Published:Updated:

சுட்டி விகடனின் தூத்துக்குடி இன்போ! - அக்டோபர் 20-ம் தேதி மாணவர்கள் கெளரவிப்பு

தூத்துக்குடியில், `சுட்டிவிகடன்' நடத்திய `தூத்துக்குடி இன்ஃபோ 200’ எனும் பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் விழா வரும் அக்டோபர் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி இன்போ புக்
தூத்துக்குடி இன்போ புக்

’சுட்டிவிகடன்’ மற்றும் ’தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி’ இணைந்து `தூத்துக்குடி 200' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தியது. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் குறித்த 200 முக்கியத் தகவல்கள் தொகுக்கப்பட்டு, சுட்டிவிகடன் இதழுடன் வெளியான இணைப்பிதழில் வெளியிடப்பட்டது.

தேர்வில் பங்கேற்ற மாணவர்
தேர்வில் பங்கேற்ற மாணவர்

இதில், தூத்துக்குடி மாவட்டதைப் பற்றிய வியப்பூட்டும் வரலாற்று நினைவுகள், முக்கியமான சுற்றுலா தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், துறைமுகம், உப்பளங்கள், சிறப்பு உணவுகள், அகழாய்வு இடங்கள் குறித்த தகவல்களும், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கம், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், உமறுப்புலவர்… ஆகிய வரலாற்று நாயகர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த 200 தகவல்கள் அடங்கிய இணைப்பு புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தகவல்களில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்பட்டு, தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த 200 தகவல்களால் மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இத்தேர்வு, வழக்கமான எழுத்துத் தேர்வு போல அல்லாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி மற்றும் தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளப் பயிற்சி பெறும் வகையில் ஓ.எம்.ஆர் ஷீட்டில் நடத்தப்பட்டுள்ளது.

விழா அழைப்பிதழ்
விழா அழைப்பிதழ்

ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட இந்தத் தேர்வில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமுள்ள 60 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16,000 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், 900 மாணவ, மாணவிகள் சிறப்பு மதிப்பெண் பெற்று வெற்றிக் கேடயம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் சிறப்பு மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயமும் வழங்கப்பட உள்ளது. இவ்விழா, வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி அரங்கில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள்
தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள்

இந்தச் சிறப்புமிகு விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.ஜெயசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் ஞான கெளரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கேடயங்களை வழங்கி பாராட்டிப் பேசுகிறார்கள்.

இவர்களுடன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் முதன்மைச் செயல் அலுவலர் ராம மூர்த்தி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், A.A.A பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், முனைவர்.சேகர்,

தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள்
தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள்

அபி குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் பொன்சீலன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கேடயங்களை வழங்கி கெளரவிக்கிறார்கள். இது நம்ம விழா..! சுட்டிகளின் விழா..! அனைவரும் வருக.!