Published:Updated:

46 வாரங்கள் கடும் பயிற்சி!- தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த 485 இளம் ராணுவ வீரர்கள்

46 வாரங்கள் கடும் பயிற்சி!- தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த 485 இளம் ராணுவ வீரர்கள்
46 வாரங்கள் கடும் பயிற்சி!- தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த 485 இளம் ராணுவ வீரர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில், நூற்றாண்டுகளைக் கடந்த ராணுவப் பயிற்சி முகாம் உள்ளது. இந்த  ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட  மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுவார்கள்.

46 வாரங்கள் கடுமையான பயிற்சிபெற்ற ராணுவ வீரர்களில் 485 பேர், பயிற்சி முடித்து, நாட்டிற்குத் தன்னை அர்ப்பணிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், தேசியக்கொடி மீது சத்தியம் செய்து, உப்பு உட்கொண்டு உறுதிமொழி ஏற்று, சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 

ராணுவ பேண்டு இசைக்கேற்றவாறு வீரர்களின் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்ட டெல்லி ராணுவ தலைமையக மேஜர் ஜெனரல் பிஸ்ட் [G.S. BISHT],  மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட  ஐந்து வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

பயிற்சி முடித்த வீரர்களிடம் பேசுகையில், இந்த இளம் ராணுவ வீரர்கள், கடினமான பயிற்சி மேற்கொண்டு இந்திய ராணுவத்திற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்”. நிகழ்ச்சியில், வெல்லிங்டன் ராணுவ மைய  பிரிகேடியர்  கமான்டென்ட் சங்கவான் மற்றும் பயிற்சி கமான்டென்ட்  உடன் இருந்தனர். மேலும், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய் அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட பெற்றோர்கள்,  நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர்.  பயிற்சி  முடித்த வீரர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில், உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.