Published:Updated:

`அம்மா கூடை நிறைய களிமண் எடுத்துட்டு வந்து, வீட்டுல ஓட்டை உடைசல் பூசுவாங்க! - செந்தில் கணேஷ் வீட்டுப் பொங்கல்

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

``அம்மா கூடை நிறைய களிமண்ணு எடுத்துட்டு வந்தாங்கன்னா, இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல பொங்கல் வரப்போகுதுன்னு அர்த்தம்.''

புதிது புதிதாக எத்தனை கொண்டாட்டங்கள் வந்தாலும், நம் தமிழ்க் குடும்பங்களின் தலைப்பிள்ளையான பொங்கலுக்கு எப்போதுமே முதல் மரியாதைதான். நம் அனைவருக்கும் சோறு போடுகிற இயற்கைக்கு நன்றி செலுத்துகிற விழாவல்லவா இது? வீட்டுக்கு வெள்ளையடிப்பதில் ஆரம்பித்து உறவுகளைக் காண்பதுவரை பொங்கல் பண்டிகையின் முழு அர்த்தத்தையும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அந்த வகையில் கிராமிய இசைப்பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியிடம் அவர்களுடைய பொங்கல் பண்டிகை அனுபவங்களைக் கேட்டோம். செங்கரும்புத் துண்டுகளாய் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். முதலில் பேசியவர் செந்தில் கணேஷ்.

`அம்மா கூடை நிறைய களிமண் எடுத்துட்டு வந்து, வீட்டுல ஓட்டை உடைசல் பூசுவாங்க! - செந்தில் கணேஷ் வீட்டுப் பொங்கல்

``எங்க ஊரு புதுக்கோட்டை பக்கத்துல கரம்பக்குடி. பொங்கல்னா எனக்கு எங்கம்மாதான் மொதல்ல நினைவுக்கு வருவாங்க. அம்மா காட்டு வேலை, தோட்டத்து வேலைன்னு எந்நேரமும் வெளிவேலைகள்லதான் இருப்பாங்க. அம்மா கூடை நிறைய களிமண்ணு எடுத்துட்டு வந்தாங்கன்னா, இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல பொங்கல் வரப்போகுதுன்னு அர்த்தம்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க வீடு அங்கங்கே சுண்ணாம்பு, மண்ணெல்லாம் உதிர்ந்துபோய் கிடக்கும். அம்மா, தான் எடுத்துட்டு வந்த களிமண்ணைக் குழைச்சு சுவரு முழுக்கத் தீட்டுவாங்க. திண்ணை சேதமாகியிருந்தா, அதை மொத்தமா உடைச்சு எடுத்துட்டு களிமண்ணுலேயே புதுசா திண்ணை போடுவாங்க. சின்னச் சின்ன உடைசல் மட்டும் இருந்துச்சுன்னா களிமண்ணை அப்பி சமன்படுத்துவாங்க. அப்புறம் திண்ணை ஓரங்கள்ல காவி அடிச்சு, வாசல்ல புது அடுப்பு கட்டுனாங்கன்னா வீட்டுக்கு புது களை வந்துடும்.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

அப்பா, வீட்ல இருக்கிற பழைய பொருள்களையெல்லாம் எடுத்து வெளியே போடுவாரு. அதுல சொந்தக்காரங்க அனுப்புன கடிதங்களும் கிடைக்கும். அவை எல்லாத்தையும் மறுபடியும் படிச்சுக் காட்டச் சொல்லுவாரு. எல்லா கடிதங்களும் சொல்லி வெச்சா மாதிரி `அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த'ன்னுதான் ஆரம்பிக்கும். `அந்தக் கடிதாசி உன் மாமா எழுதினது, இது உன் அத்தை எழுதினது'ன்னு அப்பா அந்தக் கடிதங்கள் தொடர்பான விஷயங்களை மலரும் நினைவுகள் மாதிரி சொல்வாரு.

பொங்கலன்னிக்கு காலையில குளிச்சு புதுசு கட்டிக்கிட்டதும், எங்க அப்பாயி (அப்பாவின் அம்மா)கிட்ட மொத ஆசீர்வாதம் வாங்குவோம். நெத்தியில விபூதி வெச்சு வாழ்த்துவாங்க. அப்புறம் அத்தை, மாமாகிட்ட ஆசீர்வாதம் வாங்குவோம். அடுத்தென்ன, ஒத்த வயசுப் பசங்களோட சேர்ந்துக்கிட்டு, மாட்டுப் பொங்கலுக்காக மாடுங்களை ஜோடிக்க (அலங்காரம் செய்ய) கிளம்பிடுவோம்'' என்றவர் தொடர்ந்தார்.

`` `நான் யாரையெல்லாம் அண்ணன்னு கூப்பிடுறேனோ அவங்களை நீ மாமான்னு கூப்பிடு. நான் மாமான்னு கூப்பிடுறவங்க வயசானவங்களா இருந்தா அப்பான்னு கூப்பிடு, சின்ன வயசுக்காரங்களா இருந்தா அண்ணன்னு கூப்பிடு'ன்னார் என் வீட்டுக்காரர்.''
ராஜலட்சுமி

``கிராமங்கள்ல பொங்கச் சீரு ரொம்ப ஃபேமஸ். பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தவங்க, அவங்க பொண்ணுக்கு பொங்கல் பண்டிகைக்காக தர்றதுதான் பொங்கச் சீரு. இந்தச் சீருல ஒரு கட்டுக் கரும்பு, பச்சரிசி, வெல்லம், பொங்கல் வைக்க பானை, தேங்காய், வாழைப்பழம்னு பண்டிகை கொண்டாடறதுக்கான அத்தனை பொருள்களையும் வெச்சுக் கொடுப்பாங்க. வசதியிருக்கிறவங்க இன்னும் சில பாத்திரங்களையும் சேர்த்துக்கொடுப்பாங்க. இது ஒருவகையில சின்ன சீர் தான்.

இந்தப் பொருள்களையெல்லாம் சில பேரு ஒத்தப்படையில வர்ற மாதிரி, அதாவது, பொங்கலுக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி, மூணு நாளைக்கு முன்னாடி கொண்டு வந்து கொடுப்பாங்க. மாப்பிள்ளை வீட்டுச் சொந்தக்காரங்க எல்லாரும் வர, பொண்ணு வீட்டுக்காரங்க கொண்டு வந்த சாமான்களை வெச்சு சமைச்சுப் பரிமாற, அந்தத் தெருவே களைக்கட்டிடும்'' என்றவரை தொடர்ந்து ராஜலட்சுமி பேசினார்.

கிராமியப் பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி
கிராமியப் பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி

``நான் திண்டுக்கல்ல டவுன்ல பிறந்து வளர்ந்தவ. கல்யாணத்துக்குப் பிறகுதான் கிராமத்துப் பொங்கல் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது. காலையில குளிச்சு புதுசு உடுத்தி, வீட்ல இருக்கிற தாத்தா, பாட்டி கால்ல விழுந்து திருநீறு வெச்சுக்குவோம். பொங்கல் அன்னிக்குத்தான் எல்லா சொந்தக்காரங்களும் ஊருக்கு வருவாங்க. எங்க கல்யாணம் முடிஞ்சு மொத பொங்கலன்னிக்கு என் அத்தை, (மாமியார்) ஊருக்கு வந்திருக்கிற சொந்தக்காரங்க எல்லார் வீட்டுக்கும் என்னைக் கூட்டிட்டுப்போய், `இதுதான் என் மருமவ'ன்னு அறிமுகப்படுத்தினாங்க. யார் எனக்கு என்ன உறவுமுறைன்னே தெரியாம முழிச்சேன்.

என் வீட்டுக்காரர், `நான் யாரையெல்லாம் அண்ணன்னு கூப்பிடுறேனோ அவங்களை நீ மாமான்னு கூப்பிடு. நான் மாமான்னு கூப்பிடுறவங்க வயசானவங்களா இருந்தா அப்பான்னு கூப்பிடு, சின்ன வயசுக்காரங்களா இருந்தா அண்ணன்னு கூப்பிடு. கிராமங்கள்ல கட்டாயம் எல்லோரையும் உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடணும். வெறுமனே வாங்க, போங்கன்னு பேசக் கூடாது'னு சொல்லிக்கொடுத்தார்.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி

நான் பொறந்த டவுன்ல சின்னவங்கன்னா அண்ணன், வயசானவங்கன்னா ஐயான்னு கூப்பிடுவேன். ஆனா, கிராமங்கள்ல இதை ஏத்துக்க மாட்டாங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. இன்னிக்குதான் மொத முறையா ஒருத்தரைப் பார்க்கிறோம்னாலும் அவரை உறவுமுறை வெச்சுத்தான் கூப்பிடணும். எனக்குப் பொங்கல்னாலே இந்தச் சம்பவம்தான் ஞாபகத்துக்கு வரும்'' என்று சிரிக்கிற ராஜலட்சுமியுடன் செந்திலும் இணைந்துகொண்டார்.

பொங்கலோ பொங்கல்!

அடுத்த கட்டுரைக்கு