக்கு `ஃபீனிக்ஸ் ஆன்ட்ரப்ரனர்’ விருது வழங்கப்பட்டது. ஶ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் இந்த விருதினை வழங்கினார். 

‘‘மக்கள்தான் எனக்கான நம்பிக்கை. அவர்களுக்கே இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்’’ என்றார் ‘தான்’ அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் எம்.பி.வாசிமலை. `சோஷியல் கான்ஷியஸ்னஸ் ஆன்ட்ரப்ரனர்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. சுமார் 20 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 17 லட்சம் குடும்பங்கள் இந்த அறக்கட்டளையால் நன்மை அடைந்திருக்கின்றன. இதைச் சாத்தியமாக்கிய வாசிமலை ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ படித்தவர். படித்து முடித்தவுடனேயே பெரிய நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பதைவிட, ஏழை மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து, ‘தான்’ அறக்கட்டளையைத் தொடங்கினார் எம்.பி. வாசிமலை.

‘‘பணத்தின் மீது எனக்கு எப்போதுமே மதிப்பிருந்ததில்லை’’ என்று அவர் சொன்னபோது அரங்கம் கரகோஷம் எழுப்பி ஆமோதித்தது. தைரோகேர் நிறுவனர் டாக்டர் எ.வேலுமணி, சிறுபான்மை நலத்துறையின் தலைவர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும் வாசிமலைக்கு விருதினை வழங்கி கௌரவித்தனர்.

லாஜிஸ்ட்டிக்ஸ் துறையில் பல புத்தாக்க நடவடிக்கையின்மூலம் மிக வேகமான வளர்ச்சியினைக் கண்டுவரும் டி.வி.எஸ் லாஜிஸ்ட்டிக்ஸ் சர்வீஸஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.தினேஷுக்கு `பிசினஸ் இன்னோவேஷன்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை `ஈக்விட்டாஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் என்.ரங்காச்சாரி வழங்கினார்.

எந்தவொரு செயலுக்கும் வழிகாட்டுதல் அவசியம். தொழில்துறையில் அது மிகவும் அவசியம். அப்படி வழிகாட்டும் அமைப்புகளை ஊக்கப்டுத்தும் நோக்கில் `பிசினஸ் மென்ட்டார்’ (இன்ஸ்ட்டியூஷன்) விருது சென்னையைச் சேர்ந்த டை (TiE) அமைப்புக்கு அளிக்கப்பட்டது. ‘டைசென்னை’ அமைப்பின் தலைவர் சங்கரும், அதன் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வரும் விருதினைப் பெற்றுக்கொண்டனர். கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி இந்த விருதினை அளித்தார்.  

இளம் தொழில்முனைவர்களுக்குத் தொழில் வழிகாட்டும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பரத் கிருஷ்ண சங்கருக்கு ‘பிசினஸ் மென்ட்டார் விருது’ வழங்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பரத், தமிழகத்தின் பல தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டி வருகிறார் பரத். அவருக்கு ரானே நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹரீஸ் லக்‌ஷமன் வழங்கினார். மென்ட்டார் யார் எனத் தொகுப்பாளர் திவ்யா கேட்க, “எனது அம்மாதான் எனது மென்ட்டார்” என பரத் சொன்னது அரங்கம் ஆமோதித்து கரவொலி எழுப்பியது. ‘‘நண்பர்களுடன் பேசுவது உங்களுடன் பேசுவது போன்றது. அதுபோன்ற நண்பன்தான் உங்களின் ‘ஸ்ட்ரெஸ் ரிலீஃபர்’’ என்றார் பரத்.

ரூ.5,000 முதலீடு செய்து, தனது கடின உழைப்பினால் இன்றைக்கு 8500 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் செய்துவரும் `சுகுணா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனர் சௌந்தரராஜனுக்கு `செல்ஃப் மேட் ஆன்ட்ரப்ரனர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும் மனிதவளத் துறை பிரிவின் தலைமை அதிகாரியுமான ஆர்.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். பாரத் மேட்ரிமோனியின் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் இந்த விருதினை வழங்கினார். 

தொழில் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்ததற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது ஜி.ஆர்.டி நிறுவனத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டபோது அரங்கமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியது.  தனது குடும்ப உறுப்பினர்களுடன் மேடையேறி இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார் ஜி.ராஜேந்திரன்.

“என் குடும்பம் ரொம்பப் பெருசு. என்கிட்ட வேலை பாக்குறவங்க எல்லாருமே என்னோட குடும்பம்தான். என்அம்மாவுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’’ என ராஜேந்திரன் சொல்ல, பார்வையாளர்கள் பலரும் கண்கலங்கினர். முருகப்பா குழுமத்தின் ஆலோசகர் வெள்ளையன் விருதினை வழங்கிக் கௌரவித்ததுடன், சிறப்புரையும் ஆற்றினார்.

‘‘விருது பெற்றவர்கள் அனைவரைப் பற்றியும் ‘கேஸ் ஸ்டடி’ செய்ய வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களை ‘கேஸ் ஸ்டடி’யாக நாம் ஆராய்ச்சி செய்து படிப்பதைப் போல, நம் நாட்டு நிறுவனங்களையும் ‘கேஸ் ஸ்டடி’யாக நாம் படிக்க வேண்டும்’’ என்றார் வெள்ளையன்.

நம்பிக்கையும், உத்வேகத்தையும் அளிக்கும் விதமாகக் கோலாகலமாக நிறைவடைந்தது நாணயம் விகடனின் பிசினஸ் ஸ்டார் விருது விழா!