ரெசிப்பிஸ்
Published:Updated:

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

யம்மி விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
யம்மி விருதுகள்

ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும் பல பெண்களும் விடுமுறை விடுகிற இடம் கிச்சன்.

அவள் விகடன் கிச்சன் யம்மி செஃப் -

மெனுராணி செல்லம்

ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும் பல பெண்களும் விடுமுறை விடுகிற இடம் கிச்சன். சிந்தனையிலிருந்து சமையலை ஒதுக்கிவைக்கிற அந்த நாள் அவர்களுக்கு இனிய நாள். ‘வாரம் முழுவதும் அதைத்தானே செய்கிறோம்... ஒருநாளாவது ஓய்வு வேண்டாமா’ என நினைக்கிறவர்களுக்கு மத்தியில், சமையலறைக்குள் நுழையாத நாள்களை நிஜத்தில் மட்டுமல்ல, கற்பனையில்கூட நினைத்துப் பார்க்காதவர் சமையற்கலை நிபுணர் செல்லம். செல்லமாக ‘மெனுராணி’!

மெனுராணி செல்லம்
மெனுராணி செல்லம்

70 ப்ளஸ் வயதிலும் புதிதாகச் சமையல் கற்றுக்கொள்கிறவருக்குண்டான ஆர்வம் இவரது அடையாளம். கையேந்தி பவன் சால்னா முதல் ஸ்டார் ஹோட்டல் ஸ்பெஷல் வரை அத்தனை ரெசிப்பிகளையும் நினைவின் நுனியில்வைத்திருப்பவர். உலக அளவில் நேற்று ட்ரெண்டான உணவின் செய்முறையைக்கூட உடனே தெரிந்து கொள்ளும் அளவுக்கு அப்டேட்டடாக இருப்பார். மூன்று தலைமுறையினருக்குச் சமையற்கலைப் பயிற்சி அளித்தவர். பல துறைப் பிரபலங்களும் இதில் அடக்கம். இவரிடம் கரண்டி பிடிக்கக் கற்றுக்கொள்ள நான்காம் தலைமுறையும் வெயிட்டிங்.

சமையற்கலையில் 50-வது வருடத்தைக் கொண்டாடும் மெனுராணிக்கு `யம்மி செஃப்’ விருதளித்து கெளரவம் செய்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த உணவு அலங்கார நிபுணர் - வசந்தா தின்கர்

உணவைச் சமைப்பதிலிருக்கும் ஆர்வம், பெரும்பாலானவர்களுக்கு அதை அலங்கரிப்பதில் இருப்பதில்லை. அழகியலும் அன்பும் இணையும் ஒரு தனித்துவமான கலை அது. சமைத்த உணவை அழகாக அலங்கரிப்பதோடு அன்பாகப் பரிமாறி, வெற்றிகரமான ஃபுட் ஸ்டைலிஸ்ட்டாக வலம்வந்து கொண்டிருக்கிறார் வசந்தா தின்கர்.

வசந்தா தின்கர்
வசந்தா தின்கர்

பார்த்துப் பார்த்துச் சமைக்கிற உணவை அலங்கரித்து, வயிற்றுக்கு முன்பாக கண்களுக்கு விருந்து வைப்பதுதான் இவரின் இலக்கு. உணவுகளை அலங்கரிப்பது அவ்வளவு எளிதல்ல. உணவின் தரம், தன்மை மற்றும் நிறம் என ஏராளமான காரணிகள் உள்ளடங்கிய இந்தக் கடினமான பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்து, சென்னையின் டாப் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளில் ஒருவராக அசத்திக்கொண்டிருக்கிறார். நாம் அன்றாடம் விளம்பரங்களில் பார்க்கிற பல உணவு வகைகளை ஸ்டைலிங் செய்தவர் இவர். விளம்பரத் துறையிலும் பல சாதனைகள் படைத்திருக்கிறார். ‘சுவை பாதி அலங்காரம் மீதி’ என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து ஃபுட் ஸ்டைலிங் உலகில் தனக்கென தனிப்பட்ட இடத்தைப் பிடித்திருக்கிறார் வசந்தா தின்கர்.

ஸ்டைலிஸ்ட் ஸ்டார் வசந்தாவின் ரசனை மனதுக்கு ‘சிறந்த உணவு அலங்கார நிபுணர்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த டயட்டீஷியன் - பி.கிருஷ்ணமூர்த்தி

உணவியல் நிபுணராக 35 ஆண்டுக்கால பணி அனுபவம் கொண்டவர் பி.கிருஷ்ணமூர்த்தி. டயட்டீஷியனாக மட்டுமல்லாமல், ஆசிரியராகவும் 20 ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். இப்போது, இந்தியன் டயட்டீஷியன் அசோஷி யேஷன் சென்னை பிரிவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

பி.கிருஷ்ணமூர்த்தி
பி.கிருஷ்ணமூர்த்தி

தமிழின் முன்னணி இதழ்களில் உணவியல் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிவருவதோடு, கல்விப் புலங்களில் உணவியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் முன்வைத்து வருகிறார். ‘கடைகளில் சூப் சாப்பிடுவது சரியா?’ என்பது முதல் ‘கலோரி என்றால் என்ன?’ என்பது வரை மக்களின் சந்தேகங்களை தொலைக்காட்சி, வானொலிகளின் வாயிலாகத் தீர்த்துவைப்பதில் உற்சாகம்கொள்பவர்.

பெண்கள் கோலோச்சும் இந்தத் துறையில் ஓர் ஆணாகச் சாதித்து, உணவியல் துறையின் தனிப்பெரும் மன்னனாக விளங்கிவரும் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்திக்கு `சிறந்த டயட்டீஷியன்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த இணையதள செஃப் - The Tiny Foods

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராம் - வளர்மதி தம்பதியர், 2017-ம் ஆண்டு தொடங்கிய யூடியூப் சேனல்தான் ‘தி டைனி ஃபுட்ஸ்’.

பசுமையான வெளிப்புறத்தில், குட்டிக் குட்டி செப்புப் பாத்திரங் களில்... விளையாட்டு சுவாரஸ்யத் தோடு ருசியான நிஜ சமையல் செய்து, அதை வீடியோவாக வெளியிடும் முதல் இந்திய சேனல் இதுதான்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

ராம், திருவண்ணாமலையில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுவருவதோடு தொழில்முனைவோராகவும் இருக்கிறார். வளர்மதி, திருப்பூர் மாவட்டம் அரூரில் வி.ஏ.ஓ (கிராம நிர்வாக அலுவலர்) பணியில் இருக்கிறார். இவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு சமையல் ரெசிப்பி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அரூர் பகுதியில் ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்புகளை நடத்துவது வழக்கம். சமையல்தான் பிரதானம் என்றாலும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பொம்மலாட்டக் கலையையும் (Puppet show) நிகழ்த்துகின்றனர்.

ஆறு லட்சம் பேர் `தி டைனி ஃபுட்ஸ்’ சேனலைப் பின்தொடர்கிறார்கள். இந்த சேனலில் கிடைக்கும் வருமானத்தின் சிறுதொகையைப் பயன்படுத்தி விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்துவருகின்றனர். ஐடியா பிடிப்பதில் தொடங்கி, நிகழ்த்துவது... வீடியோ பதிவுசெய்வது... எடிட் செய்து வெளியிடுவது என அனைத்துப் பணிகளையும் கணவன் மனைவி இருவருமாகத்தான் செய்கின்றனர்.

இந்தக் கூட்டுழைப்புக்கும் படைப்பூக்கம் மிக்க செயல்பாட்டுக்கும் ‘சிறந்த இணையதள செஃப்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த இன்னோவேஷன் - இட்லி இனியவன்

‘உங்க வீட்டு இட்லி எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு ‘கிரிக்கெட் பந்து’ முதல் ‘பூமராங்’ வரை ஆளுக்கோர் ஒப்பீடு சொல்வார்கள். இனியவன் தயாரிக்கும் இட்லியை ஒருமுறை ருசித்தால், ‘கோட்டையெல்லாம் அழிக்கச் சொல்லிவிட்டு, முதல்லேருந்து சாப்பிடக் களமிறங்கும்’ இட்லி சூரிகளாக மாறுவார்கள் எவரும்.

‘மல்லிப்பூ’ இட்லி என்ற பெயரில் இவர் தயாரிக்கும் இட்லி, நிஜமாகவே மல்லிகைக்கு இணையானது. எளியவர்களின் உணவான இட்லியை எல்லோரும் திரும்பிப்பார்க்க எடுத்துச் சென்றவர் இனியவன்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

இட்லி பிசினஸில் இவருக்கு இது 22-வது வருடம். இரண்டு இட்லிப் பானைகளுடன் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவருக்கு இன்று இட்லிதான் அடையாளம், அங்கீகாரம்!

நமக்கெல்லாம் இட்லி, இட்லியாக வந்தாலே சாதனை. இனியவனோ இட்லியில் ஆயிரக்கணக்கான வகைகளையும் வடிவங்களையும் அறிமுகப்படுத்தி, சாதனை படைத்தவர். 125 கிலோவில் மெகா இட்லி செய்து உலக சாதனை, 2,547 வகையான இட்லி செய்து இன்னுமோர் உலக சாதனை எனப் பல புதுமைகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர். இட்லி வியாபாரத்தால் தான் உயர்ந்த கதையை, கல்லூரி மாணவர்களிடம் தன்னம்பிக்கையோடு பகிர்ந்து ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார். இட்லியின் மூலம் சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பது இவரது தனித்திறமை. தேர்தல் விழிப்புணர்வுக்கான இட்லி பிரசாரம் லேட்டஸ்ட் உதாரணம்.

உலக அளவில் இட்லியின் பெருமையைக் கொண்டுசேர்ப்பதே தன் நோக்கம் என்கிற இனியவனின் முயற்சிக்கு ‘சிறந்த இன்னோவேஷன்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

டாப் டிரெண்ட் செட்டர் - சாய் கிங்ஸ்

எவ்வளவு சோர்வான தினத்தையும், ஒரு கப் தேநீர் சுறுசுறுப்பாக்கிவிடும். ஸ்ட்ராங்க், லைட், கிரீன், லெமன், பிளாக், மசாலா எனத் தங்களின் மனநிலைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப விதவிதமாக தேநீரைத் தேர்ந்தெடுத்து ரசித்துப் பருகுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அவர்களில் பலரது சாய்ஸ் இப்போது ‘சாய் கிங்ஸ்’ஸாகத்தான் இருக்கிறது!

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

தேநீரில் தரமும் சுவையும் பல்வேறு வகையும் தந்து வாடிக்கையாளர்களின் மனதை ஈர்த்த சாய் கிங்க்ஸ் பல இடங்களில் வெற்றிநடை போட்டுவருகிறது.இந்த பாணியிலேயே சென்னையில் பல தேநீர்க்கடைகள் தொடங்கப்படுவதன் வாயிலாக சாய் கிங்க்ஸின் வீச்சையும் வெற்றியையும் புரிந்து கொள்ளலாம்.

2016-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் முதல் கடையைத் திறந்த ஜெஹபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோபன், இப்போது சென்னை நகரெங்கும் கடைகளை விரித்துக்கொண்டிருக் கிறார்கள்.

உணவு வகைமைகளில் மிக எளிமையான தேநீரை மட்டுமே பிரதானமாகக்கொண்டு, மக்கள் மனத்தை வென்றிருக்கும் சாய் கிங்ஸிற்கு ‘சிறந்த டிரெண்ட் செட்டர்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த தீம் ரெஸ்டாரன்ட் - Twisty Tails

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே புரிகிற உணர்வு அது. தங்கள் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்காத குறையாக அந்த ஜீவன்களையும் தம் வீட்டில் ஒருவராகவே பாவிப்

பார்கள். அவர்களால் அந்தச் செல்லங்களை அழைத்துச்செல்ல முடியாத ஒரே இடம் உணவகம். வளர்ப்புப் பிராணிகளுடன் உணவகங்களுக்குச் செல்லும் கான்செப்ட் வெளிநாடுகளில் பிரபலம். நம்மூரில் அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தக் குறையைப் போக்க ஆரம்பிக்கப்பட்ட தீம் ரெஸ்டாரன்ட்தான் ‘ட்விஸ்டி டெயில்ஸ்’.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

இங்கே உங்கள் நாய்க் குட்டிகளையும் அழைத்து வரலாம். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். குழந்தைகளை பிளே ஏரியாவில் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர் போல செல்லங்களை அவர்களுக் கான தனியிடத்தில் விளையாடவும் சாப்பிடவும் விடலாம். உங்களுக்குத் தனி மெனு. உங்கள் செல்லங்களுக்கு ஸ்பெஷல் மெனு. ‘ச்சே... தினம் வீட்டுல திங்கறதையே இங்கேயும் சாப்பிட வேண்டியிருக்கே…’ என உங்கள் நாய்க்குட்டி நினைத்து விடக்கூடாதில்லையா... அதனால் வீட்டில் வழக்கமாக நீங்கள் கொடுக்கும் உணவுகள் அல்லாமல் வெரைட்டியான உணவுகளே பரிமாறப்படும். உப்பு, மசாலா குறைவான உணவுகளாக அவை இருக்கும்.

அன்பான பிராணிகளுக்கும் சேர்த்து அழகாக உணவகம் நடத்தும் ‘டிவிஸ்டி டெயில்ஸ்’ ரெஸ்டாரன்ட்டுக்குச் ‘சிறந்த தீம் ரெஸ்டாரன்ட்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த பாரம்பர்ய உணவகம் - 99 KM

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ் சாலையில், சரியாக 99 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’.

குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் பொருள்கள் கடை; இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்கள் விற்பனை மையம்; கைத்தறி உடைகள் விற்பனை மையம்... இவற்றுக்கு நடுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும்வகையில் விசாலமான டைனிங்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

ஒருங்கிணைந்த பாரம்பர்ய காட்சிக் கூடமாக விளங்கும் இந்த உணவகத்தின் முகப்பில் பத்துக்கும் மேற்பட்ட குடங்களை வைத்திருக் கிறார்கள். சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், நன்னாரி நீர், வெட்டிவேர் நீர், சிரட்டைக் குடிநீர், தாகமுத்திக் குடிநீர்... என நம் மூதாதையர் பயன்படுத்திய ஆரோக்கியக் குடிநீரை நிரப்பிக்கொண்டே யிருக்கிறார்கள். குடிக்கலாம், பாட்டிலில் ஊற்றி எடுத்துக்கொண்டும் போகலாம்.

பனங்கற்கண்டு மூலிகைப் பால், இஞ்சி டீ, கருப்பட்டி காபி, மிளகுவடை, வாழைப்பூ வடை, கீரை வடை, குழிப்பணியாரம், அச்சு முறுக்கு என கிராமிய பதார்த்தங்களுக்கும் பானங்களுக்கும் தனித்தனி ஸ்டால்கள் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா அவல் உப்புமா, கொள்ளுக்கஞ்சி, வெங்காய ராகி ரவா தோசை, முளைகட்டிய பயிர் இட்லி, சீரக இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரைத் தோசை, தூதுவளைத் தோசை, பிரண்டைத் தோசை, முடக்கத்தான் சூப், வல்லாரை சூப், தூதுவளை சூப் களி, வரகரிசி ரச சாதம், குதிரைவாலித் தயிர் சாதம் என நம் பாரம்பர்ய உணவை அதன் தனித்தன்மை குறையாமல் இங்கே ருசிக்க முடியும்.

இந்திய விமானப்படையில் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மனோ சாலமன், நல்லுணவையும் பாரம்பர்யத்தையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கிய உணவகம்தான் ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’. உணவு, விளையாட்டு, திண்பண்டங்கள் என நம் மூதாதையர் வழங்கிவந்த சகல கூறுகளையும் ஒருங்கிணைத்து உணவகம் நடத்தும் மனோ சாலமன், பயணிகள் கொண்டுவரும் சாப்பாட்டை தன் உணவகத்தில் வைத்துச் சாப்பிடவும் அனுமதிக்கிறார். பாரம்பர்யத்தையும் இயற்கையையும் கொண்டாடும் 99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’புக்கு ‘சிறந்த பாரம்பர்ய உணவகம்’ எனும் விருதளித்து மகிழ்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த சைவ உணவகம் - திருவாரூர் வாசன் கபே

திருவாரூரில் பழைய கப்பி சாலை என்று அழைக்கப்படும் வி.ஆர்.எம் சாலையில் இருக்கிறது வாசன் கபே. சுதந்திரத்துக்கு முன்பு, வாடகை மாட்டுவண்டி நிலையம் நடத்திவந்த முருகையா பிள்ளை, ரயில் பயணிகளின் பசியாற்றுவதற்காக தொடங்கிய காபி கிளப்தான், 1952-ல் ‘வாசன் கபே’வாக வளர்ச்சி பெற்றது. பல தலைமுறைகளாக, வாடிக்கை யாளர்களுடன் உணர்வுபூர்வமான பந்தம்கொண்டு இயங்கி வரும் வாசன் கபே, காலங்கள் மாறி னாலும் தரத்திலும் சுவையிலும் மாற்றம் நிகழாமல் பார்த்துக் கொள்கிறது.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

அதிகாலை 5 மணிக்கே சுடச்சுட பொங்கல், வடை, இட்லி, பூரி, ஃபில்டர் காபி என அனைத்தும் தயாராகிவிடுகிறது. மதியமோ தஞ்சை மண்ணின் பாரம்பர்ய விருந்து. அமாவாசை நாள்களில் வடை, பாயசத்துடன் சிறப்புச் சாப்பாடு. வாரம் ஒருநாள் மட்டுமே பரிமாறப்படும் `கடப்பா’வை வாங்குவதற்காகவே இங்கு வருகிறவர்கள் ஏராளம். தரமான மளிகைப் பொருள்கள், ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், கறவை மாட்டுப் பால் என சமையலுக்கான மூலப்பொருள்கள் ஒவ்வொன்றிலும் தனித்து அக்கறை காட்டுகிறார் கபேயின் உரிமையாளர் முருகானந்தம். குடும்ப உறவு போல் நீடிக்கும் நீண்டகால ஊழியர்களின் அன்பான உபசரிப்பு வாடிக்கையாளர்களை வசப்படுத்துகிறது.

பசி தீர்த்து ருசி கூட்டும் வாசன் கபேவுக்கு, ‘சிறந்த சைவ உணவகம்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த அசைவ உணவகம் - யுபிஎம் உணவகம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யு.பி.எம் உணவகம். சாப்பிட வருவோரை சந்தனம் வைத்து வரவேற்பது, கர்ப்பிணிகளுக்கு வளையல் போட்டுக் கொண்டாடுவது என சாப்பிட வருவோரிடம் நேசம் காட்டுவதில் தொடங்குகிறது இவ்வுணவகத்தின் சிறப்பம்சம். எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால், இலை முழுவதும் விதவிதமாக மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்... அதுதான் ஈரோடு யுபிஎம் ஹோட்டல்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

ரத்தப்பொரியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், கொத்துக்கறி, மட்டன், நல்லி எலும்பு, கால் பாயா, சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி, வான்கோழி, புறாக்கறி, காடை, மீன், லெக்பீஸ், பிரியாணி, முட்டை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, உப்புமீன்  இவற்றோடு கொஞ்சம் சாதம்... முழுமையான, நிறைவான அசைவ விருந்துதான் யுபிஎம் ஹோட்டலின் அடையாளம். கேட்கக் கேட்க... தலை வாழையிலையில் அள்ளிவைத்து அன்பால் திணறடிக்கிறார் உணவகத்தின் உரிமையாளர் கருணைவேல். கூரையால் வேயப்பட்ட கொட்டகை, மெள்ள ஒலிக்கும் இறையிசைப் பாடல்கள் என சுற்றுச்சூழலும் மனதை ஈர்க்கிறது. 27 ஆண்டுகளைக் கடந்து நடைபோடும் யுபிஎம் ஹோட்டலில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதல் நாளே முன்பதிவு செய்தால்தான் இந்த மெகா விருந்து வாய்க்கும். உபசரிப்பு போலவே உணவின் சுவையும் பிரமாதம் என்கிறார்கள் விருந்து முடித்து வெளியே வருபவர்கள். சென்னை, கேரளம், கோவை எனப் பல பகுதிகளிலிருந்தும் வந்து காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

அட்டகாசமான அன்லிமிடெட் அசைவ விருந்துக்கு அன்போடு அழைக்கும் யுபிஎம் ஹோட்டலுக்குச் `சிறந்த அசைவ உணவகம்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த மெஸ் - தொழுதூர் அக்கா கடை

உணவின் ருசி என்பது, உபசரிப்பில்தான் முழுமையடையும். முகம் பார்த்து, இலை பார்த்து, கனிவோடு உபசரிக்கும் உணவகங்களோடு மக்களுக்கு வணிகம் கடந்த தொடர்பும் மதிப்பும் இருக்கும். தொழுதூர் அக்கா கடை, இதற்கு நல்ல உதாரணம்.  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 251-வது கிலோமீட்டரில் இருக்கிறது தொழுதூர். அந்தச் சின்ன ஊரில் எங்கு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றனவோ அதுதான் அக்கா கடைக்கு அடையாளம்.1999-ல் உணவகத்தைத் தொடங்கும்போது அக்கா வைத்த பெயர், ரெட்டியார் மெஸ். ஆனால், மக்கள் தாங்களாகச் சூட்டிய ‘அக்கா கடை’ என்ற பெயர்தான் இன்று நிலைத்திருக்கிறது.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

சாப்பாட்டுக்குச் சிரமப்படும் நான்கு கல்லூரி மாணவர்களுக்கு உதவலாமே என்ற நல்ல நோக்கத்தில் வசந்தி அக்கா தொடங்கிய உணவகம், இன்று நல்லுணவுக்கு அடையாளமாக மாறியிருக்கிறது. சாப்பிட வருகிற எல்லா முகங்களும் அக்காவுக்கு அறிமுகமானவையாகவே இருக்கின்றன. எல்லோரையும் நலம் விசாரிக்கிறார். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை அவர்கள் கேட்காமலேயே பரிமாறுகிறார். ஏரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு என நல்லதொரு நாட்டுச் சாப்பாடு விரும்பி ஏராளமானோர் அக்கா கடையில் குவிகிறார்கள். நாட்டுக்கோழி உப்புக்கறி, நல்லியெழும்பு பிரட்டல், நாட்டுமொச்சை போட்ட கருவாட்டுக் குழம்பு, கரண்டி முட்டை, மீன்புட்டு என வித்தியாசமான தொடுகறி வகைகளை அக்கா கடையில் மட்டுமே ருசிக்க முடியும். சிறிய ஊரில், 20 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான சிறிய உணவகம்தான். அதற்கோ மாநிலங்கள் கடந்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

தொழில் கடந்து, அன்பையும் சேர்த்துப் பரிமாறும் இந்த அக்கா மெஸ்ஸுக்கு, ‘சிறந்த மெஸ்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

சிறந்த பிரியாணி தொன்னை பிரியாணி ஹவுஸ்

சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் ஒக்கியம்பேட்டை, துரைப்பாக்கத்தில் மூட்டக்காரன்சாவடி என்ற இடத்தில் இருக்கிறது தொன்னை பிரியாணி ஹவுஸ். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் இங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். இனாம் குளத்தூர், ஆம்பூர், சங்கராபுரம், கொஸ்கொட்டே என தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பிரியாணி வகைகளை தினம் ஒன்றாகச் செய்து வாடிக்கையாளர்களை அசரவைக்கிறார்கள்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

தொன்னையின் வாசனையே பிரியாணியின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. உணவகத்தை நடத்தும் ஜெயேந்திரன் எம்.சி.ஏ, எம்.பி.ஏ படித்தவர். சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற வேட்கையில் பெங்களூரில் சாலையோரக்கடை ஆரம்பித்தார். இன்று சென்னையின் இதயமென வளர்ந்து நிற்கும் ஓ.எம்.ஆரில், 40 பேர் அமர்ந்து சாப்பிடும் இடவசதிகொண்ட ஓர் உணவகத்துக்கு உரிமையாளராக வளர்ந்து நிற்கிறார். கோவையிலும் ஓமனிலும் தொன்னை பிரியாணி ஹவுஸுக்குக் கிளைகள் இருக்கின்றன.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பிரியாணி வகைகளை தன்மை மாறாமல் இயற்கையோடு பரிமாறும் தொன்னை பிரியாணி ஹவுஸுக்கு `சிறந்த பிரியாணி’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!

யம்மி ஃபுட் ஆப் - ஸ்விகி

பெருகிவரும் பல்வேறு ஃபுட் டெலிவரி ஆப்களில் ஸ்விகிதான் தமிழர்களின் முதல் சாய்ஸ். கிட்டத்தட்ட 2 கோடி இந்தியர்களின் பசியாற்றும் ஒரு நிறுவனம்; ஆனால், இதற்கென சொந்தமாக ஒரு சமையலறைகூட கிடையாது. அதுதான் ஸ்விகியின் பலம். சில க்ளிக்குகள் மற்றும் ஸ்வைப்புகளில் ஆர்டர் செய்தால், சில நிமிடங்களில் நமக்கு விருப்பமான உணவை டெலிவரி செய்கிறது ஸ்விகி ஆப்.

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

பல மாணவர்களுக்கு ஸ்விகி யால் பார்ட் டைம் வேலை சாத்தியமாகியிருக்கிறது. மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிக் கிறார்கள் இந்நிறுவனத்தின் டெலிவரி பாய்ஸ்.

ஐந்து வயதே ஆன ஸ்விகியின் இன்றைய மதிப்பு ரூ.25,000 கோடிக்கும் மேல். இதெல்லாம் நாங்களே எதிர்பார்க்காதது என்கிறார்கள் ஸ்விகியின் நிறுவனர்கள் ஸ்ரீஹர்ஷா மெஜட்டி, நந்தன் ரெட்டி, ராகுல் ஜெய்மனி ஆகியோர். குறித்த நேரத்திலும் வாடிக்கையாளர்கள் மீதான அக்கறையுடனும் செய்யப்படும் சேவைதான் ஸ்விகியை மற்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. இந்த ஆன்லைன் அன்னபூரணிக்கு `சிறந்த ஃபுட் ஆப்’ விருதளிக்கிறது அவள் விகடன் கிச்சன்!