Published:Updated:

முதியோர் பாதுகாப்பு, நலம், பணம்... அவள் விகடன் - தமிழக காவல்துறை இணைந்து மேற்கொண்ட முன்னெடுப்பு

ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சியில்...

விடா முயற்சி... இரண்டு வாரங்களில் நடக்க ஆரம்பித்தேன். உட்கார முடியாது என்று சொன்ன டாக்டர் எதிரில் 25 நாள்களில் பத்மாசனம் போட்டு அமர்ந்தேன்.

முதியோர் பாதுகாப்பு, நலம், பணம்... அவள் விகடன் - தமிழக காவல்துறை இணைந்து மேற்கொண்ட முன்னெடுப்பு

விடா முயற்சி... இரண்டு வாரங்களில் நடக்க ஆரம்பித்தேன். உட்கார முடியாது என்று சொன்ன டாக்டர் எதிரில் 25 நாள்களில் பத்மாசனம் போட்டு அமர்ந்தேன்.

Published:Updated:
ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சியில்...

“இந்தியாவில் 36 மாநிலங்களில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 22 மாநிலங்களின் மாரத்தான்களில் என் கால் தடங்கள் பதிந்துள்ளன. மீதியுள்ள 14 மாரத்தான்களிலும் நிச்சயமாகக் கலந்துகொள்வேன்”

- இப்படி உறுதியான குரலில் பேசும் இந்த இளைஞரின் வயது 62.
அந்த அளவுக்கு உடலுறுதியும் மன உறுதியும் நிறைந்திருக்கும் இவர், இதுவரையில் உலக அளவில் 12 மாரத்தான்களில் பங்கேற்று அசத்தியுள்ளார்.

அவர்? தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

முதுமைக்கு மரியாதை தரும் வகையில் அவள் விகடன் – தமிழக காவல்துறையுடன் இணைந்து 'ஹலோ சீனியர்ஸ்' சிறப்பு நிகழ்ச்சியை சென்னை, குரோம்பேட்டையில் மே 28 சனிக்கிழமையன்று காலையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றபோதுதான், தன் 62 வயது இளமை ரகசியத்தை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார் மா.சுப்ரமணியன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்ச்சியின் நோக்கமே… முதியவர்களின் பாதுகாப்பு... உடல் நலம் மற்றும் பணம் நலம் ஆகியவைதான். மிக முக்கியமாக, தனியாக இருக்கும் முதியவர்களின் சொத்துகள் மற்றும் பணத்தைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் சென்னையில் முதிய தம்பதியர், அவர்களுடைய டிரைவராலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

இத்தகைய சூழலில்தான், முதியவர்களுக்காக இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ்ஸை நாம் தொடர்புகொண்டோம். அவள் விகடனின் பொறுப்பை உணர்ந்துகொண்டவாராக ஆர்வம்பொங்கப் பேசியவர், காவல் துறையையும் இந்த முயற்சியில் சேர்த்துக்கொள்ள வைத்தார்.

நிகழ்ச்சியில்...
நிகழ்ச்சியில்...

அத்துடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி உள்ளிட்டோரையும் தொடர்புகொண்டோம். அவர்களும் ஆர்வமுடன் ஒப்புதல் தெரிவித்ததோடு, முதியவர்களுக்கான இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் தங்களின் பங்களிப்பை உறுதி செய்தனர்.

முதியோர் நல மருத்துவர் பத்மஶ்ரீ வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவர் பத்மஶ்ரீ வி.எஸ்.நடராஜன்

இதையடுத்தே, ‘உங்கள் பாதுகாப்பு… உங்கள் நலம்… உங்கள் பணம்… ஆலோசிக்கலாம், அலர்ட் ஆகலாம் வாங்க’ என்று சென்னை, குரோம்பேட்டை, வசந்தம் திருமண மாளிகைக்கு அனைவரையும் அழைத்திருந்தோம். 28-ம் தேதியன்று, அரங்கம் நிறைந்திருக்க, சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அள்ளி வழங்கிய கருத்துரைகளும் அறிவுரைகளும் கலகல உரைகளும் அரங்கையே அசத்தின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதியோர் நல மருத்துவர் பத்மஶ்ரீ வி.எஸ்.நடராஜன்:
“முதுமை – இளமை இந்த மூன்று எழுத்துகளுக்கு இடையில் நடக்கும் வாழ்க்கையில் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசத்தை அனுபவிக்கிறோம். எல்லா வயதிலும் சந்தோஷமாக வாழ முடியும். அதற்கு தேவை, ஆரோக்கியமான வாழ்க்கை. வயது என்பது உடல் அளவில் இருக்கலாமே தவிர, மனதுக்குள் இருக்கக் கூடாது.”

நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம்
நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம்

நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம்:
“அந்தக் காலத்தோடு இந்தக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். இன்றைய வாழ்க்கைக்குத் தேவை பணம். அதை சரியான முறையில் முதலீடு செய்வது நம் கையில்தான் உள்ளது. பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதைவிட, உங்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கும் நல்ல முறையில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.”

தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி
தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி


தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி:
“மூத்தோரின் பாதுகாப்பும் பரிந்துரையும் நமக்கு அவசியம். அவர்களைப் புறந்தள்ளாதீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். பெரியவர்களுடன் வாழும் வாழ்க்கையைவிட, மகிழ்ச்சியான வாழ்க்கை இந்த உலகில் வேறு இல்லை. அதற்கு நானே உதாரணம்.”

திரைப்பட நடிகர் தாமு
திரைப்பட நடிகர் தாமு

திரைப்பட நடிகர் தாமு:
“எனக்கு வயது 57; உள்ளத்தால் 37 வயதுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு மிமிக்ரி உதவுகிறது. அதற்காக என் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்துகிறேன். அது உங்களாலும் முடியும். மற்றவர்களை சிரிக்க வைப்பதன் மூலம் நாமும் இளமையாக வாழலாம். அனைவருக்கும் வழிகாட்டலாம்.”

தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ்
தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ்


தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ்:
“முதுமை என்பது வயதில்லை. முதுமைப் பருவத்தில் குழந்தைகள் போல் நிகழ்காலத்தில் வாழுங்கள். உங்கள் அனுபவங்களை வைத்து இன்றைய இளைஞர்களை வழிநடத்துங்கள். இல்லத்தரசியைப் போற்றுங்கள். குடும்பத்தினருடன் கைகோத்துச் செயல்படுங்கள்.”

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
2004-ல் ஒரு விபத்தில் காரில் இருந்து தூக்கியெறிப்பட்டேன். முன் இருக்கையில் அமர்ந்திருந்த என் மண்டை இரண்டாகப் பிளந்திருந்தது. பின் இருக்கையில் இருந்த நண்பர் இறந்து கிடந்தார். வலது காலை அசைக்க முடியவில்லை. கூழ் கூழாகியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இனி நான் நடப்பது சந்தேகம்தான் என்றார்கள். சம்மணமிட்டு உட்கார முடியாது என்றார்கள். ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள்.
விடா முயற்சியால் இரண்டே வாரங்களில் நடக்க ஆரம்பித்தேன். உட்கார முடியாது என்று சொன்ன டாக்டர் எதிரில் 25 நாள்களில் பத்மாசனம் போட்டு அமர்ந்தேன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஏற்கெனவே நடைப்பயிற்சியில் இருந்த எனக்கு, இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் என்று தோன்றியது. நடக்கத் தொடங்கினேன். வெளியூர்களுக்குச் செல்லும்போது வண்டியில் இருந்து இறங்கி நடப்பேன். 12 கிமீ தூரம் என் இலக்கு. இந்த இலக்கு 21 கிலோ மீட்டர் மாரத்தானுக்கு என்னைத் தயார்படுத்தியது. இந்தியாவில் 36 மாநிலங்களில் 22 மாநிலங்களின் மாரத்தான்களில் என் கால் தடங்கள் பதிந்துள்ளன. மீதியுள்ள 14 மாரத்தான்களிலும் கலந்துகொள்வேன் என்கிற மன உறுதி என்னிடம் உள்ளது.

உலக அளவில் 12 மாரத்தான்களில் கலந்து கொண்டிருக்கிறேன். உலக அளவில் இன்னும் என்னால் பல மராத்தான்களில் கலந்துகொள்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களில் வெற்றியடைந்து பாராட்டுகள் பெற்றாலும், இந்த மாரத்தான் ஓட்டங்களை என் முகநூலில் பார்த்து, ‘சார்... உங்களைப் பார்த்து இப்ப நாங்களும் நடக்க ஆரம்பிச்சுட்டோம். மகிழ்ச்சியாக இருக்கோம்’ என்று சொல்பவர்களைப் பார்த்து நான் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இது எல்லாராலும் முடியும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்:

“கூட்டுக் குடும்பங்களின் அருமையை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும். பிள்ளைகள் வெளிநாட்டில் – பெற்றோர் உள்நாட்டில் என்ற வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது. தாத்தா - பாட்டியுடன் வாழும் வாழ்க்கையே சுகம் தரும்.”

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

குறித்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு முடிந்த ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சி, இன்றைய முதியோர்களுக்கு மட்டுமல்ல; நாளைய மூத்தக் குடிமக்களுக்கும் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது. அவள் விகடனுடன் தோள் கொடுப்போம்; துணை நிற்போம் என்கிற வகையில் வந்திருந்த அனைவரும் ஹேப்பி சீனியர்களாக விடைபெற்றனர்.

* அவள் விகடன் இதழுடன் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின், நிகழ்ச்சி ஒத்துழைப்பு The Chennai Homes - Premium Retirement Community.

* தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ் ஒத்துழைப்புடன் அவருடைய மேற்பார்வையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சென்னை, குரோம்பேட்டை வசந்தம் திருமண மண்டபத்தை காலை 9 மணிக்கே தயாராக வைத்திருந்தனர் மண்டபத்தை நமக்கு இலவசமாகவே அளித்த அதன் நிர்வாகத்தினர்.

* பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தானே முன்வந்து போஸ்டர்கள் ஒட்டியது உள்ளிட்ட விஷயங்களை மட்டுமல்ல, வந்திருந்த சீனியர்களை உபசரித்த விதம் சிறப்பு.

* அரங்கத்தில் நுழைந்ததும் அனைவருக்கும் குளுகுளு மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் கவனத்தைச் சிறிதும் சிதறடிக்காமல் இருக்கைக்கே வந்தன ஸ்நாக்ஸ் அயிட்டங்களுடன் தண்ணீர் பாட்டில், டீ, காபி.. போண்டா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism