Published:Updated:

5 அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு!- வளையக்காரனூரில் நடந்த கோலாகலம்

5 அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு!- வளையக்காரனூரில் நடந்த கோலாகலம்
5 அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு!- வளையக்காரனூரில் நடந்த கோலாகலம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூரில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இந்தப் போட்டியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர். சரோஜா, கே.சி.கருப்பணன், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் அமைச்சர் தங்கமணி தலைமையில் உறுதிமொழியை ஏற்றார்கள். 

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 470 காளைகளும், 348 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அழைத்து ஓட விடப்பட்டது. காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்துச் சென்றன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது சில காளைகள் பிடிக்க முயன்ற காளையர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடியது. இதில் வீரர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர். 

போட்டி நடைபெறும் மைதானத்தில் மாடுபிடி வீரர்கள் வருவதற்குத் தனியாக பாதை, மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்புத் தடுப்பு, காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு தனியாக பந்தல், மருத்துவக் குழுவினர், அவசர சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது.