பிரீமியம் ஸ்டோரி

தேவதைகளைக் கொண்டாடும் விழா. ஆழ்கடல் போன்று வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மேடை, விருது பெற வந்திருந்த நம்பிக்கை மனிதிகள், அவர்களை உற்சாகப்படுத்தக் கூடியிருந்த  இளைஞிகள் என ‘அவள் விருதுகள்’ அரங்கம் மகளிர் திருவிழாவாகவே மாறியிருந்தது. விழாவின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணங்கள் இங்கே!

தேவதைகள் திருவிழா 2018

*பண்பலைத் தொகுப்பாளர் ராஜவேலுவும், சன் டிவி விஜே அபிராமியும் ஒட்டுமொத்த நிகழ்வையும் கலகலப்பாகவும் கலக்கலாகவும் தொகுத்து வழங்கினார்கள்.

*நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு ‘கஜா’ பேரழிவு குறித்தும், மக்கள் மீண்டுவர நாம் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் விகடனின் காணொலி மேடையில் திரையிடப்பட்டது. பாதிப்பின் காட்சிகளில் சில நிமிடங்களுக்கு அரங்கமே மெளனத்தில் மூழ்கியது.

*குஜராத்திப் பெண்களின் பாரம்பர்ய விளக்கு நடனத்தோடு  அரங்கமே விளக்கொளியில் ஆரஞ்சு வண்ணம் பூசிக்கொள்ள விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. 

தேவதைகள் திருவிழா 2018

*`கலைநாயகி’  விருதைப்பெற மேடையேறினார் அருணா சாய்ராம். அவருக்கு பத்மஸ்ரீ விருதுபெற்ற தனஞ்செயன் - சாந்தா தம்பதியர் விருதினை வழங்கினர். ‘மாடு மேய்க்கும் கண்ணே... நீ போக வேண்டாம் சொன்னேன்...’ என மேடையிலேயே அருணா சாய்ராம் உருகிப்பாட, சாந்தாவும்- தனஞ்செயனும் பரதநாட்டியமாட, தெய்விகத் தருணமாக அமைந்தது. 

தேவதைகள் திருவிழா 2018

*ஐ.டி தொழிலாளர் நலனுக்காகத் தொடர்ந்து இயங்கிவரும் வசுமதிக்கு விருது வழங்க, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலிக்க மேடை ஏறினார் சீமான். “உங்களுடைய மேடைப் பேச்சுகளுக்கு எல்லாம் சமூக வலைதளங்கள்ல ஒரு பக்கம் பாராட்டும் இன்னொரு பக்கம் கிண்டலும் கிடைக்குதே. அதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீங்க?” என ராஜவேலு கேட்க, “தம்பி, மாமேதை லெனின் என்ன சொல்றார்னா, ‘உன்னை விமர்சிக்கிறவன்கிட்ட உன்னை நிரூபிக்கப் போராடாதே’ன்னு சொல்றார். விவேகானந்தர் என்ன சொல்றார்னா ‘மத்தவங்க உன்னைப் புகழும்போது வாயையும், இகழும்போது காதையும் பொத்திக்க’ன்னு சொல்றார். அதைத்தான் நான் செய்றேன்’’ என்று அமைதிவழியில் பேசிவிட்டு அன்புடன் விருதை வழங்கினார் சீமான்.

தேவதைகள் திருவிழா 2018

*“விகடனுடனான என் தொடர்பு சர்ச்சையில்தான் தொடங்கியது” எனப் பேச்சைத் தொடங்கினார் இலக்கியச் செல்வி விருதுபெற்ற கவிஞர் குட்டி ரேவதி. தான் எழுதியதில் மிகவும் பிடித்த பாடலாக `நெஞ்சே எழு’ என்கிற பாடலைக் குறிப்பிட்டார். விரைவில் திரைப்பட இயக்குநராகப்போகும் செய்தியையும் மேடையிலேயே அறிவித்தார் குட்டிரேவதி.

தேவதைகள் திருவிழா 2018

*சின்னப்பொண்ணு, வேல்முருகன், ஆண்டனிதாசன், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, மதிச்சியம் பாலா என சமகால நாட்டுப்புறப் பாடல் பிரபலங்கள் அத்தனை பேரும் மொத்தமாக மேடையேற... ஆச்சர்யத்தில் நிறைந்தது அரங்கு. அவர்கள் ஒன்றுகூடியது நாட்டுப்புறப் பாடல்களின் அடையாளமாகத் திகழும் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு ‘கலை நாயகி’ விருது வழங்குவதற்காக! ``நாட்டுப்புறப் பாடல்கள் எனும் கலை என்னுடைய இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறைன்னு எப்படித் தொடருதுன்னு பார்த்தீங்களா’’ என மேடையில் நின்ற இளம் பாடகர்களைச் சுட்டிக்காட்டிய விஜயலட்சுமி தன்னுடைய பாணியில் கஜா பேரழிவைப் பற்றி ஒரு பாடல் பாடியது உருக்கம் சேர்த்தது.   

தேவதைகள் திருவிழா 2018

*தலித் மக்களின் கல்விக்காகத் தொடர்ந்து இயங்கிவருபவர் அபர்ணா கிருஷ்ணன். அவருக்கு விருது வழங்க வந்தார் இயக்குநர் கோபி நயினார். “சமூக விடுதலை என்பது கல்வியின் வழியாகத்தான் கிடைக்கும். ஆனால் நம் நாட்டில் தாய்மொழிவழிக் கல்வியே குறைந்து வருகிறபோது சமூக விடுதலை எங்கிருந்து சாத்தியம்? தாய்மொழியை முன்னிலைப்படுத்தாத கல்வி, கல்வியே அல்ல” என்று கோபி முழங்க, கைகள் தட்டி ஆமோதித்தது அரங்கு. 

தேவதைகள் திருவிழா 2018

*மாண்புமிகு அதிகாரிக்கான விருதை அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு வழங்க மேடையேறினார் ஜோதிகா. “என்னோட இருபத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல இதுவரை நான் பண்ணுன விஷயங்களை நினைச்சுப் பெருமைப்படுறேன். நாம பண்றது சரின்னு தெரிஞ்சா எதுக்குமே, யாருக்குமே பயப்படாமல் தைரியமா பண்ணணும்” என்றார் அமுதா. தான் பெண்ணுரிமை சார்ந்த படங்களில் நடிக்க ஆரம்பித்ததற்கு அமுதா ஐ.ஏ.எஸ் ஒரு முக்கிய காரணம் என்றார் ஜோ.  ``அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு உங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அரவணைப்பு கொடுங்கள்’’ என்று தொகுப்பாளர் ராஜவேலு ஜோதிகாவிடம் கேட்க, ஜோதிகா, அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் கால்களிலேயே விழுந்து வணங்கியது யாரும் எதிர்பாராத நெகிழ்வுத் தருணம். 

தேவதைகள் திருவிழா 2018

*`தமிழன்னை’ விருது பெற்றார் 92 வயதான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். காந்தி, வினோபா பாவேவுடன் தனக்கு இருந்த பரிச்சயம், கீழவெண்மணிப் படுகொலை நடந்த நள்ளிரவில் செய்வதறியாது வானம் பார்த்து அமர்ந்துகொண்டிருந்த தருணம் என, தன் வாழ்க்கைப் பயணத்தை நடுங்கும் குரலில் சொன்னபோது அரங்கமே துயர மௌனத்தில் மூழ்கியது. கிருஷ்ணம்மாளுக்கு இந்து என்.ராமும் நடிகை ரேவதியும் விருதினை வழங்கினர். 

தேவதைகள் திருவிழா 2018

*சித்தம்மாவுக்குப் பசுமைப் பெண் விருது வழங்கிய நடிகை விஜி சந்திரசேகர் ‘உண்மையான அழகி நான் இல்லை. இவங்கதான். அழகுங்கிறது முகத்தில் இல்லை. செயல்லதான் இருக்குன்னு நம்புறேன்” என்றார்.

*லிட்டில் சாம்பியன் விருதுவென்ற சிறுமி ஆஷிகா மேடையில் சந்தோஷத்தைப் பகிரும்போது வார்த்தைகள் வராமல் உடைந்து அழுதது அவர் வெற்றியை இன்னும் அர்த்தம் வாய்ந்ததாக ஆக்கியது. வட்டிக்குக் கடன் வாங்கித் தன் பெண்ணை வெளிநாட்டுப் போட்டிக்கு அனுப்பும் நிலையை அவரின் தந்தை பகிர்ந்துகொண்டார். ஆஷிகாவுக்கு வானதி சீனிவாசன் விருது வழங்கினார். 

தேவதைகள் திருவிழா 2018

*சில்வர் ஸ்கிரீன் குயினுக்கான விருதை  கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார். மீனா, சிம்ரன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரியின் மகள் சாமுண்டேஸ்வரி மூவரும் இணைந்து விருதினை வழங்கினர். “சிம்ரன் கிட்ட விருது வாங்கணும்கிறது என்னோட கனவு. எனக்கு சினிமா தவிர வேற எதுவும் தெரியாது. இன்னைக்கு என்னோட சேர்ந்து இந்த விருது வாங்கினவங்க செய்த சாதனையெல்லாம் பார்க்கும்போதுதான் சினிமாவைத்தாண்டி மிகப்பெரிய உலகம் இருக்குன்னு புரிஞ்சிக்கிறேன். இவங்களோட சேர்ந்து விருது வாங்குறதுல நான் பெருமைப்படுறேன்” என்றார். தில்லானா... தில்லானா... பாடலுக்கு மீனா ஆட, அவருடன் சேர்ந்து கீர்த்தியும் சிம்ரனும் ஆட, சில்வர் குயின்களின் ரணகள நடனத்தில் அதகளமானது மேடை. 

தேவதைகள் திருவிழா 2018

*‘காதலே காதலே தனிப்பெருந்துணையே’ என்ற பாடலின் இசை அரங்கத்தில் ஒலித்ததுமே ‘96’ ஆர்மி ஆர்ப்பரித்தது. எவர்கிரீன் விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட, அவர் வர இயலாத சூழலால் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் விருதைப் பெற்றுக்கொண்டார். “என் பொண்ணு நிறைய ஏற்ற இறக்கங்களை வாழ்க்கையில சந்திச்சிருக்கா. அதையெல்லாம் தாண்டி அவ இன்னைக்கு வரை சக்சஸ்ஃபுல்லா இருக்கான்னா அவளோட மனவலிமைதான் காரணம்’’ என்றார். 

தேவதைகள் திருவிழா 2018

*சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை ‘காலா’வில் செல்வியாகக் கலக்கிய ஈஸ்வரி ராவுக்கு வழங்கினார் இயக்குநர் பா. இரஞ்சித். `` ‘காலா’ படத்தில் செல்வி கதாபாத்திர உருவாக்கத்திற்கு என் அம்மாதான் முன்மாதிரி” என்றார் ரஞ்சித்.  “நான் திரும்பவும் சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. இயக்குநருக்கும், ரஜினி சார்க்கும் ரொம்ப நன்றி” என்று மேடையிலிருந்து இறங்கப்பார்த்த ஈஸ்வரி ராவை, காலா படத்திலிருந்து ஒரு வசனத்தைப் பேசச் சொல்ல, கண்களை மூடி யோசித்து, ``உடனே எனக்கும் தின்னெல்வேலிக்கு ஒரு டிக்கெட் போடு’’ என செல்வியாகவே மாற, அரங்கினுள் பறந்தன பல ஆயிரம் ஹார்ட்டீன்கள்.

தேவதைகள் திருவிழா 2018

*ராதிகாவுக்குத் திரைத்தாரகை விருது வழங்குவதற்காக கே.பாக்யராஜ், அம்பிகா, பூர்ணிமா, சரத்குமார் ஆகியோர் மேடையில் ஏறினர். ராதிகா குறித்து நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பாக்யராஜ். விருது பெற்ற ராதிகாவிடம் “உங்கள் அப்பா எம்.ஆர். ராதா நடித்ததில் எந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள்’’ எனக் கேட்டதற்கு, “ரத்தக்கண்ணீர் படம் பற்றி நிறைய பேர் கேட்பாங்க. அதுவொரு கிளாசிக். யாரை வெச்சும் ரீமேக் பண்ண முடியாது. அப்பா நடிச்ச படம் ஒண்ணு ரீமேக் பண்ணணும்னா ‘பலே பாண்டியா’ பண்ணுவேன்” என்றார். ராதிகாவுக்கு விருது வழங்கும் நிகழ்வை அவ்வப்போது சரத்குமாரே தூய தமிழில் தொகுத்து வழங்கி, கலகலக்கவைத்தார்.

*இரும்புப்பெண்மணி விருதை மருத்துவர் பிரேமா தன்ராஜுக்கு வழங்கிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பேசுகையில், “விகடன் ஒரு விருது வழங்குகிறது என்றால், அதை யாருக்கு வழங்குகிறோம், ஏன் வழங்குகிறோம்; அவ்விருதைக் கொடுப்பதன் மூலம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதில் கவனமாக இருப்போம். அதுதான் விகடன் விருது” என்றார்.

புதுமைப்பெண், வைரல் ஸ்டார், செயல்புயல், சாகச மங்கை என... பல துறைகளில் சாதித்த பெண்களின் ஆனந்தக்கண்ணீரில் மின்னியது அன்றைய மாலைப்பொழுது.

தமிழ்ப்பிரபா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு