Published:Updated:

ஜல்லிக்கட்டு காளைகள்... வாடிவாசலில் கெத்து காட்ட எதெல்லாம் அவசியம்?

"வாங்குற கண்டுகளை நல்லா ஓடவிட்டுப் பழக்கணும். ரொம்ப தூரம் நடக்க விடுவோம். பாய்ச்சல் காட்டுவோம். வாரத்துல ரெண்டு நாள் நீச்சல் பயிற்சி... பழக்குற விதத்திலேயே மாடு பக்குவமாயிரும்."

"ஜல்லிக்கட்டுங்கிறது எங்க பண்பாடு. சிந்து சமவெளி, கீழடின்னு பல நாகரீகங்கள்ல காளை மாடும் ஜல்லிக்கட்டும் இருந்திருக்குன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. இத்தனை காலமா இந்தக் கலையை பாதுகாத்து எடுத்துக்கிட்டு வந்து எங்க கையில தந்திருக்காக. நாங்க இதை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்குறோம்."

காளையை கம்மாயில் நீந்தவிட்டபடியே பேசுகிறார் மணி. முடக்கத்தான் மணி என்றால் ஜல்லிக்கட்டு ரசிகர்களுக்கு அத்துப்படி. எந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் முடக்கத்தான் மணிக்கென்று கொஞ்சம் பரிசுகளை எடுத்து தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். மணி, இப்போது ஜல்லிக்கட்டு பயிற்சியாளரும் கூட.

மணியின் உடலெங்கும் மாடு கிழித்த காயங்கள். ஒருமுறை மாடு தொடையில் குத்திக் கிழித்திருக்கிறது. இன்னொரு ஜல்லிக்கட்டில் முதுகுப்பக்க எலும்பே முறிந்திருக்கிறது. ஆனாலும் ஜல்லிக்கட்டென்றால் முதல் ஆளாக நிற்கிறார் மணி.

முடக்கத்தான் மணி
முடக்கத்தான் மணி

மணியிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது.

"எங்க காலத்துல குருட்டாம்போக்குல மாடுக முன்னாடி போயி நிப்போம். இப்போ பக்குவமும் அனுபவமும் வந்திருச்சு. ஒரு மாட்டோட தன்மையை எப்படிக் கணிக்கிறது, அதோட பார்வையை எப்படி திசை திருப்புறது, குத்த வந்தா எந்தப்பக்கம் பாஞ்சு தப்பிக்கிறதுன்னு பல விஷயங்கள் அத்துப்படியாயிருச்சு. இதையெல்லாம் தம்பியளுக்குக் கத்துக்கொடுக்கணும்ல. எட்டாவது படிக்கிற காலத்துல இருந்து ஜல்லிக்கட்டு களத்துல நிக்கிறேன். எனக்கு எங்க மூத்தாளுக ஆதரவு கொடுத்தமாதிரி இன்னைக்கு நிக்கிற தம்பியளுக்கு ஆதரவு கொடுக்கணும்ல... அதான் இந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பிச்சிருக்கோம்.

"இந்தப் பயிற்சி பெற எந்தக் கட்டணமும் இல்லை. ஒரே தகுதி, தைரியம்."
முடக்கத்தான் மணி

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்துல ஒவ்வொரு வருஷமும் வெவ்வேற இடங்கள்ல பயிற்சி கொடுப்போம். இந்த வருஷம் மதுரைக்குள்ள மட்டும் பத்து இடத்துல குடுத்திருக்கோம். வெளி மாவட்டங்களுக்குப் போயி பயிற்சி கொடுக்கிறதும் உண்டு. என்னோட சேர்ந்து நிறைய மூத்த மாடு பிடி வீரர்கள் பயிற்சி கொடுக்க வாராங்க. கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாஜி, ரஞ்சித், பண்ணைகுடி விமல், அரிட்டாபட்டி கண்ணன், கோயில்பாப்பாகுடி ராஜான்னு நிறைய பயிற்சியாளர்கள் இருக்காங்க. எங்க பயிற்சி மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்ட பலபேரு இன்னைக்கு முன்னணி மாடு பிடி வீரர்களா இருக்காங்க. மணப்பாறை கணேஷ், கார்த்தி, அரியவேல் அமுதன், காசிராஜன், கோட்டைமேடு கணேசன், முத்தையா, சிவகங்கை ஆண்டிச்சாமி, உத்தங்குடி கார்த்தி, ஸ்ரீராம்ன்னு நிறைய இளம் தலைமுறை வீரர்களை உருவாக்கி வச்சிருக்கோம். எங்களைவிட திராணியா பயலுக களத்துல நின்னு விளையாடுறாய்ங்கே..." என்கிறார் மணி.

மதுரை கோரிப்பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மணி. முடக்கத்தான் கிராமத்தில் ஜல்லிக்கட்டை கற்றுக்கொண்டதால் அந்தக் கிராமத்தின் பெயரை தன் பெயருக்கு முன்பு சூட்டிக்கொண்டிருக்கிறார், நன்றிக்கடனாக.
முடக்கத்தான் மணி
முடக்கத்தான் மணி

"அலங்காநல்லூர் ஸ்ரீதர், அய்யாங்கோட்டை பாண்டிதுரை, மேட்டுப்பட்டி பால்பாண்டி, கன்னனந்தல் சங்கு, இலந்தைக்குளம் லெட்சுமணன், உண்டியல் செந்தில்னு பல பெருந்தலைகளைப் பார்த்து வளர்ந்த ஆளு நான். எல்லாரும் சொல்ற மாதிரி ஜல்லிக்கட்டு உயிரை எடுக்கிற விளையாட்டு இல்லை. முறையா விளையாட கத்துக்கிட்டவன் மாடுகிட்ட குத்துப்பட மாட்டான்; முதமுதல்ல நான் களத்துல இறங்கினது அலங்காநல்லூர்ல. அப்போ வயசு 13. இருபத்தைஞ்சு வருஷமாச்சு. இப்பல்லாம் 22 வயசு ஆகியிருந்தாத்தான் களத்துக்குள்ளயே இறங்க முடியும். அதுக்கும் ஆயிரத்தெட்டு சட்டம் இருக்கு. அப்போ மனசுல திடம் இருக்கிற யாரும் மாடு பிடிக்கலாம். எறங்குன முத விளையாட்டுலயே கை எலும்பு முறிஞ்சு போச்சு எனக்கு. கொம்பைப் பாத்து மிரண்டுட்டேன். கூட வந்த ஆளுங்க தூக்கி வண்டியில போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தாங்க. பொதுவா ஒரு விளையாட்டுல காயம்பட்டா மறுபடி அந்தப் பக்கம் போகமாட்டாங்க. ஆனா ஜல்லிக்கட்டு அப்படியில்லை. குத்து வாங்கிட்டு ஒதுங்கிட்டா, ‘மாட்டு குத்து வாங்கின பயடா’ன்னு ஊருல கேலி பேசுவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வைராக்கியத்துலயே, சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டுக்குப் போயி ஒரு மாட்டை அடக்கி அண்டாவை பரிசா வாங்கிட்டு வந்தேன். இன்னைக்கு வரைக்கும் தொடருது. நாமளே எவ்வளவு காலத்துக்கு ஓடுறது? நாலு பேருக்குக் கத்துக்கொடுக்கணும்ங்கிறதுக்காக ஊரைச் சுத்திக் கிடக்குற வயக்காடுகளை சமன்படுத்தி வாடிவாசல் கட்டுனேன். 'நல்ல விஷயம் பண்றே... நீ எந்த உதவி கேட்டாலும் செய்யத் தயார்'னு மாடு வச்சிருக்க பெரியவங்க வந்தாங்க. இதுவரைக்கும் நூத்துக்கணக்கான இளந்தாரிங்க பயிற்சி முடிச்சிருக்காங்க.

ஜல்லிக்கட்டுல அடிப்படையான சில விஷயங்கள் இருக்கு. விளையாடுற மனுஷனுக்கும் சரி, மாட்டுக்கும் சரி... அடிபடக்கூடாது. அதுக்கு 60 வகையான பயிற்சிகள் இருக்கு. முதல்ல பயம் இருக்கக்கூடாது. சீறி வர்ற மாட்டைக் கண்டு ஓடக்கூடாது. நெத்தியில கைவச்சு விலகணும். கொம்பைப் புடிக்கக்கூடாது. கொம்பைப் புடிச்சா பயந்துட்டோம்னு அர்த்தம்.

முடக்கத்தான் மணி
முடக்கத்தான் மணி

திமிலைத்தான் கைசேர்த்து அணைக்கணும். அதுதான் வீரம். மாடு ‘அவுட்டர்’ சுத்துப் போட்டா காலு பின்னணும். ‘இன்னர்’ சுத்து போட்டா காலை பின்னக் கூடாது. மாட்டோட சேர்ந்து ஓடணும். தொங்கக்கூடாது. வாலைப் புடிக்கக்கூடாது. மாட்டுக்குத் தகுந்தாப்புல வளையணும். மாடு பலவாறா போட்டி போடும். ரெண்டு பக்கமும் தாக்கும். மொத்தக் கவனமும் மாட்டு மேல இருக்கணும்.

முதல்ல நீச்சல் பயிற்சி... அப்புறம் ஓட்டப்பயிற்சி... அப்புறம்தான் வாடிவாசலுக்குள்ள விடுவோம். முதல்ல மனுஷனை அணைக்கனும். ஒரு ஆளை காளை மாதிரி ஒடவிட்டு அணைக்கப் பழக்குவோம். அடுத்து கன்னுக்குட்டி. கடைசியாத்தான் பெருமாடு. இன்னைக்கு எந்தூர்ல ஜல்லிக்கட்டு நடந்தாலும் நம்ப இளந்தாரிங்கதான் முன்வரிசையில நிக்கிறாய்ங்க.

முதல்ல பசங்களுக்கு மட்டும்தான் பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்தேன். அப்புறமா ஆளுகள்லாம் வந்து மாடுகளுக்கும் பயிற்சி கொடுத்தா நல்லதுன்னு சொன்னாக. எல்லா காளையையும் ஜல்லிக்கட்டுக்குப் பழக்கமுடியாது. அதுக்குன்னு சில தகுதிகள் இருக்கு. ஜல்லிக்கட்டுக் காளை ‘பிரீடு’ பண்றதுக்குன்னே சில ஆட்கள் இருக்காங்க. கன்றோட தாயும், தந்தையும் வடிவா இருக்கணும். களத்துல நல்லா நின்னு விளாடுற காளையை, மலையில நல்லா மேஞ்சு திரிஞ்சு கட்டுமஸ்தா இருக்கிற பசுவோட சேப்பாங்க. மைக்குடி, மணப்பட்டி, ஊமச்சிக்குளம், தொட்டியப்பட்டி, குரண்டி, வாடிப்பட்டி பகுதிகள்ல கிடைமாட்டுக் காரங்ககிட்ட நல்ல கண்டுக கிடைக்கும். அம்பதாயிரம், ஒரு லட்சமெல்லாம் விலை போகும். கண்டுக்கு ஏறுவாலு இருக்கணும். திடமான உருப்படியா இருக்கணும். நெடுவடையா இருக்கணும். குத்து கொம்பு இருக்கணும்.

வாங்குற கண்டுகளை நல்லா ஓடவிட்டுப் பழக்கணும். ரொம்ப தூரம் நடக்க விடுவோம். பாய்ச்சல் காட்டுவோம். வாரத்துல ரெண்டு நாள் நீச்சல் பயிற்சி... நம்ம பழக்குற விதத்திலேயே மாடு பக்குவமாயிரும். தரையில கொம்பைக் குத்தி கூராக்கிக்கும். பச்சரிசி, பருத்தி விதை, பாசி தூசி, உளுந்தந்தூசி, கோதுமைத்தவிடு, இரும்புச்சோளம்னு சாப்பாடு கெத்தா இருக்கும். விளாட்டுக்கு ரெண்டு மாசம் முன்னாடி பேரீச்சை, முட்டை கொடுப்போம். சரியான போக்குல வளத்தா களத்துல மாடு முறுக்கிட்டு நிக்கும்...’’

பேசி முடிக்கும்போது மணி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு