சைவ, வைணவ ஒற்றுமையைப் போற்றும் தசாவதார நடனம்... சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கோலாகலம்!
சிதம்பரத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றுவரும் நாட்டியாஞ்சலி விழாவில், லண்டனிலிருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் என 20 பேர் கொண்ட குழு பங்கேற்றது.
நம் தேசத்தின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், மொழி, கலைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் பெரும் பொறுப்பு நமக்கு உண்டு. இருந்தாலும், பொதுவெளியில் அவற்றில் ஆர்வம் இல்லாத போக்கும் ஒருவருக்கொருவர் பிரித்துப் பார்த்து பழகிவரும் சூழ்நிலையும் இங்கு நிலவிவருகிறது.
இதேவேளையில், நம் நாட்டிலிருந்து தொழில் நிமித்தமாகவும் கல்வி வேலை வாய்ப்பு காரணமாகவும் உலகெங்கும் சென்ற தமிழ் மக்கள், நம் பாரம்பர்ய கலைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக, சிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றுவரும் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்க, லண்டன் நிருத்ய சங்கீத அகாடமியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்கள் என 20 பேர் கொண்ட குழு, நேற்று பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஆசிரியையாக இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்துவந்திருந்த ராதிகாவை சந்தித்தோம்.
''பரதக் கலையில் ஆர்வமுள்ள எவருக்கும் தில்லை நடராஜர் கோயிலில் தன் நாட்டிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. எங்களின் அந்தக் கனவு, இந்த வருடம் நிறைவேறியிருக்கிறது.
சிதம்பரம், நடராஜர் கோயில்கொண்டிருக்கும் சைவத் திருத்தலம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திருத்தலத்தை, உலகமெங்கும் வாழும் சைவர்கள் தலைமைச் செயலகமாக நினைக்கிறார்கள். நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் ஆடல் வல்லானாக நடராஜர் இருக்கிறார்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் முதல் நாள் நிகழ்ச்சியில், எங்கள் குழுவினர் பங்கேற்றது எங்களின் பாக்கியம் என்றுதான் சொல்லுவேன்'' என்று கண்களில் மகிழ்ச்சி பொங்கக் கூறியவர், மேலும் தொடர்ந்தார்.

''சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்த வருடம்தான் எங்களுக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நேரத்தில்தான். இதற்காக விண்ணப்பித்தோம். இறைவனின் விருப்பமாக, முதல்நாள் நிகழ்ச்சியிலே எங்கள் மாணவிகள் கலந்துகிட்டு ரொம்ப சிறப்பா நடனமாடினார்கள்.
20 மாணவிகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். எனக்கு உதவிகரமா தீபா, காவ்யா என இரண்டு பரத நாட்டிய ஆசிரியைகள் துணையாக உள்ளார்கள்.
சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஒரு வாரம் நடக்கும். அதில், பல குழுக்கள் கலந்துகொள்வார்கள். நிகழ்ச்சிக்கான தலைப்பு ஒவ்வொரு குழுவுக்கும் மாறுபடும்.
நாங்கள், மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தை பரத நாட்டியத்தில் நிகழ்த்திக் காட்டினோம். 45 நிமிடங்கள். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுக்குரிய அலங்காரமும் சிறப்பான வகையில் அமைந்தன.
'ஹரியும் சிவனும் ஒண்ணு' என்னும் விதமாக, சிதம்பரத்தில் நாராயணனின் அவதார மகிமைகளைச் சொல்லும் நிகழ்ச்சி அரங்கேறி, எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தருணிகா -ங்கிற பொண்ணு பரதம் கற்றுக்கொள்ள வந்தாள். மகள் பரதம் கற்றுக்கொள்வதைப் பார்த்து, அவங்க அம்மாவும் எங்கள் குழுவில் இணைந்து பரதம் கற்றுக்கிட்டாங்க. அம்மாவும் பொண்ணும் ஒரே மேடையில் ஆடி அசத்தினாங்க.''
திருமணமாகி, லண்டன் போனேன். லண்டன்ல மில்டன் கீட்ஸ்ங்கிற இடத்தில்தான் நாங்க வசிக்கிறோம். அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அந்தப் பள்ளியில் பரத நாட்டிய ஆசிரியையா பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. அதன்பின்தான், நான் தனியாக நாட்டியப் பள்ளி ஆரம்பித்தேன். ஏழு பேரோட ஆரம்பித்து, இன்று 200 பேருக்கும் மேல பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்திருக்கேன்'' என்கிறார் ராதிகா.