Published:Updated:

“குப்பையைக் குறைக்க நான்கு தொட்டிகள் போதும்!”

திடக்கழிவு மேலாண்மைக்கு வழிகாட்டிய கருத்தரங்கு!

பிரீமியம் ஸ்டோரி

கருத்தரங்கு

‘பசுமை விகடன்’, ‘எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’, ‘பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம்’ ஆகியவை இணைந்து… கடந்த ஜூலை 27-ம் தேதி ‘இனியெல்லாம் இயற்கையே... மாற்றமும் ஏற்றமும் தரும் மறுசுழற்சி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியையும் நடத்தின. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் எனச் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்டோர்...
கருத்தரங்கில் கலந்து கொண்டோர்...

வரவேற்புரை ஆற்றிய பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குழு தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசன், “கழிவு மேலாண்மையை நம்முடைய வீடுகளிலிருந்துதான் தொடங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாகச் சில முயற்சிகளைச் செய்துகிட்டு வர்றோம். பெரும்பாக்கத்தில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுகளைத் தரம்பிரிச்சு அனுப்பிட்டிருக்காங்க. கழிவுகளைப் பொறுத்தவரை வீட்டு அளவில் சாதாரண விஷயம். ஆனால், ஊர் அளவில் பார்த்தால் மிகப்பெரிய பிரச்னை. அதனால், குப்பைகளைக் குறைக்கிறதுக்கான வழிகளை நாம் ஆராய வேண்டும். அதற்காக வழிகாட்டவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் தயாராக இருக்கிறது” என்றார்.

கண்காட்சியில்...
கண்காட்சியில்...

எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் எஸ்.செந்தூர் பாரி, “ஸ்வச் பாரத் திட்டத்துக்கு முன்பே இந்திய அளவில் தூய்மையை முன்னெடுத்தது, எக்ஸ்னோரா அமைப்பு. நகரங்களில் கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், குப்பையை மட்க வைத்தல் எனப் பல விஷயங்களை 30 ஆண்டு களுக்கு முன்பே முன்னெடுத்தது எங்கள் அமைப்பு. இப்போதும் பல இடங்களில் பணியாற்றி வருகிறோம். வேலூருக்குப் பக்கத்திலிருக்கிற பொற்கோயிலுக்குப் போறவங்க, அப்படியே அங்க செயல் படுத்திட்டு வர்ற திடக்கழிவு மேலாண்மை குறித்தும் தெரிஞ்சுக்கணும். அந்தளவுக்குச் சிறப்பா கழிவுகளை மேலாண்மை செய்றாங்க. நம்ம வாழ்க்கையும், உணவும் பாதுகாப்பா இருக்கணும்னா, கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.

இந்திரகுமார், நடராஜன், செந்தூர் பாரி, ராஜா, ஜெயராமன்,  சாரங்கதாஸ், சீனிவாசன்
இந்திரகுமார், நடராஜன், செந்தூர் பாரி, ராஜா, ஜெயராமன், சாரங்கதாஸ், சீனிவாசன்

‘நம்ம ஊரு ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனர் பி.நடராஜன், “உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்குப் போடும் குப்பையின் அளவு 210 கோடி டன் (2.10 பில்லியன்), இந்திய அளவில் 1.7 லட்சம் டன், தமிழ்நாட்டில் 15,000 டன் குப்பை வெளி யேற்றப்படுகிறது. சென்னையில் மட்டுமே தினமும் 6,000 டன் குப்பை வெளியேற்றப் படுகிறது. நாம் குப்பைகளை முறையாகக் கையாண்டால் வெளியேற்றப்படும் குப்பையின் அளவை வெகுவாகக் குறைக்க முடியும். வீட்டில் உருவாகும் திடக் கழிவு களை… காய்கறிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு வகைக் கழிவுகளையும் பிரிக்காமல் ஒரே இடத்தில் கொட்டுவதுதான் தற்போதைய சூழல் கேட்டுக்கான பிரச்னை. ஒரு வீட்டிலிருந்து ஒரு நாளைக்குச் சராசரியா ஒரு கிலோ குப்பை வெளியேற்றப்படுகிறது என்றால்... அதில் 600 கிராம் மட்கும் குப்பை, மீதி 400 கிராம் மட்காத குப்பை. இதைத் தூக்கி எறியும்போது மாநகராட்சிக் குப்பைக் கிடங்குக்குப் போகிறது. அந்தக் கழிவுகளைக் கிடங்குகளில் எரிக்கும்போது பிளாஸ்டிக், இவேஸ்ட்டிலிருந்து வெளியேறும் ரசாயன திரவம் நிலத்தடி நீரைப் பாதிக்கிறது. அதிலிருந்து வெளியேறும் புகையானது காற்றில் பரவி நம்முடைய நுரையீரலைப் பாதிக்கிறது. இதுபோன்ற நிலை தொடர்ந்து வந்தால் நம்முடைய மண்ணும், உடலும் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். ரசாயனப் புகையினால் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்களும், புற்றுநோயும் வர வாய்ப்பிருக்கிறது.

வீடுகளிலிருந்து வெளியேறும் நான்கு வகைக் கழிவுகளுக்கும் தனித்தனியாக நான்கு குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். பொற்கோயிலுக்குப் போறவங்க, அப்படியே அங்க செயல்படுத்திட்டு வர்ற திடக்கழிவு மேலாண்மை குறித்தும் தெரிஞ்சுக்கணும்.

வீடுகளிலிருந்து வெளியேறும் நான்கு வகைக் கழிவுகளுக்கும் தனித்தனியாக நான்கு குப்பைத்தொட்டிகளை வைத்து, ஒவ்வொரு கழிவையும் தனித்தனியாகப் போட்டாலே போதுமானது. பெரும்பாலும் காய்கறிக் கழிவுகள்தான் தினந்தோறும் வெளியேற்றப் படும். பிளாஸ்டிக் கழிவுகள், இவேஸ்ட் கழிவு களை முறையாகச் சேமித்து, அதிக அளவில் சேரும்போது அவற்றை மறுசுழற்சி செய்ய வாங்க வருபவர்களிடத்தில் கொடுக்கலாம். மாநகராட்சிக்குக் கொடுக்கும் குப்பை மட்க வைக்கப்பட்டு உரமாக மாறிவிடும். மறுசுழற்சி செய்யக்கூடிய மருத்துவக் கழிவுகளை மட்டும் மாநகராட்சியிடம் கொடுத்துவிட வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றினால் குப்பை என்பதே இருக்காது. இதைச் சரியாகச் செய்தாலே குப்பையில்லா தமிழகத்தை உருவாக்கிவிட முடியும்” என்று நம்பிக்கை ஊட்டியவர், அனைவரையும் கழிவு மேலாண்மை செய்வது குறித்த உறுதி மொழியை எடுக்க வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த முனைவர் ராஜசேகரன், “நம்முடைய தாத்தாவும், அப்பனும் நல்லதொரு பூமியைக் கொடுத்திட்டுப் போனாங்க. நாம் நம்முடைய சந்ததிக்கு என்ன மாதிரி பூமியைக் கொடுக்கப் போகிறோம்? குப்பையைத் தரம் பிரிச்சு கொடுக்கணும்னு 2000-ம் வருஷத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2016-ம் வருஷம் கொண்டு வந்த சட்டத்தின்படி 5,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் அனைத்தும் அவரவர்களுடைய மட்கும் குப்பைகளை அவர்களுடைய வளாகத்திலேயே மறுசுழற்சி செய்யணும். ஆனால், பெரும்பான்மையான நிறுவனங்கள் அந்தப் பணிகளைச் செய்றதில்லை. குப்பை களை மட்க வைப்பதெல்லாம் எளிமையான முறைகள்தான். இதற்கான வழிமுறைகள் யூ-டியூப்ல கூடக் கத்துக்கலாம்” என்றார்.

ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் பம்மல் இந்திரகுமார், “இந்தியா ஒரு சொர்க்கம். இதன் காலநிலை மெச்சத்தகுந்தது. அதனால்தான் இனப்பெருக்கத்துக்காக வெளிநாடுகளிலிருந்து பறவைகள் நம்ம ஊருக்கு வருகின்றன. ஒரு பறவைக்கு இருக்கும் புரிதல்கூட நமக்கு இல்லை. நம்முடைய வளங்கள் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கழிவுநீர் மறுசுழற்சி, மழைநீர் சேகரிப்பு, கழிவுகளை மட்க வைத்தல் எல்லாவற்றையும் 30 ஆண்டு களாக என் வீட்டுக்குள்ளேயே செய்து வருகிறேன். நான் எந்தக் கழிவையும் வீட்டை விட்டு அனுப்புவதில்லை. என் வீட்டை வந்து பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்” என்றார்.

தொடர்ந்து, பெரும்பாக்கம் பஞ்சாயத்துச் செயலாளர் ஜெயராமன், பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாரங்கதாஸ், துணைத் தலைவர் ராஜா, சபரி கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் வி.சுப்பிரமணியம், திடக்கழிவு மேலாண்மை செயற்பாட்டாளர் சுமிதா ஆகியோர் பயனுள்ள கருத்துகளைச் சொன்னார்கள்.

“குப்பையைக் குறைக்க  நான்கு தொட்டிகள் போதும்!”

கருத்தரங்கு உரைகளை காணொலியில் பார்க்க இந்தக் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

காய்கறிக் கழிவில் மாடித்தோட்டம்

பாஸ்கரன், அரசு ஊழியர், சென்னை

“குப்பையைக் குறைக்க  நான்கு தொட்டிகள் போதும்!”

“வீட்ல உருவாகுற காய்கறிக் கழிவுகள்மேல சாணப் பவுடரைத் தெளித்து மட்க வைத்தால், இயற்கை உரம் கிடைக்கும் என்ற விஷயத்தை இங்கே தெரிந்து கொண்டேன். இவ்வளவு சுலபமா இயற்கை உரம் தயாரிக்கிற முறையைக் கத்துக் கொடுத்த பம்மல் இந்திரகுமாருக்கு நன்றி.”

ராஜராஜன்-எழிலரசி தம்பதி, ஐ.டி. ஊழியர்

“குப்பையைக் குறைக்க  நான்கு தொட்டிகள் போதும்!”

“மாடித்தோட்டம் அமைக்கிறது பத்தி தெரிஞ்சுக்க வந்தோம். ஆனா, வீட்ல இருக்கிற கழிவுகள பயன்படுத்தி மாடித்தோட்டம் அமைக்கிற முறையைத் தெரிஞ்சுகிட்டோம். வீட்டில் வளரும் செடிகளுக்குக் காய்கறிக் கழிவுகள எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்ங்கிறத தெரிஞ்சுகிட்டோம். குறிப்பா வீடுகளுக்குள்ள திடக்கழிவுகள எப்படி மேலாண்மை செய்யலாம்ங்கறதுக்கு நிறைய யோசனைகள் கிடைச்சது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு