Published:Updated:

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!
பிரீமியம் ஸ்டோரி
கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

கண்காட்சி

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

கண்காட்சி

Published:Updated:
கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!
பிரீமியம் ஸ்டோரி
கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!
கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்தாவது கண்காட்சியாகக் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி வரை 4 நாள்கள் மஞ்சள் மாநகரமாம் ஈரோட்டில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ’ நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் உள்ள பரிமளம் மஹாலில் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் நான்கு நாள்களும் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதைகள், நாற்றுகள், பண்ணைக்கருவிகள், விசைத்தெளிப்பான்கள், சொட்டுநீர்ப் பாசனம், வீட்டுத்தோட்டம், இடுபொருள்கள், மரச்செக்கு எண்ணெய், இயற்கை உரங்கள், மதிப்புக்கூட்டிய வேளாண் பொருள்கள், புத்தகங்கள், கால்நடை அறிவியல் துறை, வேளாண் பல்கலைக்கழகம், கனிம வளம், சிறுதானிய உணவுகள்... எனக் குளுகுளு வசதி செய்யப்பட்ட வளாகத்தில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சோலார் மின் உற்பத்தி உபகரணங்கள், மரக்கன்றுகள், செல்போன் ஸ்டாட்டர்கள், சிறுதானிய உணவகம் உள்ளிட்ட பல திறந்தவெளி அரங்குகளும் கண்காட்சியில் ஜொலித்தன. 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

கண்காட்சி துவக்கவிழா நாளான ஆகஸ்ட் 31-ம் தேதியன்று... கருத்தரங்கு அமர்வில், ‘பஞ்சகவ்யா - பயிர்களுக்கும் மனிதர்களுக்கும்’ என்ற தலைப்பில் பேச மேடையேறினார், ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன். “பஞ்சகவ்யாவைப் பயிர்களின் இலைமேல் தெளிக்கும்போது வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது. இதனால், பயிரின் தண்டுகள் வலிமையாகவும் கிளைகள் பெரியதாகவும் வளர்கின்றன. வேர்கள் அடர்த்தியாகவும் ஆழமாக உட்சென்று பரவி வளர்கின்றன. பஞ்சகவ்யாவைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது பயிர்களில் மகசூல் கூடுகிறது. இதோடு உரமாகவும் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல்... ஆடு, மாடு, கோழி, முயல், பன்றி, மீன், இறால் ஆகியவற்றுக்கும் பஞ்சகவ்யா பயன்படுத்தப்படுகிறது. மாடுகளைச் சினைப்பிடிக்க வைப்பதற்கும் அஜீரணக் கோளாறுகளைச் சரி செய்வதற்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது, பஞ்சகவ்யா. கோழிகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோயையும் இது சரிசெய்யும். கால்நடைகளுக்கு மட்டுமல்லாமல், இது மனிதர்களுக்கும் மாமருந்தாகப் பயன்படுகிறது. பஞ்சகவ்யாவை மனிதன் உட்கொள்வதால் உடல் சுத்தமடைந்து நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கிறது.

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வளம்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் தலைவர் முனைவர் சோமசுந்தரம், பஞ்சகவ்யா குறித்து விரிவான ஆராய்ச்சி செய்தார். அப்போது அதிநவீனக் கருவியான ‘ஜி.சி.எம்.எஸ் கருவி’ மூலம், பஞ்சகவ்யாவின் அறிவியல் அடிப்படை கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவின் உயிர் வேதியியல் பண்புகளுக்கும், தாவர வளர்ச்சிகளுக்கும், வளர்சிதை மாற்றங்களுக்குமான தொடர்பு இதுமூலமாகத் தெரிய வந்துள்ளது. மக்காச்சோளம், பாசிப்பயறு, சூரியகாந்திப் பயிர்களில் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டன. அடியுரமாகச் சாண எரிவாயுக் கழிவுகளைக் கொடுத்தார்கள். விதைத்த 15, 30, 45 மற்றும் 60-ம் நாளில் 3 சதவிகிதம் இலைவழி ஊட்டமாக பஞ்சகவ்யாவைத் தெளித்தார்கள். இதில், மக்காச்சோளக் கதிரின் நீளம், சுற்றளவு, விதைகளின் எண்ணிக்கை, எடை,  அதிகரித்ததுடன், 12 சதவிகிதம் கூடுதல் மகசூலும் கிடைத்துள்ளது. தவிர, மாவுச்சத்து அளவு, கொழுப்புச்சத்து அளவு, சுவை, மணம் ஆகியவையும் அதிகரித்துள்ளன. ஒரு கிராம் பஞ்சகவ்யாவில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் அசோஸ் பைரில்லம் 10,000 கோடியும், தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசிட்டோஃபேக்டர் ஒரு கிராமுக்கு 9,000 கோடியும், மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கும் பாஸ்போ பாக்டீரியா ஒரு கிராமுக்கு 7,000 கோடியும், நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஒரு கிராமுக்கு 6,000 கோடியும் என்ற அளவில் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்’’ என ஆதரங்களுடன் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் டாக்டர் நடராஜன். 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

தொடர்ந்து ‘படைப்புழுத் தாக்குதலும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பேசினார், தைவான் நாட்டின் உலகக் காய்கறி ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர் முனைவர் சீனிவாசன்.

“படைப்புழு ஒரு பல்லுண்ணி. புற்கள் இனத்தைச் சேர்ந்த தாவரங்களைப் படைப்புழுக்கள் அதிகமாக உண்ணும். நெல், மக்காச்சோளம், சிறுதானியம், சோளம் எனப் பல பயிர்களின் இலைகளை உண்ணும். அவை கிடைக்காத நேரங்களில் காய்கறிகள், பழமரங்கள் போன்றவற்றை நோக்கியும் இவை வருகின்றன. இலையின் மேற்புறத்தில் உள்ள பச்சையத்தை உறிஞ்சி உண்ணும் குணமுடையவை இப்புழுக்கள். இளம்புழுக்கள் இலைகளில் துளையிட்டும், இலை ஓரங்களிலிருந்து உட்புறமாகவும் உண்கின்றன. வளரும் குருத்துகளையும் இவை உண்கின்றன. குருத்துகளில் உள்ள துளையுள்ள இலைகள் மற்றும் காய்ந்த நிலையை வைத்துத்தான் இப்புழுக்களின் தாக்குதலைக் கண்டறிய முடியும். 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

படைப்புழுக்களை உண்டாக்கக்கூடிய பூச்சிகள் 2,000 கிலோமீட்டர் வரை பறந்து செல்லக்கூடிய தன்மை கொண்டவை. இப்பூச்சிகள் இலையின் மேற்புறத்தில் முட்டையிட்டு முடிக்கற்றையால் மூடிவிடும். அது பார்ப்பதற்குப் பஞ்சு போன்று காட்சியளிக்கும். ஒரு முறைக்கு 150 முதல் 200 முட்டைகள் வரை இடும். இது பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கும் ஓர் உயிரினம். இப்பூச்சிகள் இடும் முட்டைகள் 3 நாள்களுக்குள் பொரிந்துவிடும். சிலவகைப் படைப்புழுக்கள்தான் இருக்கும் தாவரத்துக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளன. அமெரிக்கப் படைப்புழுக்கள் எப்போதும் பழுப்பு நிறத்தில் மட்டுமே காணப்படும்.

இப்புழுக்களை உருவாக்கும் அந்துப்பூச்சிகள், தமிழ்நாட்டில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன. இப்பூச்சிகளை இனக்கவர்ச்சிப் பொறிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இயற்கை ஒட்டுண்ணிகள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். உயிரிப் பூச்சிக்கொல்லியான பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியா, பவேரியா பூஞ்சணங்கள், என்.பி.வி வைரஸ் கரைசல்கள் மூலம் இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லியால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது” என்று விளக்கமாகப் பேசினார், முனைவர் சீனிவாசன். 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

அடுத்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் மூத்த விஞ்ஞானி முனைவர் உதயகுமார், ‘நீங்களே தயாரிக்கலாம் இ.எம்’ என்ற தலைப்பில் பேசினார்.

“எஃபக்டிவ் மைக்ரோ ஆர்கனிசம் என்பதுதான், ‘இ.எம்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதைத்தமிழில் ‘திறன்மிகு நுண்ணுயிரி’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த இ.எம் கரைசலை நாமே எளிதாகத் தயார் செய்யலாம். 12 அங்குல நீளம், 8 அங்குல அகலம், 4 அங்குல உயரத்தில் ஒரு மரப்பெட்டியைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதனுள் நன்கு வேகவைத்த அரைக்கிலோ பாரம்பர்ய அரிசி சாதத்தைப் போட்டு மூடி, வெள்ளைத் துணி கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும். நிலத்தில் வளமான பகுதியில் குழியெடுத்து அக்குழிக்குள் இப்பெட்டியை வைத்து வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும். 5 நாள்கள் கழித்து எடுத்து, அதிலுள்ள நொதித்த சாதத்தின் அளவுக்குச் சம எடையில் வெல்லம் சேர்த்து, ஒரு மண்பானையில் போட்டு இருட்டான அறையில் 3 நாள்கள் வைத்தால், அதிலிருந்து ஒரு புளிப்பான திரவம் கிடைக்கும். இந்தத் திரவத்திலிருந்து 1 லிட்டர் அளவு எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒருவாரம் வைத்திருந்தால் இ.எம் திரவம் தயாராகிவிடும்.

இன்னொரு முறையிலும் இ.எம் கரைசலைத் தயாரிக்கலாம். பாரம்பர்ய அரிசி களைந்த தண்ணீருடன், சமஅளவு நாட்டுப் பசும்பால் கலந்து இருட்டறையில் 3 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு அந்தத் திரவத்தில் சம அளவு வெல்லம் சேர்த்து 5 நாள்கள் வரை வைத்திருந்தால் இ.எம் திரவம் கிடைக்கும். இதில் 1 லிட்டர் திரவத்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

ஒரு லிட்டர் தாய் இ.எம் திரவத்திலிருந்து 100 லிட்டர் செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல் தயார் செய்யலாம். 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தமான பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 94 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் 5 கிலோ வெல்லம் அல்லது மொலாசஸைக் கலக்க வேண்டும். இவை விலை அதிகம் என நினைத்தால் வெள்ளைச் சர்க்கரையைக் கூடப் பயன்படுத்தலாம். அதனுடன் ஒரு லிட்டர் தாய் இ.எம் கரைசலைக் கலக்க வேண்டும். டிரம்மை நிழலான பகுதியில் காற்று உள்ளே புகாதபடி மூடி வைக்க வேண்டும். தினமும் ஒருமுறை மூடியைத் திறந்து மூட வேண்டும். இவ்வாறு ஒருவாரம் வரை செய்தாலே செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல் தயாராகிவிடும். இந்தக் கரைசலில் நல்ல மணம் வந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். துர்நாற்றம் வீசினால் பயன்படுத்தக் கூடாது” என்றார் முனைவர் உதயகுமார்.

மதிய அமர்வின் நிறைவுப் பேச்சாளராக மேடையேறினார், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.டி.சுப்பு. இவர், ‘வேஸ்ட் டீகம்போஸர் தயாரிப்பும் பயன்பாடும்’ என்ற தலைப்பில் பேசினார். “கழிவுகளை மட்க வைத்து அதன் மூலம் மண்ணின் வளத்தைக் கூட்டப் பயன்படும் திரவம்தான் வேஸ்ட் டீகம்போஸர். மட்க வைப்பதற்கு மட்டுமல்லாமல், அனைத்துப் பயிர்களுக்கும் இதனை வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தலாம். ஒருமுறை வேஸ்ட் டீகம்போஸரை வாங்கி அதை வைத்தே தொடர்ந்து பெருக்கிக் கொள்ளலாம். இதைப் பாசன நீரில் நேரடியாகக் கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம். 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 200 லிட்டர் தண்ணீர், 2 கிலோ வெல்லம், 1 பாட்டில் வேஸ்ட் டீகம்போஸர் ஆகியவற்றைக் கலந்து, 7 நாள்கள்  தினமும் கலக்கி வந்தால், செறிவூட்டப்பட்ட வேஸ்ட் டீகம்போஸர் தயாராகிவிடும். இக்கரைசலை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இதைத்தொடர்ந்து 200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 180 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் 20 லிட்டர் செறிவூட்டப்பட்ட வேஸ்ட் டீகம்போஸர் கரைசல், 2 கிலோ வெல்லம் ஆகியவற்றைக் கலந்து 7 நாள்கள் தினமும் கலக்கி வந்தால் வேஸ்ட் டீகம்போஸர் தயாராகிவிடும். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பழக்காடி, கனஜீவாமிர்தம் ஆகியவற்றுடன் சேர்த்தும் இதைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் மண்ணில் வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும். இதன் மூலம், காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகள், காய்ந்த இலைதழைகள்... என அனைத்தையும் மட்க வைத்து உரமாக்க முடியும்” என்று செய்முறையுடன் விளக்கமளித்தார், டி.டி.சுப்பு. இரண்டாம் நாள் பேச்சாளர்களின் உரைவீச்சுகள் அடுத்த இதழில்...

இ.கார்த்திகேயன், துரை.நாகராஜன் - படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

எளிமையாகக் கற்றுக்கொண்டோம்! 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

பாமா சங்கர், சேலம்: “சேலம் மாவட்டம் ஆத்தூர்ல இருந்து வர்றேன். விழாவுல பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசுன மண்புழு உரம் தயாரிக்கிறது குறித்த விளக்கம் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. ‘பஞ்சகவ்யா சித்தர்’ நடராஜன் பேச்சு, இயற்கை உரம் தயாரிச்சு விவசாயம் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. பசுமை விகடன்ல கிடைச்ச தகவல்களை வெச்சுதான், இயற்கை உரங்களைத் தயாரிச்சுட்டு வர்றேன். இங்க எளிமையான முறையில இயற்கை உரம் தயாரிக்குறதைக் கத்துக்கிட்டேன். எப்பவுமே இயற்கை விவசாயம் சம்பந்தமான தகவல்களைக் கொடுத்து உதவுற பசுமை விகடனுக்கு நன்றி.” 

கைகொடுத்த இயற்கைக் கருத்தரங்கு!

செல்வராஜ், உடுமலைப்பேட்டை: “கண்காட்சியில நிறைய தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். வேஸ்ட் டீகம்போஸர் பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது. ரொம்ப உபயோகமா இருந்துச்சு. அடுத்த கண்காட்சிக்கும் வருவேன்.”