Published:Updated:

``பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தவேண்டியது அவசியம்” - தங்கம் தென்னரசு

``பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தவேண்டிய அவசியம்” என்று தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கிய, `மெட்ராஸ் டிஜிட்டல்’ என்னும் புதிய இணையதளத்தைத் தொடங்கிவைத்து தங்கம் தென்னரசு உரையாற்றினார்

Thangam Thenarasu
Thangam Thenarasu

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 -ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. மெட்ராஸ் நகரின் பழைமையையும் பெருமையையும் போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நகரெங்கும் நடைபெற்றுவருகின்றன. இதையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நேற்று (24.8.19) மெட்ராஸ் நகரின் தொன்மையையும் பாரம்பர்யத்தையும் ஆவணமாக்கும் `டிஜிட்டல் மெட்ராஸ்’ என்னும் இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் மெட்ராஸ் குறித்த ஆய்வுக்கட்டுரைகள், வீடியோக்கள், நூல்கள், புகைப்படங்கள் ஆகியன இடம்பிடித்துள்ளன.

chennai central
chennai central

நேற்று, சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் மெட்ராஸ் டிஜிட்டல் ( 'http://www.digital-madras.tamilheritage.org/’) என்னும் இணைய தளத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷிணி ஜெர்மெனியில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினர். `இந்த இணையதளம் மெட்ராஸின் பாரம்பர்ய அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படுகிறது’ என்றும், `தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலம் இதேபோன்று பல முக்கிய நகரங்களுக்கும் தனித்தனி பக்கங்கள் தொடங்கப்பட்டு அதன் அடையாளங்கள் தொகுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மூத்த எழுத்தாளர், `நரசய்யா’ தமிழர்களின் பண்டைய வரலாற்றின் பெருமையையும், வணிகச் சிறப்புகளையும் தன் பேச்சில் எடுத்துரைத்தார்.

`` இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கப்பல் வணிகம் மேற்கொண்டிருந்த தமிழர்கள், இயற்கையின் துணைகொண்டே பல கடற்பயணங்களை மேற்கொண்டனர். சோழ மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்துவைத்திருந்தனர். மார்கழிமாதம் ஆருத்ரா திருநாள் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடா கடல்நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். ஆகையால்தான் `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன். அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள `அக்கரைபட்டினம்’ என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் ராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். ராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல் பயணங்களை அதிகரித்தான்” என்று தமிழர்களின் சிறப்புகளை எடுத்துக்காட்டிப் பேசியவர், மெட்ராஸ் துறைமுகம் உருவான வரலாற்றையும் எடுத்துரைத்தார்.

Narasaiya
Narasaiya

1639 -ம் ஆண்டு மெட்ராஸ் வந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் பிரான்கிஸ்டே மற்றும் ஆண்ட்ருகோகன் ஆகியோர் நாயக்கர்கள் காலத்தில் சிறு இடத்தைப் பெற்று வணிகம் செய்ய உரிமையும் பெற்றனர். அதன்பின் அவர்கள் ஆளும் அதிகாரத்தைப் பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வினையும் அரங்கில் பகிர்ந்துகொண்டார்.

அடுத்து பேசிய கௌதம சன்னா, `` `மெட்ராஸ்’ என்னும் சொல்லின் மூலச்சொல்  `மதராஸன்’ என்னும் குறுநில மன்னனின் பெயர் என்றும், அவன் பெயரிலேயே இந்தப் பட்டினம் `மதராஸப் பட்டினம்’ என்று வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். இன்றும் பழைமை மாறாமல் இருக்கும் வடசென்னையில் காணப்படும் பல பாரம்பர்யக் கட்டடங்களைக் காக்கவேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கினார். மேலும், அவ்வாறு பாதுகாக்காமல் விட்டதனால்தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவலம் நிகழ்ந்தது'' என்றார்.

Gowthama Sanna
Gowthama Sanna

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து முன்னாள் கல்வியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது, பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தவேண்டிய அவசியங்கள் குறித்துப் பேசினார். ``உரிய ஆவணங்கள் இன்றியே நம்மால் வெளிநாடுகளில் இருக்கும் நம் கலைப் பொக்கிஷங்களை மீட்க முடியவில்லை. அதனால் ஆவணப் படுத்துவது மிகவும் இன்றியமையாதது'' என்று கூறினார். 

மேலும் அவர், `மெட்ராஸ் சென்னை எனப் பெயர் மாற்றப்பட்டபோது, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ என்று பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன. பெயர்கள் மாறினாலும் அவற்றின் பாரம்பர்யத்தைக் காத்து வரும்தலைமுறைக்கு இந்த நிலத்தின் வரலாற்றை வழங்கவேண்டியது அவசியம்’ என்றும் குறிப்பிட்டார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ஆய்வாளர், சிங்க நெஞ்சம் சம்பந்தர், வழக்கறிஞர் காந்தி, ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்ந்த நண்பர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.