Published:Updated:

உதாரணம்: நாச்சியார் வீடு

நாச்சியார் வீடு
பிரீமியம் ஸ்டோரி
நாச்சியார் வீடு

கூட்டுக் குடும்பத்தில் குதூகலப் பொங்கல்!

உதாரணம்: நாச்சியார் வீடு

கூட்டுக் குடும்பத்தில் குதூகலப் பொங்கல்!

Published:Updated:
நாச்சியார் வீடு
பிரீமியம் ஸ்டோரி
நாச்சியார் வீடு

கூட்டுக்குடும்பங்கள் அருகிவிட்ட காலம் இது. கணவன், மனைவி, குழந்தைகள் என வாழ்வதே கூட்டுக்குடும்பம் என்றாகிவிட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த 95 வயது நாச்சியார், கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். 15 பேர் கொண்ட பெரிய குடும்பம் இது!

உதாரணம்: நாச்சியார் வீடு
உதாரணம்: நாச்சியார் வீடு

சாப்பாடு, வரவு செலவு, ஒரே ஒரு டி.வி என அனைத்தும் அனைவருக்கும் பொதுதான். நாம் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, மொத்தக்குடும்பமும் கூடத்தில் அமர்ந்து நாச்சியார் பாட்டியுடன் அந்தாக்‌ஷரி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மலர்ந்தும் மலராத பாதி மலர்போல...' என்று பாட்டி பாட, `பாடச்சொன்னா, படிக்கிறீங்களே' என்று பாட்டியை கிண்டலடிக்கிறார்கள் பேரன்கள். இதுபோல நாச்சியார் வீட்டில் நாம் கண்ட ஆனந்தக் காட்சிகள் ஆயிரம்!

கூட்டுக் குடும்பத்தில் குதூகலப் பொங்கல்!
கூட்டுக் குடும்பத்தில் குதூகலப் பொங்கல்!

நாச்சியாரே பேச்சைத் தொடங் கினார்... ``எங்க பூர்வீகத் தொழில் நெசவு. என் கணவர், நாராயணசாமி. எங்களுக்கு ஆண் பிள்ளைங்க அஞ்சு, பெண் பிள்ளைங்க நாலுன்னு மொத்தம் ஒன்பது பிள்ளைங்க. என் கணவர் 1997-ம் வருஷம் தவறிட்டார். `எனக்குப் பிறகும் இதே மாதிரி நீங்க ஒற்றுமையா இருக்கணும். அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்'னு அவர் அடிக்கடி சொல்வார். இருந்தாலும், ஊர்லேயே அஞ்சு மகன்களுக்கும், அஞ்சு வீடுகளைக் கட்டி வெச்சுட்டுதான் போனார்.

மூத்த மகன் வெங்கடாஜலபதியும் மூணாவது பையன் ராஜாராமனும் பக்கத்துத் தெருவுலதான் இருக்காங்க. இரண்டாவது பையன் தங்கராஜும் நாலாவது பையன் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வீட்டுல இருக்காங்க. வியாபார நிமித்தமா கடைசி பையன் தியாகராஜன் கரூர்ல இருக்கான். தங்கராஜோட மனைவி வசந்தா, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், அவங்களோட மனைவி இந்திராணி, நிர்மலா, அவங்க பிள்ளைங்க மதன், கவின், லக்‌ஷிதன்னு ஒன்பது பேர் இங்கே இருக்காங்க. கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துல கிருஷ்ணமூர்த்தி, அவனோட மனைவி ஷோபா, அவங்களோட பையன் தினேஷ்குமார்னு மூணு பேர் வசிக்கிறாங்க. என்னோட இரண்டாவது பெண் கலாவும் இங்கேதான் இருக்கா. அவங்களோடுதான் நான் இருக்கேன்.

அதோட, சமீபத்தில் தவறிய என் மூத்த பொண்ணு தனலட்சுமியோட கணவர் லட்சுமணனும் எங்ககூடதான் இருக்கிறார். ஆக, 15 பேரும் ஒரே வீட்டுல வாழறோம்.

 இரண்டாவது மகன் 
 தங்கராஜூடன் நாச்சியார்
இரண்டாவது மகன் தங்கராஜூடன் நாச்சியார்

மூணு இடங்கள்ல இருக்கும் எங்க குடும்பத்தைச் சேர்ந்த 60 பேரும் பொங்கலை மட்டும் ஒண்ணா கொண்டாடுவோம். குளித்தலையில் இருக்கிற என் மகள் ஜெயலட்சுமி வீட்டுல 60 பேரும் ஒண்ணுகூடி ஒரே பானையில பொங்கல் வெச்சு அந்த வீட்டையே ரெண்டு பண்ணி சந்தோஷப்படுவோம். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு காலையில மூத்த மகன் வெங்கடாஜலபதி வீட்டுக்கும் மதியம் ரெண்டாவது பையன் தங்கராஜ் வீட்டுக்கும் 60 பேரும் போய் பெரிய பித்தளை பானைகள்ல ஒண்ணா பொங்க வைப்போம்.

கேலியும் கிண்டலுமா வீடே சந்தோஷத்துல மிதக்கும். அதே சந்தோஷத்தோட அவங்களை எல்லாம் ஒண்ணா உக்கார வெச்சு `நாம மறுபடியும் பொறப்போமான்னு தெரியாது. ஆனா, கிடைச்ச இந்த ஒரு வாழ்க்கையை ஒற்றுமையா வாழணும். எனக்குப் பிறகும் நீங்க இதேபோல ஒண்ணா இருக்கணும்'னு சொல்லுவேன். எல்லோரும் அதை ஆமோதிப்பாங்க. பெரியவங்க பேச்சைக் கேட்டு நடக்கும் இந்தப் பாங்கும் பக்குவமும்தான் எங்க கூட்டுக்குடும்பம் இப்பவும் தொடரும் ரகசியம்!'' என்கிறார் நாச்சியார் மனநிறைவோடு.

 ஷோபா, ஜெயலட்சுமி, வசந்தா, கஸ்தூரி, ஆர்த்தி, இந்திராணி
ஷோபா, ஜெயலட்சுமி, வசந்தா, கஸ்தூரி, ஆர்த்தி, இந்திராணி

அம்மாவைப் பெருமையோடு பார்த்தபடி பேசுகிறார் இரண்டாவது மகன் தங்கராஜ், ``எந்த பிரச்னை வந்தாலும் உட்கார்ந்து பேசிடுவோம். அது சுமுகமா தீர்ந்திடும். இந்த மனப்பாங்கை கொள்ளுப்பேத்தி வரைக்கும் எங்கம்மா உணர வெச்சிருக்காங்க'' என்கிறார்.

தங்கராஜின் மூத்த மருமகள் இந்திராணி, ``வீட்டுல ஒரே சமையல்தான். எல்லாரும் சேர்ந்து சமைப்போம். எங்க வீட்டுல 15 பேர் இருந்தாலும், தினம் மூணு வேளையும் 25 பேருக்கு ஏற்றாற்போல சமைப்போம். ஏன்னா, தினமும் விருந்தாளி வருவாங்க.

விசேஷ நாள்களில் ஜவுளி எடுக்க மொத்த குடும்பமும் ரெண்டு, மூணு வாகனங்கள்ல திருச்சிக்குப் போவோம். காலையில ஏழு மணிக்குப் போனா, ஜவுளி எடுத்து முடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்ப இரவு 11 மணியாயிடும். இப்படி ஒரே குடும்பமா இருக்கிற ஆனந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் உணர்த்திவிட முடியாது'' என்கிறார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த தங்கராஜின் மூத்த மருமகள் இந்திராணியை, தங்கராஜின் இளைய மருமகள் நிர்மலா அழைக்க, தாமதம் செய்யாமல் உடனே சென்று விசாரிக்கிறார். நிர்மலா சொன்ன காரியத்தை முடித்தபிறகே, மறுபடியும் சாப்பிட அமர்கிறார் இந்திராணி. தங்கராஜின் மருமகள்களுக்குள் காண முடிந்த அந்த அந்நியோன்யத்திலேயே, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் `விட்டுக்கொடுத்தல், அடுத்தவர் வார்த்தையைக் காதுகொடுத்து கேட்டல்' போன்ற பண்புகளுக்கான `ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பத'த்தை உணர முடிந்தது.

நல்லதோர் குடும்பம்!