ஸ்பெஷல் 1
Published:Updated:

காஸ்ட்லி டூர்... ஆனால், சந்தோஷம்?

உறவே வா... உற்சாகம் தா! வாசகிகள்  பக்கம்

பரிசு

காஸ்ட்லி டூர்... ஆனால், சந்தோஷம்?

 250

கும்பகோணத்தில் பெரிய கூட்டுக் குடும்பம் எங்களுடையது. சிறுவயதில் கோடை விடுமுறையின்போது அங்கே நாங்கள் அடித்த லூட்டிகள், ஒவ்வொரு சம்மரிலும் நினைவுக்கு வந்து, ஏக்கம் தரத் தவறுவதில்லை!  

எட்டு பையன்கள், ஐந்து பெண்கள் என்று பிள்ளைகள் மட்டுமே 13. 'வீட்டில் இரண்டுக்கு மேல் வாண்டுகள் சேர்ந்துவிட்டாலே சமாளிக்க முடியவில்லையே... நம்மையெல்லாம் எப்படி சமாளித்தார்கள்?!' என்று வியப்புடன் நினைத்துக்கொள்கிறேன்.

வீட்டின் பக்கத்திலேயே காந்தி பார்க். எங்களுக்காகவே கட்டிவிட்டது போல, அதை மணல் மணலாக அனுபவிப்போம். எங்களின் அத்தனை ஆட்டம், பாட்டம், சண்டை, சமாதானங்களுக்கும் அந்த பார்க் சாட்சி! இரண்டாவது தம்பி சுகுமார், மிகவும் குறும்புக்காரன். அதேசமயம், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கர்ணன். 10 வயதிருக்கும்போது, கோடை விடுமுறையில் ஒருநாள் வெளியில் சென்றவன், சட்டையில்லாத வெற்றுடம்புடன் திரும்பி வந்தான். ''என்னடா..?'' என்று வீடே பதற, ''பாவம், அந்த ஏழைப் பசங்களுக்கு ஒரு சட்டைகூட உருப்படியா இல்லையாம். அதனால கொடுத்துட்டேன்!'' என்றான். தன்னுடையது மட்டுமில்லாமல், சித்தப்பா பையன், அத்தைப் பையன் சட்டைகளையும் ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவான்.\

காஸ்ட்லி டூர்... ஆனால், சந்தோஷம்?

மொட்டை மாடியில் சினிமா போட்டுக் காண்பிக்கும்போது, நைஸாக குடிசைக் குழந்தைகளையும் மேலே கூட்டிவந்து உட்கார வைப்பான். பாட்டியிடம் கையில் வாங்கும் சாப்பாடு, தின்பண்டங்கள் எல்லாம் அவர்களுக்கும் நைஸாக 'பாஸ்’ செய்வான். ''இரு இரு... மாட்டிவிடறோம்!'' என்று நாங்கள் மிரட்ட, அவன் கெஞ்ச என... எப்போதும் அவனுடன் வம்பு செய்து சிரிப்போம். இப்போது அவன் உயிருடன் இல்லை. ஆனால், அவனின் இந்த 'கோடை கொடை’யை சொல்லித்தான், எங்கள் குழந்தைகளுக்கு நீதிபோதனை வகுப்பெடுக்கிறோம் இப்போது!

என்னதான் இன்று பல ஆயிரங்கள் செலவழித்து, ரிசார்ட்களில் தங்கி வந்தாலும், பந்து, பல்லாங்குழி, தாயக்கட்டம், ஆடு - புலி ஆட்டம் என சித்தப்பா, பெரியப்பா, அத்தை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டின் ருசியும், மகிழ்ச்சியும், நம் குழந்தைகளுக்கு இன்றைய 'காஸ்ட்லி டூர்'களில் நிச்சயம் கிடைக்காதுதான்!

- மாலதி நாராயணன், பெங்களூரு