Published:Updated:

“வாடிக்கையாளர்கள்தான் எப்போதும் என் கடவுள்!”

வணிகர் மாநாட்டில் ‘இதயம்’ வி.ஆர்.முத்து

பிரீமியம் ஸ்டோரி

நிகழ்வு

ன்னதான் ஆன்லைன் பிசினஸ் ஒருபக்கம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் சில்லறை வர்த்தகம் என்று சொல்லப்படும் ரீடெய்ல் பிசினஸ்தான் இன்றும், 90% மக்களின் தேவையை நிறைவேற்றுகிறது. மளிகைக்கடைகள் முதல் மருந்துக்கடை வரை, துணிமணிகள் முதல் கட்டுமானப் பொருள்கள் வரை ரீடெய்ல் வியாபாரத்தையே நம்பியிருக்கின்றனர் மக்கள். ரீடெய்ல் துறை சார்ந்த விற்பனையாளர்கள் வணிகர் மாநாட்டை, சென்னையில் நடத்தியது ரீடெய்ல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா.

இந்திய சில்லறை வணிகர் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.நாகேஷ் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார். “இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமைப்புசாரா சில்லறை வணிகத் துறையில், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருக்கும். அதற்கு நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில், சிறிய அளவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூட தொழில்நுட்பத்தின் துணையுடன் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன. எதிர்காலத்தில் இது நிலையான வளர்ச்சிப் பாதைக்கு வித்திடும்.

“வாடிக்கையாளர்கள்தான் எப்போதும் என் கடவுள்!”

ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ மாதிரியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதிய உத்திகளைக் கையாண்டதால், அவர்களின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. இதனால் இன்று பெரும்பாலான உணவகங் களில் இருக்கைகள் காலியாக இருக்கின்றன. இருப்பினும் தரமான உணவுகளைத் தரும் உணவகங்களின் மவுசு குறையவில்லை. அவற்றின் உணவுகள் ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ ஆப்ஸ்கள் மூலம் ஜமாய்த்துக்கொண்டுதான் இருக்கின்றன’’ என்றார்.

‘இதயம்’ ஆயில் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.முத்து இந்த மாநாட்டில் பேசியது சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. “மும்பையில் இருக்கும் எங்களுடைய விநியோகஸ்தர் ஒருவர், இரவுக் காட்சி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. படம் சுவாரஸ்யமாக இருந்ததால், அந்த அழைப்பை அவர் எடுத்துப் பேசாமல், கட் செய்தார். மீண்டும் அந்த அழைப்பு வந்தது. வேண்டாவெறுப்பாக செல்போனை எடுத்துப் பேசினார். ‘இரண்டு லிட்டர் இதயம் நல்லெண்ணெய் அவசரமாகத் தேவை’ என்று செல்போனில் பேசியவர் சொன்தைக் கேட்டு, அந்த விநியோகஸ்தருக்கு எரிச்சல்தான் வந்தது. போன் செய்தவரே தொடர்ந்து பேசினார்.

‘பிரதமர் அரசுமுறைப் பயணம் செல்லவிருக்கிறார். அவர் காலையில் இட்லி சாப்பிடுவார். இட்லியுடன் சாப்பிட இட்லிப்பொடிக்கு எண்ணெய் தேவை. அதனால் உங்களுக்கு அவசரமாக போன் செய்தேன்’ - இதைக் கேட்டவுடனே இரண்டு லிட்டர் நல்லெண்ணெய் பாக்கெட்டைக் கொண்டு போய்க் கொடுத்தார் அந்த விநியோகஸ்தர். இது உண்மை யில் நடந்த சம்பவம். தரமான பொருள்களை வழங்கும் போது ஒரு நாட்டின் பிரதமர்கூட நம்முடைய வாடிக்கையாளராக மாறுகிறார். எனவே, பொருள்களின் தரத்தில் என்றைக்குமே சமரசம் செய்துகொள்ளாதீர்கள்’’ என்றவர் முத்தாய்ப்பாக, “நான் ஒரு வியாபாரி. வியாபாரமே என் மதம். என் நிறுவனமே என் கோயில். வாடிக்கையாளர்களே என் கடவுள். வாடிக்கையாளர் சேவையே நான் செய்யும் பூஜை. வாடிக்கையாளர்களின் திருப்தியே என் பிரசாதம்” என்கிற இந்திக் கவிதையைச் சொல்ல, மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர்.

வி.ஆர்.முத்து
வி.ஆர்.முத்து

ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பத்மசிங் ஐசக், மன்னா ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ நாசர், எஸ்.பி.ஐ சினிமாஸ் குழும நிறுவனத்தின் தலைவர் கிரண் ரெட்டி ஆகியோரது பேச்சுகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தொழில்முனைவோர்களுக்கு உற்சாகம் தருவதாக இருந்தன.

இந்த நிகழ்ச்சியின் இறுதியாக, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்தியா ரீடெய்ல் எக்ஸலன்ட்ஸ் அவார்ட் 2019, ஆயத்த ஆடைகள், மின்னணுத் தொழில், பலசரக்கு, நகை வியாபாரம், ஃபேஷன் துறை, காலணி, கைப்பேசி ஆகிய பல்வேறு பிரிவுகளில் தனித்துவத்துடன் விளங்கும் சில்லறை வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், சில்லறை வர்த்தகத்துறையில் புதுமுகச் சிந்தனையாளர்கள் மற்றும் தனிதடத்தினை (டிரெண்ட்) உருவாக்கியவர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு