Published:Updated:

10 பாலாக்கள் சேர்ந்து படம் எடுத்தால்..?!

ஆர்.சரண்

10 பாலாக்கள் சேர்ந்து படம் எடுத்தால்..?!

ஆர்.சரண்

Published:Updated:

ஸ்வீட் இல்லாமல்கூட தீபாவளி இருக்கும். ஆனால், சினிமா இல்லாமல் இருக்காது தமிழ்நாடு. ஏன், இந்தியாவேகூட இப்படித்தான். கண்டதும் காதல், இழுத்துக்கிட்டு ஓடல், அரிவாளைத் தூக்கிகிட்டு துரத்தல், தாதாவை போட்டுத்தள்ளுதல்... பெரும்பாலும் இப்படிப்பட்ட படங்களாகவே பார்த்துப் பார்த்துப் புளித்துப்போய்க் கிடக்கும் நமக்கு, இந்த ஃபாரின் பார்ட்டிகள் என்ன மாதிரி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொஞ்சம் தெரிந்துகொண்டால்... நம்ம ஊர் 'புளிப்பு' பெரிசா... ஃபாரின் 'புளிப்பு' பெரிசா என்று பட்டிமன்றம் நடத்த வசதியாக இருக்கும். நான் பார்த்து உணர்ந்த வகையில் உலக சினிமாக்களை ஆறு வகைகளாகப் புரிந்து வைத்திருக்கிறேன். இதில் இந்திய சினிமாக்கள் உங்களுக்கும் தெரிந்ததுதான். மீதி ஐந்தை பட்டியலிட்டுள்ளேன். உங்களுக்கும் இதே புரிதல் இருந்தால்... சொல்லுங்கள் ஸேம் ஸேம் தீபாவளி ஸ்வீட்!

1.  ஹாலிவுட் சினிமாக்கள்

படம் ஆரம்பித்ததும் ஒரு முரட்டு மிருகம் அல்லது ஒரு வேற்றுக்கிரக ஜந்து ஊரையோ, ஆளையோ கொடூரமாய்த் தாக்கி அழிக்கும். கட் பண்ணினால், அடுத்த ஸீனில் முதல் நாள் அடித்த சரக்கின் ஹேங் ஓவரில் தூங்கி எழுந்திருப்பார் ஹீரோ. இந்த அழுக்கு ஹீரோ எப்படி அந்த ஆபத்தான 'கில்லிங் அசைன்மென்ட்’டினை அசால்ட்டாக முடிக்கிறார் என்பதே அடுத்தடுத்த காட்சிகளாய் விரியும். நடுநடுவே 'ஓடுங்க அது நம்மளைத் தாக்க வருது!’, 'அதோட குட்டி கோபமா இருக்கு!’ போன்ற டயலாக்குகள் டப்பிங் உபாயத்தால் காதில் கேட்கும். இப்படி கொசுவில் ஆரம்பித்து டைனோசர் வரை ஓர் உயிரினத்தைப் பார்த்து பயந்து ஓடுவதைத்தான் பெரும்பாலான படங்களில் காட்டி பயமுறுத்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 பாலாக்கள் சேர்ந்து படம் எடுத்தால்..?!

கூர்ந்து கவனித்தால், படத்தில் மொக்கைப்பசங்க கேங்கில் ஒரே ஒரு கறுப்பின இளைஞர் இருப்பார். படு காமெடிப் பார்ட்டியான அவர்தான் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களை ஆரம்பத்துலயே கணித்துச் சொல்லி, அகாலமாக உயிரை விடுவார். அப்புறம் என்ன... பரபர ஆக்ஷன் ஸீன்களோட எல்லா கெட்ட சக்திகளையும் அழித்து விட்டு ஹீரோவும் ஹீரோயினும் தப்பித்து வெளியே வந்தால், இன்னொரு பெரிய பிரச்னை சேர் போட்டு உட்கார்ந்திருக்கும். பார்ட் 2-க்கு அடி போட்டு 'எண்ட் கார்டு’ போடுவார்கள். எக்ஸ் மேன், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் (இன்னும் இவனுங்க டாபர் மேன் மட்டும்தான் வைக்கல!) என, இற்றுப்போன இந்த ஒற்றை உலகத்தைக் காப்பாற்றுவதையே இத்தனை பேரும் மாய்ந்து மாய்ந்து ஃபுல்டைம் ஜாப் ஆக வைத்திருப்பது... என்ன கொடுமை சார் இது!

2.  ஈரானிய சினிமாக்கள்

இந்தப் படங்களை பார்க்க உங்களுக்கு ஸ்பெஷல் பொறுமை வேண்டும். அந்த அளவுக்கு ஆமைவேக சினிமாக்கள். பாலைவனச் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் நாயகனை மட்டும் லாங் ஷாட்டில் 2 நிமிடங்கள் காட்டுவார்கள். நிறுத்தி நிதானமாக ஸ்டாண்ட் போடுவதை ஒரு நிமிஷமும், ஃபோக்ஸ் கம்பிக்கு ஃபோகஸ் 5 நிமிஷமும் என நீ...ண்...ட காட்சிகளில் 'பி.பி’ ஏற்று வார்கள். சைக்கிளுக்கு ஆயில் போடுவதைக் காட்டிக்கொண்டே அவர்கள் பேசிமுடிப்பதற்குள் நீங்கள் டிபன் சாப்பிட்டு முடித்திருப்பீர்கள். ஒருவித 'ஜென்’ மனநிலையில் இருப்பவர்களுக்கு இவ்வகை சினிமாக்களை ரொம்பப் பிடிக்கும். மற்றவர்களுக்கு போர் அடிக்கும். ஆனாலும், குழந்தைகளும் பார்க்கும்படி டீசன்ட்டாக படங்கள் எடுக்கும் வழக்கம் ஈரானில் உள்ளதால், குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம். ஜொள்ளர்களுக்கு நோ தீனி!  

3.   கொரியன் சினிமாக்கள்

'கொ’னாவுக்கு 'கொ’னா! கொரியன் சினிமா... கொடூர சினிமா. கொலை செய்வதையோ பழி வாங்குவதையோ கிரியேட்டிவாக காட்டுவார்கள். தற்கொலை செய்வதைக்கூட நீங்கள் யூகிக்க முடியாத வகையில் டெரராய் செய்வார்கள். காய்ச்சலோடு இருக்கும்போது மொட்டைமாடி வெயிலில் உட்கார்ந்த ஃபீலிங் இவர்களின் பெரும்பாலான படங்களைப் பார்க்கும்போது உங்களுக்கு இருக்கும். காமெடிப் படங்களும் எடுப்பார்கள்தான். பாலா காமெடி படம் எடுத்ததையே பார்த்தவர்கள்தானே நாம்? பத்து பாலாக்கள் சேர்ந்து எடுத்தால்? அப்படித்தான் இருக்கும் கொரியன் சினிமா. கோடாரிகள் பறக்கும். கத்திகள் சுத்தும். கொஞ்சம் அசால்ட்டாய் இருந்தால் டி.வி-யை உடைத்துக்கொண்டு உங்கள் மீதும் விழுந்தாலும் விழும். ஆனாலும், இன்னிய தேதியில் புதிய தமிழ் இயக்குநர்கள் அனைவருக்கும் அமுதசுரபியாய் இருப்பது கொரிய சினி மாக்கள்தான். இந்தப் படங்களை நீங்கள் தேடிப் பிடித்துப் பார்ப்பதில் ஒரே அனுகூலம்... எதிர்காலத்தில் நீங்கள் பார்க்கும் புது தமிழ்ப்படத்தின் ஒரிஜினல் இது என நீங்கள் முதல் ஆளாய் முகநூலில் ஸ்டேட்டஸ் போடலாம்.

4.  பிரெஞ்சு, ஸ்காண்டினேவியன், ஸ்பானிஷ், ஹங்கேரியன், டேனிஷ் (டென்மார்க்) மற்றும் போலிஷ் (போலந்து) சினிமாக்கள்

வீட்டில் நடு ஹாலில் குடும்பமாய் உட்கார்ந்து பார்க்கவே முடியாத சினிமாக்கள். விக்ரமன் டைப் காதல் சினிமாவுக்கு ஜென்ம விரோதிகள் இவர்கள். 'காதல் கோட்டை’ படத்துக்கு ரீமேக் ரைட்ஸை இலவசமாகக் கொடுத்தாலும்கூட, அந்த ஊர் தேவயானியும் அந்த ஊர் அஜீத்தையும் அரை நிர்வாணமாகவே அலைந்து அட்ரஸ் தேடவிடுவார்கள். ஆணும் பெண்ணும் இஷ்டம் போல குடும்பம் குடும்பமாய் ஒயின் குடிப்பார்கள். தம் அடிப்பார்கள். முத்தம் கொடுப்பார்கள். காதலானாலும் சரி, பேங்க் கொள்ளையானாலும் சரி... அடல்ட்ஸ் ஒன்லி டைப் படங்களாய் எடுத்து நம்மை நெளிய வைப்பார்கள்.

5.  சைனீஸ், ஹாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் சினிமாக்கள்

சங்கி மங்கி சினிமாக்கள் இவை. பெரும்பாலும் தற்காப்புக் கலையை தலைமேல் தூக்கி வைத்து ஜிங்ஜிங்கு என்று ஆடுவதாகத்தான் இப்படங்கள் இருக்கும். ஆனால், யார் யாரை 'அபுகாய் அபுகாய்’ செய்கிறார்கள் என கண்டுபிடிப்பது கஷ்டம். ஹாங்காங்கில் ஜாக்கி சானையும் ஜெட்லீயையும் தவிர ஒரு பக்கியையும் நமக்குத் தெரியாததால் கொஞ்சம் கண்ணைக் கட்டி காட்டில்விட்ட ஃபீல் இருக்கும். ஜாக்கி படங்கள் காமெடிக்கு கியாரன்டி. ஜெட்லீ, அந்த ஊர் ஆக்ஷன் ராமராஜன். கொட்டாச்சி ஹேர்ஸ்டைலோடு ஊருக்காகவே வாழ்ந்து, ஊருக்காகவே சண்டை போட்டு உயிரை விடுவார். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் பக்கம் போனால் சண்டைக் காட்சிகளில் 'நிஜமாலுமே அடிச்சுக்குறாங்களோ?’ என்ற சந்தேகம் வரும். அந்த அளவுக்கு படம் முழுக்க அபுகாய் அபுகாய்தான்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism