தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்

சகாய பிரிகிடா
பிரீமியம் ஸ்டோரி
News
சகாய பிரிகிடா

பெண்ணென்று கொட்டு முரசே!

தமிழன்னை: டாக்டர் வி.சாந்தா

புற்றுநோய் மருத்துவத் துறைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவ தேவதை டாக்டர் வி.சாந்தா. இதற்காக அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

1954-ம் ஆண்டு, இரண்டு படுக்கை, இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் ஒரு குடிசையில் தொடங்கப்பட்ட கேன்சர் இன்ஸ்டிட்யூட், இன்று 130 மருத்துவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சை பெறும் அளவுக்கு விருட்சமாக வளர்ந்துள்ளது. புற்றுநோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், மருத்துவத் தேவைக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை விரிவுபடுத்துவதிலும் டாக்டர் சாந்தா அளித்த தன்னலமற்ற உழைப்பு மகத்தானது. எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகும் தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன்கூடிய மருத்துவச் சேவை ஆகியவைதாம் டாக்டர் சாந்தாவின் 66 ஆண்டுக்கால அடையாளம். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றி, அதன் உறுப்பினராக இருந்துவருகிறார்.

டாக்டர் வி.சாந்தா
டாக்டர் வி.சாந்தா

ஆசியாவின் உயரிய விருதான ‘மகசேசே’ விருதை வென்றிருப்பவருக்கு, ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, ‘பத்மவிபூஷண்’ என இந்தியாவின் உயரிய விருதுகள் பலவற்றையும் வழங்கி கெளரவித்திருக்கிறது இந்திய அரசு. 93 வயதிலும் புற்றுநோய் மருத்துவத்துக்காகத் துடிப்புடன் பணியாற்றிவருகிறார். ஒரு நூற்றாண்டின் ஈடு இணையற்ற சமகால வரலாறு டாக்டர் சாந்தா!

மாண்புமிகு அதிகாரி: இன்னசென்ட் திவ்யா

நீலகிரி... பூக்களுக்கும் மலைகளுக்கும் பெயர்பெற்ற இடம்... இப்போது இன்னசென்ட் திவ்யாவையும் தன் பெருமைகளுள் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் 113-வது ஆட்சியராகவும் ஐந்தாவது பெண் ஆட்சியராகவும் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார் ஜே.இன்னசென்ட் திவ்யா.

இன்னசென்ட் திவ்யா
இன்னசென்ட் திவ்யா

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் இயற்கையைச் சூறையாடும் வகையில் நடைபெற்றுவந்த பல நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தினார். யானை வழித்தட மீட்பு, ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை, பொக்லைன் இயக்கத் தடை, பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட நீர், குளிர்பானங்கள் விற்பனை செய்யத் தடை, மக்காத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான தொடர் நடவடிக்கைகள், விதிமீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்குச் சீல்வைப்பு என இவர் செய்ததெல்லாம் சினிமாவில் மட்டுமே இதுவரை நாம் பார்த்துவந்த மாஸ் மொமென்ட்டுகள். கணவனை இழந்த பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, வனவிரிவாக்கம், பழங்குடி மக்கள் நலன் என ஆட்சியர் பொறுப்பில் அறம் வளர்க்கும் நீலகிரியின் `சூப்பர்ஸ்டார்' இன்னசென்ட் திவ்யா!

எவர்கிரீன் நாயகி: குஷ்பு சுந்தர்

குஷ்பு என்றால் வடக்கில் நறுமணம் என்று அர்த்தம். தமிழ்நாட்டில் குஷ்பு என்றால் துணிச்சல். ‘பூப்பூக்கும் மாசம் தைமாசம்’ என்று கொண்டாட்டப் பாட்டுப்பாடி குஷ்புவுக்கு ஆரத்தி எடுத்த தமிழகம், தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான பயணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக்கொடுத்தது. நடிப்பில் நடனத்தில் திறமைகாட்டி, அழகான புன்னகையில் குஷ்பு திரையில் தோன்றும்போதெல்லாம் திருவிழாக் கூச்சல் கண்டன தியேட்டர்கள்.

அவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்

கொண்டையில் தாழம்பூ பாடலில் ‘கூடையில் என்ன பூ?’ என்று ரஜினி சஸ்பென்ஸ்விட ‘குஷ்பு... குஷ்பு...’ என ஒலித்தது, அதுவரை கதாநாயகிகள் காணாத மாஸ் மொமென்ட். இட்லிக்கு குஷ்புவின் பெயர் வைத்த அதிர்ச்சி அடங்குவதற்குள், கடவுள் நம்பிக்கையில்லாத குஷ்புவுக்குக் கோயில் கட்டவும் தயாரானார்கள் தமிழ் ரசிகர்கள். ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று... ஏதோ உன்னிடம் இருக்கிறது’ என்ற பாடல் வரியில் ஒளிந்திருக்கும் உண்மைகள் குஷ்புவிடம் ஏராளம். அழகும் திறமையும் மட்டுமல்ல குஷ்புவின் அடையாளம்... ஆணாதிக்கமும் மூடநம்பிக்கைகளும் நிரம்பிக்கிடக்கும் தமிழ்த் திரையுலகில் தன்னை ‘பெரியாரிஸ்ட்’ என்று பிரகடனப்படுத்திக்கொண்ட கொள்கையாளர் குஷ்பு. முன்வைத்த கருத்திலிருந்து பின்வாங்காமல் ‘எது வந்தாலும் பார்க்கலாம்’ என்று எதிர்ப்புகளை இன்முகம் கொண்டு கடப்பவர். கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் குரல் உயர்த்தத் தயங்காதவர். கலையுலகில் கலக்கியவர் அரசியல் களத்திலும் அடியெடுத்துவைத்தார். சர்ச்சைகளோ, சமூக வலைதள சவால்களோ - எதையும் சந்திக்கத் தயங்காதவர். நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல் ஆளுமை எனப் பன்முகம்கொண்டு பயணிக்கிறார் தமிழ் மக்களின் எவர்கிரீன் நாயகி குஷ்பு!

சேவை தேவதை: டாக்டர் அனுரத்னா

மருத்துவமனைக்கு வரவே அஞ்சும் பழங்குடிகள், குடிகாரக் கணவனிடம் அல்லல்படும் பெண்கள், போதிய ஊட்டச்சத்தில்லாமல் நோய்களோடு போராடும் குழந்தைகள்... இவர்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவதே மருத்துவர் அனுரத்னாவின் இலக்கு. பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றும் அனுரத்னா, பணி நேரம் தவிர, பிற நேரங்களிலெல்லாம் ஊர் ஊராக, வீடு வீடாக மக்களை நோக்கிப் பயணிக்கிறார். ‘அக்கா’, ‘அம்மா’, ‘அத்தை’ எனக் கிராமத்துப் பெண்கள் இவரை உறவு சொல்லி அழைத்து உபசரிக்கிறார்கள்.

டாக்டர் அனுரத்னா
டாக்டர் அனுரத்னா

எல்லா வீடுகளுக்குள்ளும் உரிமையோடு நுழைந்து, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்குவது, இடைநிற்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, குடும்பக்கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குடிகாரர்களுக்கு கவுன்சலிங் அளிப்பது என அடித்தட்டு, விளிம்புநிலை, பழங்குடிச் சமூக மக்களின் நலனுக்காக உழைப்பதே அனுரத்னாவின் வாழ்க்கையாக இருக்கிறது. மருத்துவம் வணிகமாகிப்போய்விட்ட சூழலுக்கு எதிராக மனிதம் வளர்க்கும் மக்கள் மருத்துவர் அனுரத்னா!

கல்வி தேவதை: கிருஷ்ணவேணி

சென்னை, முகப்பேர் அரசுத் தொடக்கப் பள்ளியில் பணிக்குச் சேர கிருஷ்ணவேணி சென்றபோது, அங்கே பல அதிர்ச்சிகரமான விஷயங்களே காத்திருந்தன. பள்ளி நேரத்திலும் பாட்டிலோடு வரும் ‘குடி’மகன்கள்... சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளின் உடல்நலம்... உணவின்றி காலையில் சாப்பிடாமல் வரும் மாணவர்கள் என ஏகப்பட்ட பிரச்னைகள். ஆனால், அனைத்துக்கும் ஒரே தீர்வு கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

இவரது சீரிய முன்னெடுப்பால், புளியமர ஸ்கூல் என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்ட பள்ளியின் கட்டமைப்புகளைப் பலரின் உதவியோடு மாற்றியமைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் ரூம், நூலகம், வண்ணமயமான வகுப்பறைகள் என இப்போது புதுமுகம் காட்டுகிறது பள்ளி. இந்த மாற்றம்கண்டு, வசதிமிக்கவர்களின் குழந்தைகளும்கூட இன்று இந்தப் பள்ளிக்குப் படிக்க வருகிறார்கள். மரபுசார் கலைஞர்கள் / அறிஞர்கள் மூலம் மாணவர்களுக்குக் கலைப்பயிற்சிகளை அளிப்பதோடு, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டிவருகிறார். ஆட்டிசக் குழந்தைகளையும் இயல்பு மாணவர்களோடு சேர்த்துப் படிக்கவைத்து மாணவ ஆற்றல் பெருக்குகிறார் கல்வி தேவதை கிருஷ்ணவேணி!

செயல் புயல்: ஸ்வர்ணலதா

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வர்ணலதாவுக்குத் திடீரென காய்ச்சல். அதன் தொடர்ச்சியாக மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிற `மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ்' பிரச்னை. பிறகு வீல் சேரில் முடங்கிப்போனது இவரின் வாழ்க்கை. வீடியோ கேமில் ஒவ்வொரு லெவலாகத் தாண்டுவதைப் போல அனைத்தையும் வெற்றிகரமாகத் தாண்டினார். இன்று, `ஸ்வர்கா ஃபவுண்டேஷன்' அமைப்பின் வாயிலாக, இந்தியா முழுவதும் தன்னைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதோடு விழிப்புணர்வும் ஊட்டிவருகிறார். மருத்துவ, கல்வி உதவிகளோடு தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் `சாரதி’ என்ற பெயரில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியான போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஸ்வர்ணலதா
ஸ்வர்ணலதா

வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளி களுக்குமான சேவை, கழிப்பிட வசதி, அதிக நேரம் உட்கார முடியாதவர்களுக்கான படுக்கை வசதி என எல்லாம் இதில் உண்டு. கோயம்புத்தூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார். கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிவறைகளை மாற்றுத்திறனாளிகளுக்குமானதாக மாற்றிட முன்நின்றிருக்கிறார். மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான புனர்வாழ்வு மையம் அமைப்பதே இவரது அடுத்த இலக்கு. `உண்மையான பலம் என்பது உள்ளத்து நம்பிக்கையே' என்கிறார் செயல் புயல் ஸ்வர்ணலதா!

சூப்பர் வுமன்: பேராசிரியர் மோகனா

தஞ்சை மாவட்டம் சோழம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகனா. பெண் கல்வி அங்கீகரிக்கப்படாத காலகட்டத்தில், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் உதவியோடு படித்துப் பட்டம் பெற்று, பழநியாண்டவர் கலைக்கல்லூரியில் முதல் பெண் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பேராசிரியர், பொறுப்பு முதல்வர் வரையிலான பொறுப்புகளை வகித்தவர், கடந்த 30 ஆண்டுகளாக ‘மக்கள் அறிவியல்’ பரப்புரைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

பேராசிரியர் மோகனா
பேராசிரியர் மோகனா

70-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட பேராசிரியர் மோகனா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார். மாதத்துக்குப் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணிக்கும் இவர், தமிழ்நாட்டில் போகாத இடங்களே இல்லை. இந்தியாவிலேயே ‘தாய்ச்சி’ கலையில் பட்டயம் பெற்ற முதல்பெண் இவர்தான். தனது 72-வது வயதிலும் ‘புற்றுநோய்’ குறித்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொள்ளும் இவர், 200-க்கும் மேற்பட்ட எளிய மாணவர்களைப் படிக்கவைத்திருக்கிறார். இப்படி அசர வைக்கும் ஆற்றலோடு சுற்றிச்சுழல்கிறார் இரும்புப் பெண்மணி மோகனா!

லிட்டில் சாம்பியன்: ஜெர்லின் அனிகா

பேட்மின்டன் கோர்ட்டுக்குள் ஜெர்லின் அனிகா நுழைந்தால் விசில் சத்தம் பறக்கும். ஆனால், அதை இவரால் கேட்க முடியாது, வார்த்தைகளால் அவர்களுக்கு நன்றி சொல்லவும் முடியாது. மதுரையில் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்துவளர்ந்தவர் ஜெர்லின். அப்பாவின் நண்பர்கள் பேட்மின்டன் விளையாடுவதைப் பார்த்து, இவருக்கும் அந்த விளையாட்டின் மேல் ஆர்வம் வந்தது. அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டே தினமும் 8 மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜெர்லின் அனிகா
ஜெர்லின் அனிகா

2017-ம் ஆண்டு, துருக்கியில் நடந்த காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரில் விளையாடி, ஐந்தாம் இடம் பிடித்தார். 2018-ம் ஆண்டில், மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் இரண்டு வெள்ளியும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுகாட்டினார். சீனாவின் தைபேயில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 2019-ம் ஆண்டின் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியனாகவே கம்பீரம் காட்டினார். இவை மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருக்கிறார். ‘கேட்கவோ பேசவோ ஒன்றுமில்லை... செய்வதற்கு சாதனைகளும் வெல்வதற்கு வாழ்க்கையும் மட்டுமே இருக்கின்றன’ எனச் செயலால் சேதி சொல்லும் குட்டி இளவரசி ஜெர்லின் அனிகா!

சாகச மங்கை: ரேஷ்மா நிலோஃபர்

கப்பலில் வேலை செய்யும் ஆண்களைத் திருமணம் செய்யவே பெரும்பான்மைப் பெண்கள் தயங்குவார்கள். ரேஷ்மா நிலோஃபரோ கப்பலைக் கொண்டு கடலை அளந்துகொண்டிருக்கிறார். கொல்கத்தா துறைமுகத்தில் பணிபுரிகிற ரேஷ்மா, உழைப்பால் உயர்ந்து, இன்று இந்த உயரிய இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

ரேஷ்மா நிலோஃபர்
ரேஷ்மா நிலோஃபர்

வங்காள விரிகுடாவில் சாகர் தீவுக்கு அருகில் நுழையும் கப்பல்கள், 148 கிலோமீட்டர் தூரத்துக்கு 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஹூக்ளி நதியில் பயணித்து, கொல்கத்தா அல்லது ஹால்டியா துறைமுகத்தில் நங்கூரமிடும். ஹூக்ளி நதியில் கப்பலை ஓட்டிச்செல்வது சவாலான வேலை. பாம்புபோல வளைந்து செல்லும் இந்த நதி, மணிக்கு 14-15 கிலோமீட்டர் வேகத்தில் அலைபுரளும். சில இடங்களில் 8 மீட்டர் மட்டுமே ஆழம் இருக்கும். இந்த நதியில் கப்பலோட்டுவது ஒரு சாகசக் கலை. ரேஷ்மாவுக்கோ அது தினசரி பணி. இந்தியாவின் முதல் பெண் ‘மரைன் பைலட்’ என்கிற பெருமையைச் சூடிநிற்கும் சிங்கப்பெண் ரேஷ்மா நிலோஃபர்!

பெஸ்ட் மாம்: கலைச்செல்வி

பின்னணிப் பாடகி `கண்ணம்மா’ ஜோதியின் குரல், நம் பலருக்கும் பரிச்சயமான ஒன்று. ஆனால், ஜோதிக்குத் தெரிந்ததெல்லாம் அவரின் அம்மாவின் குரலும் அரவணைப்பும் மட்டுமே. பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில் சிக்கலோடு பிறந்த, பார்வைச்சவால்கொண்ட குழந்தை ஜோதி. உள்ளுறுப்புகள் சார்ந்த சிக்கல்களும் ஜோதிக்கு ஏராளம்.

கலைச்செல்வி
கலைச்செல்வி

மருத்துவம் கைகொடுத்த போதும், உறவுகள் உதவிக்கு வரவில்லை. தனிமனுஷியாக, ஒரு சிங்கிள் மதராக ஒவ்வொரு நாளும் போராடியே வாழ்க்கையை முன்நகர்த்தினார் கலைச்செல்வி. இவரின் உச்சபட்ச ஆசை, ஜோதிக்கு சுயமாக அனைத்தையும் எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. மகளுக்குப் பாதுகாப்பான சூழலையும் வாழ்வையும் ஏற்படுத்திக்கொடுக்கத் தொடர்ந்து போராடும் கலைச்செல்வி, `குறைபாடுள்ள குழந்தை’ என நினைத்து, ஜோதியை வீட்டோடு அடைக்கவில்லை. இன்று ஜோதியின் கச்சேரி நடக்காத நாடுகளையும், அவர் வாங்காத விருதுகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய சாதனைப் பெண்ணான ஜோதி எதற்கும் எப்போதும் பயந்ததே இல்லை. காரணம்... அவரின் ஒரே நம்பிக்கை நாயகி கலைச்செல்வி!

பசுமைப் பெண்: தமிழ்ச்செல்வி

ஈரோடு மாவட்டம், நகலூர் கொண்டையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வியின் புகழ் இன்று டெல்லி வரை பரவியிருக்கிறது. காரணம், இவரது உழைப்பு! வளமான பூமி, வருமானம் கொடுக்கும் பயிர்கள் எனச் சிக்கல் இல்லாமல் சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் குறுக்கிட்டதொரு பருவகாலம். கடுமையான வறட்சியில் நெல், வாழை, கரும்பு என விளைந்துகொண்டிருந்த வயல்கள் வறண்டுபோயின. முற்றிலுமாக வருமானம் இல்லை... ஆனாலும், துவண்டுவிடவில்லை தமிழ்ச்செல்வி.

தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி

கடன் வாங்கி, இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தார். ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் இறங்கினார். குடும்பத்தினர் ஒத்துழைக்கவே காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை எனத் தொடர்ந்தார். தனது தோட்டத்தில் விளையும் பொருள்களை வாழைக்காய் சிப்ஸ், எள் உருண்டை, கடலை உருண்டை என மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறார். இவரது உழைப்பையும் வளர்ச்சியையும் கண்ட ‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’ இவருக்குச் `சிறந்த பெண் விவசாயி விருது’ வழங்கி கௌரவித்தது. அகில இந்திய அளவிலான சிறந்த பெண் விவசாயிகளுக்கான போட்டியிலும் இவர் பங்கெடுத்துள்ளார். ‘வறட்சியை வளமாக்கும் வித்தையின் பெயர் உழைப்பு’ என்று உணர்த்திய ‘பசுமைப் பெண்’ தமிழ்ச்செல்வி!

பிசினஸ் குயின்: மது சரண்

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்ல முடியாத குடும்பச் சூழல். அடிப்படைக் கணினி பயின்று, மாதம் 750 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார் மது. படிப்படியாகத் திறமையை வளர்த்துக்கொண்டு, இந்தியாவிலேயே முதல் டெஸ்டிங் பயிற்சி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கினார். இரண்டாயிரத்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, இரண்டே ஆண்டுகளில் பல மாநிலங்களில் 45 கிளைகளைத் தொடங்கினார். ஜெட் வேகத்தில் முன்னேறியவருக்கு, ஐ.டி துறை வீழ்ச்சியால் ஸ்பீடு பிரேக் விழுந்து பெரிய நஷ்டம்... சென்னைக் கிளை தவிர, மற்ற எல்லா கிளைகளையும் விற்கவேண்டிய நிலை. துவண்டுபோகாமல் மீண்டும் நம்பிக்கையோடு ஓடினார்.

மது சரண்
மது சரண்

பியூட்டி சலூன், ஸ்கின் கேர், ஹேர் கேர், ஸ்லிம் கேர் சிகிச்சைகளுக்கான நிலையங்கள், ரெஸ்ட்டாரன்ட், குழந்தைகளுக்கான ‘டே கேர்’ ஸ்கூல் உட்பட 10 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, இன்று ஆண்டுக்கு 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்கிறார். இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறார். ஐந்து அரசு அமைப்புகளில் உறுப்பினராகவும் இயங்கிவருகிறார். வாழ்க்கையிலோ, பிசினஸிலோ சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக நிற்கிறார் மது சரண்!

இலக்கிய ஆளுமை: அ.வெண்ணிலா

செய்தித்தாள் வந்தால்

அப்பாவிடம் கொடுக்கவும்

கீரைக்காரி வந்தால்

அம்மாவைக் கூப்பிடவும்

யாரும் கற்றுக்கொடுக்காமலேயே

கற்றுக்கொள்கின்றன…

குழந்தைகள்.

அ.வெண்ணிலாவின் புகழ்பெற்ற கவிதை இது. அரசுப்பள்ளி ஆசிரியரான அ.வெண்ணிலா, 90-களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கினார். பெண்கள் குறித்த பழைமைவாதக் கற்பிதங்கள், குடும்ப அமைப்பு பெண்ணிடம் நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல்கள்மீதான கடுமையான விமர்சனங்களைப் படைப்பு மொழியாக்கினார்.

அ.வெண்ணிலா
அ.வெண்ணிலா

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், தொகுப்பாக்கம் எனப் பரந்துவிரிந்த இலக்கியப் பயணம் இவருடையது. மாதவிடாய்க் காலங்களில் மாணவிகள்படும் இன்னல்களைப் பற்றி ‘ஆனந்த விகடன்' இதழில் இவர் எழுதிய கவிதையைப் படித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், அரசுப் பள்ளிக்குக் கூடுதலான கழிவறை களைத் கட்டித் தர உத்தரவிட்டது, கவிதை உலகில் ஒரு முக்கிய நிகழ்ச்சி. ‘தேவரடியார் - கலையே வாழ்வாக…’ எனும் ஆய்வு நூல், 5,200 பக்கங்கள் கொண்ட, ‘ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு’ ஆகிய தொகுப்பு நூல்கள் தமிழுக்கு இவர் செய்த முக்கியப் பங்களிப்பு. சாதி - சடங்கு மறுப்பு திருமணம், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தது, தந்தை இறந்தபோது ஒரே மகளான இவரே கொள்ளிவைத்தது என எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் இயங்கும் இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர். இன்முகத்துடன் பன்முகம்காட்டும் `இலக்கிய ஆளுமை’ அ.வெண்ணிலா!

கலைநாயகி: நர்த்தகி நடராஜ்

திருநங்கைகளின் பெருமைக்குரிய அடையாளம் நர்த்தகி நடராஜ். தன் பால்நிலையின் பொருட்டு வலிமிகுந்த ஒரு காலகட்டத்தை மன உறுதியாலும் நடனத்தாலும் வென்ற நர்த்தகியின் இளமைக்காலக் காயங்களைவிட இவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை அதிகம். அன்று, பரதம் கற்றுக்கொள்ள குருவின் வீட்டு வாசலில் ஒரு வருடம் தவமிருந்தவரின் பாதங்கள், இன்று உலகம் முழுவதும் வெற்றிப்பாதைகளை அளந்துகொண்டிருக்கின்றன.

நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ்

நர்த்தகியின் நடனப்பள்ளியில் நூற்றுக்கணக்கான பாதங்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களையும் நவீனக் கவிதைகளையும் தன் நடனத்தில் பயன்படுத்தியதற்காக ‘மதிப்புறு முனைவர்’ பட்டம், கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் குடியரசுத்தலைவர் விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என திருநங்கைகளின் வாழ்வில் நம்பிக்கை அத்தியாயம் எழுதிய முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்!

யூத் ஸ்டார்: அஞ்சனா ஜெயப்ரகாஷ்

‘யாரிந்த தேவதை’ என்று பார்த்தவர்களையெல்லாம் கேட்க வைத்தார் இந்த `குயின்’. மாடலிங், விளம்பரப் படங்கள், மியூசிக் வீடியோ, குறும்படங்கள், திரைப்படங்கள் என்று தன் கலைப்பயணத்தைத் தொடரும் அஞ்சனாவுக்குக் கிடைத்த கோல்டன் டிக்கெட் ‘குயின் வெப் சீரிஸ்’.

அஞ்சனா ஜெயப்ரகாஷ்
அஞ்சனா ஜெயப்ரகாஷ்

கரியரின் ஆரம்பத்திலேயே பயோபிக்கில் நடிக்க வேண்டிய சவால். அறுபதுகளின் தமிழ் சினிமா காட்டிய காதலை அப்படியே பிரதிபலிக்கும் உடல்மொழி, இல்வாழ்க்கைக்காக ஏங்கும் ஒரு நடிகையின் உணர்ச்சிப்பிரவாக வெளிப்பாடு, ரெளத்ரத்தின் வழி காதல் தோல்விகளைக் கடக்கும் ஒரு நட்சத்திரத்தின் குழப்பமான சிவப்பேறும் கண்கள் என்று அஞ்சனாவின் அத்தனை புலன்களும் `சக்தி சேஷாத்ரி'யாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்தன. அழகும் திறமையும் மிளிரும் இளமை சென்சேஷன் அஞ்சனா!

வைரல் ஸ்டார்: சகாய பிரிகிடா

சமூகவலைதளத்தை ஏணியாகப் பயன்படுத்தும் இளைய சமுதாயத்தின் புதிய வெற்றி முகம், சகாய பிரிகிடா! ‘டிக் டாக்’ வீடியோக்களில் தன் க்யூட் எக்ஸ்பிரஷன்களால் மனங்களைக் கொள்ளையடித்தவர், அதையே என்ட்ரி பாஸாக வைத்து மீடியா கரியரை ஆரம்பித்தார். ‘அவளோடு அவன்’, ‘கண் பேசும் வார்த்தைகள்’, ‘தோள் கொடு’ என்று குறும்படங்களில் வரிசையாக முகம் காட்டினார்.

சகாய பிரிகிடா
சகாய பிரிகிடா

‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் ‘பவி டீச்ச’ராக ரசிக்க வைத்தவருக்கு, பெரிய கதவுகள் திறந்தன. விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் மூலம் கோலிவுட் பாஸ் கிடைத்தது. இப்போது, விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் பிரிகிடா ‘ஆன் போர்டு’. கையிலிருந்த ஒற்றை மொபைலில் ஆரம்பித்த சுயமுயற்சியின் மூலம், இன்று இவர் வந்து நிற்கும் உயரம் அபாரம். தமிழ் நெட் ரசிகர்களுக்கு அழகான ஸ்கிரீன் ப்ரசன்ஸ் கொடுத்துவரும் வைரல் ஸ்டார் சகாய பிரிகிடா!

அவள் விருதுகள்
அவள் விருதுகள்
அவள் விருதுகள்
அவள் விருதுகள்
அவள் விருதுகள்
அவள் விருதுகள்