Published:Updated:

`சென்னை சுட்டிகளுக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது!' - அமெரிக்காவில் களைகட்டும் காந்திஜி விழா

`சென்னை சுட்டிகளுக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது!' - அமெரிக்காவில் களைகட்டும் காந்திஜி விழா
`சென்னை சுட்டிகளுக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது!' - அமெரிக்காவில் களைகட்டும் காந்திஜி விழா

காத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வருகிற ஜூலை மாதம் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் இன்டர்நேஷனல் கோரல் ஃபெஸ்டிவலில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு காந்தியின் பாடலைப் பாடி அவருக்கு மரியாதை செய்ய இருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த 18 சுட்டிக் குழந்தைகள். 

கோரல் சிங்கிங் டீமைச் சேர்ந்த சுட்டி அவந்திகாவின் அம்மா துர்காதேவியிடம் பேசினோம். ``ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவுல இன்டர்நேஷனல் கோரல் ஃபெஸ்டிவல் நடத்துறாங்க. ஏற்கெனவே, கடந்த வருஷம் சிங்கப்பூர்ல நடந்த கோரல் ஃபெஸ்டிவல்ல 'கமலா மியூசிக் ஸ்கூல்' டீமைச் சேர்ந்த எங்க பசங்க 23 பேர் கலந்துக்கிட்டு மூன்றாவது பரிசு ஜெயிச்சாங்க. அந்த ஊக்கத்தில்தான் அமெரிக்காவில் நடக்க இருக்கிற ஃபெஸ்டிவலுக்கும் அவங்களை அப்ளை பண்ணச் சொன்னோம். இந்தியா சார்பா பல்வேறு கோரல் சிங்கிங் டீமைச் சேர்ந்தவர்கள் அப்ளை செய்திருக்கிறார்கள். ஆனா, அதிர்ஷ்டவசமா எங்களை செலக்ட் பண்ணியிருக்காங்க. இது ரொம்பப் பெரிய வாய்ப்பு. இந்தியாவை வழிநடத்தி அங்கே கலந்துக்கப் போற எங்க பசங்க எல்லோருமே 14 வயசுக்கு உட்பட்டவங்கதான். இவங்க எல்லாருக்குமே மந்தைவெளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி என்பவர்தான் ஆரம்பத்துல இருந்தே பாட்டு ட்ரெயினிங் கொடுத்திட்டு இருக்காங்க” என்றவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

``மனிதனின் பிறப்பு, நகர்வு, அடையாளம் என மூன்று தலைப்புகளில் பாடல் பாடச் சொல்லியிருக்காங்க. அதுதவிர, நிகழ்ச்சியின் இறுதி நாளில் காந்திஜியின் 150வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுறதால அன்று காந்திஜியின் ஒரு பாடலைப் பாடவும் சொல்லியிருக்காங்க. இப்போ நாங்களே காந்திஜி பத்தி புதுசா ஒரு பாடல் ரெடி பண்ணியிருக்கோம். அதைத்தான் பசங்க அங்கே பாடப் போறாங்க. அதை நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்குங்க. ஆனாலும்கூட, அமெரிக்கா வரை போய்ட்டு வர்றதுக்கான செலவுகள் இருக்கிறதால சில பெற்றோர்கள் பின்வாங்குறாங்க. சிலர் நம்ம பசங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சு அவங்களாவே பணத்தேவையை சரி செய்ய முயற்சி எடுத்துக்கறாங்க. 

பசங்க அமெரிக்கா போறதைப் பத்தி கேள்விப்பட்டு ஸ்பான்ஸர்ஸ் சிலரும் தானே முன்வந்து உதவுறதா சொல்லியிருக்காங்க.  நிகழ்ச்சியில் கலந்துக்கப் போற பிள்ளைகளுக்கு மட்டும் ஸ்பான்ஸர்ஸ் கிடைத்தாலே போதும். ஏன்னா, இந்தியா சார்பா நம்ம சென்னை பசங்களுக்குக் கிடைச்சிருக்குற இந்த வாய்ப்பு பொருளாதார சூழலால் தடைபட்டுடக்கூடாதுன்னு நினைக்கிறோம்” என்கிறார் பொறுமையாக.