Published:Updated:

கடலூரில் நாணயம் விகடன் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

சமீபகாலமாக, வங்கிச் சேமிப்பு மற்றும் தங்கத்தில் முதலீடு போன்றவற்றில் வருமான வளர்ச்சி பெரிய அளவில் இல்லாததால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். வழக்கமான சேமிப்புத் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறப்பானது என்ற எண்ணம், முதலீட்டாளர்கள் மத்தியில் பரவிவருகிறது. அதேபோல, பங்குச் சந்தையில் நேரடி முதலீடு செய்யும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பாதுகாப்பானதாக நம்புகிறார்கள்.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதற்கு மிக முக்கியக் காரணம். எஸ்.ஐ.பி முறையில் மாதமொன்றுக்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும் என்பது சாதகமான விஷயம். நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் இதுவரைக்கும் மாதத்துக்குச் சராசரியாக 9.32 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் அதிகரித்துள்ளன. எஸ்.ஐ.பி முறையில் மாதம் செய்யப்படும் முதலீடு சராசரியாக 3,000 ரூபாயாக உள்ளது.

2016-17-ம் ஆண்டில் எஸ்.ஐ.பி மூலம் ரூ.43,900 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 2018-19-ம் ஆண்டில் இரு மடங்குக்குமேல் அதிகரித்து, ரூ.92,700 கோடியாக உள்ளது. 2019-20-ம் ஆண்டில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் எவையெவை, எத்தனை வகை முதலீடுகள் இருக்கின்றன, முதலீட்டுக் காலத்தை எப்படி முடிவுசெய்வது என்பன போன்ற சூட்சுமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, 'நாணயம் விகடன் மியூச்சுவல் ஃபண்ட்... கனவு... முதலீடு... முன்னேற்றம்!’ என்னும் ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஏற்கெனவே, தஞ்சாவூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

அடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 29-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று கடலூரில் (ஆற்காடு உட்லேண்ட்ஸ் ஹோட்டல், 1 பாரதிசாலை) நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. அனுமதி இலவசம் என்பதால், அனைவரும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி வகுப்பில், மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும், லாபம் தரக்கூடிய ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி, எந்த ஃபண்ட் யாருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பன உட்பட, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் பலவும் விவாதிக்கப்படும். பங்கேற்றுப் பயன்பெறுங்கள்!