Published:Updated:

சமையல் போட்டியில் ஒரு சாதனை!

 SICA
பிரீமியம் ஸ்டோரி
News
SICA

செஃப் தாமு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல முன்னணி செஃப் மற்றும் கேட்டரிங் மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

தென்னிந்தியா பல கலாசாரம், பண்பாடுகளுக்கு மட்டுமல்ல, சுவையான உணவு வகைகளுக்கும் பிரசித்திபெற்றது. சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சமையல் போட்டியில் தென்னிந்திய செஃப் சங்கம் (South India Chef’s Association - SICA) சார்பாகப் பங்குபெற்று, 16 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த செஃப்கள். இந்திய வரலாற்றில் ஒரு செஃப் குழு இத்தனை பரிசுகளை வென்றிருப்பது இதுவே முதன்முறை. இதைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களை கெளரவிக்கும் வகையில் ‘பாராட்டு விழா’ கடந்த நவம்பர் 15-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ‘தி பார்க்’ ஹோட்டலில் நடைபெற்றது.

தாமு,  சீதாராம் பிரசாத்
தாமு, சீதாராம் பிரசாத்

செஃப் தாமு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல முன்னணி செஃப் மற்றும் கேட்டரிங் மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசிய தாமு, “சர்வதேச அளவிலான சமையல் போட்டி அக்டோபர் 21 முதல் 23 வரை இலங்கையில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய செஃப் சங்கம் சார்பில் 12 செஃப்கள் கலந்துகொண்டு, நான்கு தங்கம், நான்கு வெள்ளி உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றிருக்கின்றனர். பழங்கள் மற்றும் காய்கறிகள் செதுக்குதல் (Carving), சாக்லேட் ஷோபீஸ், மாக்டெயில் மற்றும் காக்டெயில் போட்டி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், இவர்கள் சிறந்த சமையற்கலை மேலாளர் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வெற்றி எங்களுக்கு ஒலிம்பிக் சாதனை போன்றது. விளையாட்டுப் போட்டிகளுக்குக் கொடுக்கிற முக்கியத்துவம், இங்கே சமையல் போட்டிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லையே” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தாமு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும், “சுமார் 15 வருடங்களாக இந்த சங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு குழுவாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றிருப்பது இதுவே முதன்முறை. இது இந்தியாவின் ஒட்டுமொத்த செஃப் சங்கங்களுக்குமே பெருமை தேடித் தந்திருக்கிறது. ‘சமையற்காரன்’ என்று எங்களை ஏளனமாகப் பார்த்த காலம்போய் இந்த கௌரவங்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த வளர்ச்சி பன்மடங்கு உயர்வது எல்லா செஃப்களின் கைகளிலும்தான் இருக்கிறது. இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொண்டு, ஏராளமான பரிசுகளைச் சமையற்கலை மாணவர்கள் பெற வேண்டும்” என்று வாழ்த்தினார் தாமு.

பென்னட், சுரேஷ் கண்ணா
பென்னட், சுரேஷ் கண்ணா

SICA பொதுச்செயலாளர் சீதாராம் பிரசாத், “சுமார் 2,200 போட்டியாளர்களை வீழ்த்தி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர் SICA-வின் செல்லப்பிள்ளைகள். ஏராளமான திறமைசாலிகளைக் கொண்டிருந்தும், இத்தனை ஆண்டுகளாக நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். முதன்முறையாக இப்படிப்பட்ட மாபெரும் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றிருக்கிறோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது தொடக்கம்தான். சமையல் போட்டி எளிய விஷயமல்ல. இதற்கு மேலாளர், பயிற்சியாளர், முறையான பயிற்சி எல்லாமே அவசியம். அடுத்து சிங்கப்பூர், துபாய் என்று வரிசையாகப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்கள் செஃப்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்” என்கிற பாசிட்டிவ் குறிப்போடு கர ஒலிகளைத் தன்வசமாக்கிக் கொண்டார் சீதாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் போட்டிக்காக, உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேர் நடுவர்களாகப் பொறுப்பேற்றனர். இந்தியாவிலிருந்து SICA-வின் முன்னாள் முதன்மை தலைவர் ஜுகேஷ் அரோரா மற்றும் தற்போதைய துணைத் தலைவர் பென்னட் நடுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றிருந்தனர். அங்கு நடந்த சில சுவாரஸ்யங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பென்னட். “நான் மாக்டெயில் மற்றும் காக்டெயில் போட்டியின் நடுவராக இருந்தேன். உலகளவில் சுமார் 250 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்றனர். பல வித்தியாச பானங்களை கண்முன்னே செய்து அசத்தினர். பீர் கூலிங்காக இல்லையென்றால் இங்கு என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அங்கே ஒருவர் சுடச்சுட பீர் தயாரித்துக்கொடுத்தார். அந்த அனுபவம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எல்லா காக்டெயில் வகைகளை யும் ருசித்துவிட்டுத் திரும்பியபோது தடுமாறித்தான் போனேன்” என்று நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார் பென்னட்.

 SICA
SICA

போட்டியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து, இந்தப் போட்டிக்காக நாள் கணக்கில் தூங்காமல் கடினமாக உழைத்த மேலாளர் செஃப் சுரேஷ் கண்ணா, “இந்த நாள்கள் என் வாழ்நாளில் நிச்சயம் மறக்க முடியாதவை. போட்டி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏராளமான தடைகள். எல்லாவற்றையும் மீறி எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு என்னென்ன பொருள்கள் கிடைக்கும், கிடைக்காது என்பதெல்லாம் முன்கூட்டியே நமக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் தயாராகச் செல்ல வேண்டும். இங்கிருந்து பொருள்களைக் கொண்டுபோவதில் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தோம்.

நம் செஃப் ஒருவர் 45 கிலோ எடையுள்ள அருமையான சாக்லேட் கார்விங் செய்திருந்தார். அதை அப்படியே பேக் செய்து எடுத்துச்சென்றோம். தட்டுகள், மேஜை உள்ளிட்ட இதர உபகரணங்களையும் இங்கிருந்தே எடுத்துச் சென்றோம். பயண ஏற்பாடுகள், தங்குமிடம் என அனைத்திலும் தட்டுப்பாடுகள் இருந்தன. இலங்கை சென்ற முதல் நாள் எங்களுக்குத் தங்குவதற்கு அறை கிடைக்காமல் அலைந்தோம். எல்லா நேரங்களிலும் எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட மாபெரும் வாய்ப்பைக் கொடுத்த SICA-வுக்கு மிகப் பெரிய நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் சுரேஷ் கண்ணா.