ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கோலாகலம்... கொண்டாட்டம்... சாதனைப் பெண்களின் சங்கமம்!

அவள் விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் விருதுகள் விழா

‘`குடும்பத் தலைவிகள் உழைப்புக்கு பொருளாதார மதிப்பு வழங்க வேண்டுமென நினைத்தேன். உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது

வெள்ளி விழா ஆண்டில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் அவள் விகடன், கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக்கொண்டிருக்கும் சாதனைப் பெண்களை மேடையேற்றி கெளரவிக்கிறது. அவள் விருதுகள் விழா ஐந்தாம் ஆண்டாக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நவம்பர் 18-ம் தேதி சென்னை யில் நடைபெற்றது. இந்தக் கொண்டாட்ட விழாவின் சில துளிகள்...

கோலாகலம்... கொண்டாட்டம்... சாதனைப் பெண்களின் சங்கமம்!

சின்னத்திரை நடிகர்கள் தீபக்-நட்சத்திரா ஜோடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, விகடன் பாடலுடன் ஆரம்பமானது விழா. மாநிலமெங்கும் தொழு நோயாளிகள் குடியிருப்புகளைத் தேடிச்சென்று, அவர்களைத் தொட்டு, துடைத்து அன்பு மருத்துவம் செய்துவரும், டாக்டர் ரேணுகா ராம கிருஷ்ணனுக்கு `சேவை தேவதை’ விருதை வழங்கினார் நீதியரசி பிரபா ஸ்ரீதேவன். விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் ரேணுகா, ``தொழுநோயாளிகளை சமூகம் இன்னமும் தள்ளிவைத்தே பார்த்துக்கொண்டிருக்கிறது. நான், அவர்களைத்தொட்டுதான் மருத்துவம் செய்து கொண்டிருக்கிறேன். தொழுநோய் தொட்டால் ஒட்டிக் கொள்ளாது’’ என்று விழிப்புணர்வு அட்வைஸ் கொடுத்தார்.

 டாக்டர் தமிழிசை, பத்மஸ்ரீஸ்ரீ பத்மா சுப்ரமண்யம்...
டாக்டர் தமிழிசை, பத்மஸ்ரீஸ்ரீ பத்மா சுப்ரமண்யம்...
  அம்பிகா, மீனா, பாக்யராஜ், 
       டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார்...
அம்பிகா, மீனா, பாக்யராஜ், டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார்...

விருது வழங்கிய ஓய்வுபெற்ற நீதியரசி ‘குடும்பத்தலைவிக்கும் சம்பளம் தர வேண்டும்’ என்ற தன்னுடைய புகழ்பெற்ற தீர்ப்புக் குறித்துப் பேசுகையில், ‘`குடும்பத் தலைவிகள் உழைப்புக்கு பொருளாதார மதிப்பு வழங்க வேண்டுமென நினைத்தேன். உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது’’ என்றார் மகிழ்ச்சியாக.

சின்னத்திரையின் சிறந்த என்டர்டெயினராக பரிணமித்துக்கொண்டிருக்கிற ஷிவாங்கிக்கு, ‘வைரல் ஸ்டார்’ விருதை கின்னஸ் சாதனையாளர் செஃப் தாமு வழங்கினார். ‘`இவ்ளோ சாதிச்சவங்க மத்தியில நின்னு அவார்டு வாங்குறது குளுகுளுன்னு இருக்கு’’ என்று தன் குழந்தைத்தன பேச்சால் மேடையை அழகாக்கிய ஷிவாங்கி, நடிகர் வடிவேலுவின் டயலாக்ஸை பேசிக்காட்ட அரங்கம் சிரிப்புக் கடலாகியது. தன் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் பாடிய ‘ரா ரா’ பாடலை ஷிவாங்கி பாட, அரங்கம் அமைதியானது. அவள் விகடன் 50 ஆண்டு, 100 ஆண்டு வாழ வேண்டுமென வாழ்த்திய செஃப் தாமு, ‘தேனே தென்பாண்டி மீனே’ பாடலைப் பாடி சர்ப்ரைஸ் கொடுத்தார். ஷிவாங்கிக்கு ‘பூர்வீகா' மொபைலின் சார்பில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

  ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...
‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ குழுவினர், கனிமொழி...
 ப்ரியங்கா மோகன், ராமசுப்பிரமணியன், செல்லா அய்யாவு, விஷ்ணுவிஷால்...
ப்ரியங்கா மோகன், ராமசுப்பிரமணியன், செல்லா அய்யாவு, விஷ்ணுவிஷால்...

‘என் நாட்டுக் குழந்தைகளுக்கு விண்வெளி அறிவை ஏற்படுத்துவேன்’ என்ற உறுதியுடன் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்களை விண்வெளி நிலையங் களுக்கு அழைத்துச் சென்றிருக்கும் ஸ்ரீமதி கேசனுக்கு, ‘கல்வித் தாரகை’ விருது வழங்கினார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில் சாமி அண்ணாதுரை.

விருதைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீமதி, ``2கே கிட்ஸ் தகவல் தொழில்நுட்பத்தில் மிகக்கூர்மையாக இருக் கிறார்கள். அவர்களை நாம் எப்படி உருவாக்குகிறோமோ அப்படியே அவர்கள் உருவாவார்கள்’’ என்று இளம் தலை முறையைப் பாராட்ட, ‘`குலசேகரப்பட்டினத்தில் ஸ்பேஸ் ரிசர்ச் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என எதிரே அமர்ந்திருந்த கனிமொழியிடம் (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்) வேண்டுகோள் வைத்தார் மயில்சாமி அண்ணாதுரை.

 வடிவுக்கரசி, நாகமணி, விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், ஜெகதீஷ்...
வடிவுக்கரசி, நாகமணி, விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், ஜெகதீஷ்...
 சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெயராம், குன்றக்குடி அடிகளார், சாய் சித்ரா சாமிநாதன்...
சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெயராம், குன்றக்குடி அடிகளார், சாய் சித்ரா சாமிநாதன்...

15 திருநங்கைகள் ஒன்றிணைந்து ‘மதுரை டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் டீமுக்கு ‘வெற்றிப்படை’ விருது வழங்கினார் கனிமொழி. ‘`எங்க வருமானத்துல ஒரு ஹோமை தத்தெடுத்து, அங்கிருக்கிற 90 தாத்தா, பாட்டிகளை பராமரிச்சுக்கிட்டு வர்றோம்’’ என்று நெகிழ்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள் டிரான்ஸ் கிச்சன் டீம் குழுவினர். விருது வழங்கிய கனி மொழி, ‘`இவர்களுக்கு விருது வழங்கியது என்னை நிறைவடையச் செய்த தருணம்’’ என்றார் நெகிழ்ச்சியாக.அதே நெகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அடுத்த விருதையும் வழங்கினார் கனிமொழி.

தான் எதிர்கொண்ட சமூகத்தின் குரூர முகத்தையும், தான் பார்த்த சாதிய பாலின வர்க்க பேதங்களின் கொடுமைகளையும் தன் கூர்மையான மொழியின் மூலம் அடையாளப்படுத்தி வரும் எழுத்தாளர் பாமாவுக்கு `இலக்கிய ஆளுமை’க்கான விருது வழங்கினார். அவள் விகடனின் வெள்ளி விழா ஆண்டில் இந்த விருதை வழங்கியதற்கும், அதைக் கனிமொழி கையால் வழங்கியதற் கும் நன்றி தெரித்தார் பாமா.

 அம்பிகா, பிரியா  பவானிஷங்கர்...
அம்பிகா, பிரியா பவானிஷங்கர்...
 ஷிவாங்கி, `பூர்வீகா' நிர்வாகி, செஃப் தாமு...
ஷிவாங்கி, `பூர்வீகா' நிர்வாகி, செஃப் தாமு...

‘`என்னோட ஆதர்சமான எழுத்தாளர் பாமா. அவர்கள் கையால் நான் விருது பெற்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சி யடைந்திருப்பேன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டார் கனி மொழி. இருவரும் கைபிடித்துக்கொண்ட அந்தத் தருணம், விருது மேடையின் அழகான தருணங்களில் ஒன்றானது.

நடனக் கலைஞர், கலையியல் ஆராய்ச்சி அறிஞர், நடன இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர், நாட்டியம் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் உச்சம் தொட்டிருப்பவர் எனப் பன்முகம்கொண்ட, பத்மஸ்ரீ பத்மா சுப்ரமண்யத்துக்கு ‘தமிழன்னை விருது’ வழங்கினார் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான மேதகு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

விருதைப் பெற்றுக்கொண்ட பத்மா, ‘`எங்கள் நடனப் பள்ளியில் பஸ் கண்டக்டர் மகள், மீனவர் மகள், கொத்த னார் மகள், நாடோடி இனத்தைச் சேர்ந்தவரின் மகள் எனப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குழந்தை களும் நடனம் பயிலுகிறார்கள். நடனம் எலைட் மக்களுக் கானது மட்டுமே அல்ல’’ என்றார் அழுத்தம்திருத்தமாக. விருதளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மேடை யில் கேட்கப்பட்ட ‘இதுவா, அதுவா’ பாணி கேள்விகளுக்கு பட்பட்டென பதிலளித்து அசத்தியபோது அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.

 ரேணுகா ராமகிருஷ்ணன், 
பிரபா ஸ்ரீதேவன்...
ரேணுகா ராமகிருஷ்ணன், பிரபா ஸ்ரீதேவன்...
 கீதாலட்சுமி, குன்றக்குடி அடிகளார்...
கீதாலட்சுமி, குன்றக்குடி அடிகளார்...

பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், வெளி நாடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்காகவும் கடத்தப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட பெண்களையும் குழந்தை களையும் மீட்டுக்கொண்டிருக்கும் கன்யா பாபுவுக்கு ‘செயல் புயல்’ விருது வழங்கினார் ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல். விருதைப் பெற்றுக்கொண்ட கன்யா, ‘`குழந்தைகளுக்கு பிச்சையிடாதீர்கள். சாப்பிட கொடுங்கள் போதும். நீங்கள் அக்குழந்தைகளுக்கு பிச்சையிட்டால், அவர்களுக்கு பின்னால் இருக்கிற கறுப்பு உலகம் கொழுத்து வளரும்’’ என்று எச்சரித்தவர், ``தகுதியானவர் களைத் தேடித்தேடி விருது வழங்குகிற அவள் விகடனுக்கு வாழ்த்துகள்’’ என்றார் உற்சாகமாக.

வெள்ளித்திரையில் நட்சத்திரங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். சில மட்டும் ஒற்றையாகத் தொடர்ந்து ஜொலிக்கும். அப்படி வெள்ளித்திரையில் மிளிர்ந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா மோகனுக்கு ‘யூத் ஸ்டார்’ விருது வழங்கினார் நடிகர் விஷ்ணு விஷால். அவருடன் மேடை ஏறினார், விஷ்ணுவிஷால் அடுத்து நடிக்கும் `கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு.

ஸ்ரீமதி கேசன், மயில்சாமி அண்ணாதுரை...
ஸ்ரீமதி கேசன், மயில்சாமி அண்ணாதுரை...
 கன்யா பாபு, ஞானவேல்...
கன்யா பாபு, ஞானவேல்...

விருதைப் பெற்றுக்கொண்ட ப்ரியங்கா மோகனிடம் வரிசையாகக் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. அதில் ஒரு கேள்வி, வருங்காலக் கணவர் பற்றியது. அதற்கு, ‘`என்னோட வருங்கால கணவர் நம்பிக்கைக்குரியவராக, பெண்களுக்கு மரியாதை அளிப்பவராக, என் புரொஃபஷனின் வேல்யூ தெரிந்து திருமணத்துக்குப் பிறகு, என்னை நடிக்க அனுமதிப்பவராக இருக்க வேண்டும்’’ எனத் தனக்கே உரிய அழுத்தமான மற்றும் இனிமையான குரலில். அவருக்கு `ஹிமாலயா' ஆயுர்வேத நிறுவனத்தின் சார்பில் ரீஜினல் சேல்ஸ் மானேஜர் ராம சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகப் பெருமக்களின் நெஞ்சங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் மீனாவுக்கு, ‘எவர்கிரீன் நாயகி’ விருதை வழங்கினார் இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னர், இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜ். அவருடன் இணைந்து விருது வழங்கினார் நடிகை அம்பிகா. சர்ப்ரைஸாக மேடையேறினார்கள் கலா மாஸ்டரும், ‘அவ்வை சண்முகி’யில் மீனாவின் மகளாக நடித்த ஆனியும். கலாவைக் கட்டிக்கொண்ட மீனா, ‘`மாஸ்டர் மாதிரி போல்டா இருக்கணும்னு அடிக்கடி தோணும்’’ என உருகினார். ஆனியைப் பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்தவர், ‘காளை மாடு’ என்றபடி கண்டுபிடிக்க, ஆனியும் உற்சாகமாக ‘கன்னுக்குட்டி’ என்று டயலாக்கை கம்ப்ளீட் செய்தார். ``மீனா மூன்று படங்கள்ல என் பொண்ணா நடிச்சிருக்கா’’ என்று மகிழ்ச்சி முகம் காட்டி னார் நடிகை அம்பிகா.

 கனிமொழி, பாமா...
கனிமொழி, பாமா...
 தேசமங்கையர்க்கரசி, பூஜிதா, பாலன்...
தேசமங்கையர்க்கரசி, பூஜிதா, பாலன்...

நெகிழ்ந்துபோய் மேடையில் நின்றிருந்த நடிகை மீனா, ‘`ஃபீல்டுக்கு வந்து 40 வருஷமாயிடுச்சுன்னு நான் யோசிச்சதே இல்லை; அந்த சக்ஸஸைக் கொண்டாட நேரமும் இருந்ததில்லை. கொஞ்ச நாள் முன்னாடி என் வாழ்க்கையில நடந்த இழப்புல இருந்து என்னை மீட்டெடுத்தது அவள் விகடன்தான். அவள் டீமுக்கு என்னுடைய நன்றி’’ என்று கண்கலங்கினார். தொடர்ந்து நடிகை மீனாவுக்கு பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ் பிட்டல் மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநர் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் பரிசு பொருள்கள் அளித்து கெளரவித்தார்.

செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கி சீரியல், சினிமா என அடுத்தடுத்த தளங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானிஷங்கருக்கு `அவள் ஐகான்’ விருதை 80-களின் நாயகி நடிகை அம்பிகா வழங்கினார். திரையைப்போலவே நேரிலும் அவ்வளவு எளிமை பிரியாவிடம். மென்மையான குரலில் பேச ஆரம்பித்தவர், வீக் எண்டில் தன் வீட்டு மொட்டைமாடி சீக்ரெட், நியூஸ் ரீடிங் சேலஞ்ச், நடிகர் கார்த்திக்கும் தனக்கு மான நட்பு என செம இன்ட்ரெஸ்ட்டிங் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பின்னர் பிரியா பவானிஷங்கருக்கு அமிர்தாஞ்சன் COMFY நிறுவனத்தின் பிராண்டு மானேஜர் பிரியா தணிகாசலம் பரிசளித்து கெளரவித்தார்.

 ஷைனி வில்சன். 
சாந்தலா ரமேஷ்...
ஷைனி வில்சன். சாந்தலா ரமேஷ்...

நாடோடி சமூகத்திலிருந்து அரசுப் பணிக்குச் சென்ற முதல் நபர் இந்திரா காந்திக்கும், இரண்டாவது நபர் சுனிதாவுக்கும் ‘சூப்பர் வுமன்’ விருது வழங்குவதற்காக மேடை யேறினார் நடிகர் விஜய் சேதுபதி.

‘`எனக்கு 7 வயசா இருக்கிறப்போ 47 வயசு ஆளுக்கு என்னைக் கல்யாணம் செய்யப் பார்த்தாங்க. இதையெல்லாம் தாண்டித்தான் படிச்சு, வேலைக்குப் போனோம்’’ என்றார் இந்திரா காந்தி. அடுத்து பேசிய சுனிதா, ‘`எங்க சமுதாயத்துல 10 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ரெண்டு பேருதான் அரசு வேலையில இருக்கோம். அரசாங்கம் தான் வேலை வாய்ப்புல எங்களுக்கு உதவி செய்யணும்’’ என்று வேண்டுகோள் வைக்க, அதையே வழிமொழிந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி பேசுகையில், ‘`படிப் போட அருமை இதுதாங்க. பாருங்க, ஒருத்தர் வனத்துறையில கண்காணிப் பாளர். இன்னொருத்தர் இன்ஜினீயர். சுனிதா கேட்ட மாதிரி, அவங்க மக்கள்ல படிச்சவங்களுக்கு வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யணும். ஆசிரியர்கள்கூட சாதியைக் கேட்பது ரொம்பக் கேவலமானது. அரசாங்கம்தான் சட்டம் போட்டு சாதி பாகு பாட்டை ஒடுக்க வேண்டும்’’ என்றார்.

கோலாகலம்... கொண்டாட்டம்... சாதனைப் பெண்களின் சங்கமம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணிக்கு ‘பெஸ்ட் மாம்’ விருது வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து விருது வழங்க மேடையேறினார்கள் நடிகர் ஜெயப்பிரகாஷும், நடிகை வடிவுக்கரசியும். விருதைப் பெற மேடையேறிய நாகமணி, ‘`என் குழந்தை முன்னுக்கு வந்ததாலதான் நான் இன்னிக்கு இந்த மேடையில நின்னு கிட்டிருக்கேன்’’ என்று நெகிழ்ந்தவர், ‘`சேது எங்க குடும்பத்துல ஒருத்தர். ‘ரம்மி’ படத்தப்போ உங்களுக்கு ஜோடியா இந்தப் பொண்ணு நல்லாயிருக் காதுன்னு சொல்லிட்டாங்க. சேதுதான் ‘அந்தப் பொண்ணோட கண்ணும் சிரிப்பும் நல்லாயிருக்கு’ன்னு சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாரு. அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்’’ என்றார் உருக்கமாக. சர்ப்ரைஸாக வீடியோவில் தோன்றி, அம்மாவுக்குப் பாராட்டுகளையும் அவள் விகடனுக்கு வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து நாகமணிக்கு `நெக்ஸ்ட் டோர்' நிறுவனத்தின் சிஎஸ்ஓ ஜெகதீஷ் பரிசளித்தார்.

19 இந்திய மொழிகளில் பாடியுள்ள ஒரே பாடகி வாணி ஜெயராமுக்கு ‘கலைநாயகி’ விருது வழங்கினார்கள் குன்றக்குடி அடிகளாரும், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவசிதம்பரமும். ‘`ஐயா கரங்களால் விருது பெறுவது மகிழ்ச்சி’’ என்று நெகிழ்ந்த வாணியம்மா, தன்னுடைய சிக்நேச்சர் பாடலான `மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ பாடலைப் பாடினார். ஆச்சர்யம்... குரலில் அதே இளமை. வாணி ஜெயராமின் இசைஞானம் பற்றி பேசிய சிவசிதம்பரம், `‘அவர் என்னுடைய அதிர்ஷ்டமான அம்மா’ என்று நெக்குருகினார். அதையடுத்து, வாணி ஜெயராமுக்கு தமிழ் மேட்ரிமோனியின் சீஃப் புராடக்ட் ஆபீசர் சாய் சித்ரா சாமிநாதன் பரிசளித்து மகிழ்ந்தார்.

அகில இந்திய அளவில் வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு ‘பசுமைப் பெண்’ விருது வழங்கி னார் குன்றக்குடி அடிகளார். விருதைப் பெற்றுக்கொண்ட கீதாலட்சுமி, ‘`விவசாயிகளை தொழிலதிபர்களாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு இயற்கை விவசாயத்துடன் நவீன தொழில்நட்பமும் கைகோக்க வேண்டும்’’ என்றார்.

 சுனிதா, இந்திரா காந்தி, விஜய் சேதுபதி...
சுனிதா, இந்திரா காந்தி, விஜய் சேதுபதி...

‘லிட்டில் சாம்பியன்’ விருது பெற மேடையேறினார் பூஜிதா. அவருக்கு விருது வழங்க மேடையேறிய ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க் கரசி, ‘`ஆன்மிக மேடையில் பெண்களுக்கு இடம் கிடைப்பது மிக மிகக் கடினம். அதைவிட கடினம் அங்கீகாரம் கிடைப்பது. என்னுடைய இளவயதில் என்னை இந்தச் சமூகம் எப்படிக் கொண்டாட வேண்டுமென்று நினைத்தேனோ, அது இன்று பூஜிதாவுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்றார். அதைத் தொடர்ந்து பூஜிதாவுக்கு பிரித்வி இன்னர்வேர்ஸ் மானேஜிங் டைரக்டர் பாலன் பரிசளித்து சிறப்பித்தார்.

மதுரையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் ஒலிம்பிக் கனவுகளுடன் தடகளத்தில் தடதடத்துக்கொண்டிருக்கும் ரேவதிக்கும் சுபாவுக்கும் ‘சிங்கப் பெண்’ விருது வழங்கினார் ஓய்வுபெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனை பத்மஸ்ரீ ஷைனி வில்சன். அவர் பேசுகையில், ``நான் கல்யாணமான ஒரு வாரத்துல தடகளத்துல தங்கம் வாங்கினேன். குழந்தை பிறந்து 3 மாசத்துக்குப் பிறகுதான் ஏஷியன் சாம்பியன் ஆனேன்’’ என்று பகிர்ந்துகொண்டவர், ரேவதி மற்றும் சுபாவிடம், ‘`அடுத்த ஒலிம்பிக்ல ஃபைனலுக்காவது வரணும்’’ என்று உற்சாகப்படுத்தினார். உடன் மேடையேறிய பிரித்வி இன்னர்வேர்ஸின் நிர்வாக இயக்குநர் பாலன், ரேவதிக்கும், சுபாவுக்கும் தலா 25,000 ரூபாய்க்கான காசோலை வழங்கி கெளரவித்தார்.

 பிரியா பவானிஷங்கர், பிரியா தணிகாசலம்...
பிரியா பவானிஷங்கர், பிரியா தணிகாசலம்...

தொடர்ந்து சுற்றுச்சூழல் போராளி சாந்தலா ரமேஷுக் கும் ‘இளம் நம்பிக்கை’ விருது வழங்கி வாழ்த்தினார் ஷைனி வில்சன். சாந்தலா பேசுகையில், ‘`இந்த ஆற்றில் ஏன் இப்போ தண்ணியில்லங்கிற கேள்வியிலதான் என்னோட இந்தப் பயணம் ஆரம்பிச்சது. வெப்பமயமாதல் காரணமா உலகம் அழியுது; அதைத் தடுக்க உலகத் தலைவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அவர் களைத் திட்டுறதை விட்டுட்டு, பொறுப்பை இளைஞர்கள் கையில எடுக்கணும்’’ என்றார் அழுத்தமாக.

`பெண்ணென்று கொட்டு முரசே’ என்ற முழக்கத்துடன், சாதனைப் பெண்களின் சங்கமம் நிறைவோடும் நினைவு களோடும் இனிதே முடிவுற்றது.

`கட்டா குஸ்தி' Vs `மேடை குஸ்தி'!

`வெண்ணிலா கபடி குழு', `வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்', `ராட்சன்', `எஃப்.ஐ.ஆர்' என்று ஹிட் படங் களைக் கொடுத்து வரும் விஷ்ணு விஷாலின் அடுத்த படம் `கட்டா குஸ்தி'. இந்தத் திரைப்படம் பற்றிய ஒரு நிகழ்ச்சி யும் அவள் விகடன் விருதுகள் விழாவின் நடுவே இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தன்னுடைய கணவர் விஷ்ணு விஷாலுடன் தானும் ஜோடி போட்டார், பிரபல பேட்மின்ட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா.

‘`என் வொய்ஃப் ஜுவாலா, விளையாட்டுத்துறையில் பெண்கள்படுற துன்பங்களை அடிக்கடி சொல்வாங்க. அதெல்லாம் கவலை தரக்கூடிய விஷயம். பொதுவாவே என் படங்கள்ல பெண்களைப்பத்தி தப்பா வரக்கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்கேன்’’ என்று குறிப்பிட்டார்.

கோலாகலம்... கொண்டாட்டம்... சாதனைப் பெண்களின் சங்கமம்!

விளையாட்டுத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பது பற்றி ஜுவாலாவிடம் கேள்வி எழுப்பியதற்கு, ``விளையாட்டு வீராங்கனைகளுக்கு எதிரான தவறான நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காகவே குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறேன்’’ என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

`கட்டா குஸ்தி' போஸ்டர் பின்னணியில் படத்தைப் பற்றிய விவாதம் ஆரம்பமானது. குஸ்தி தெரியும்... அதென்ன கட்டா குஸ்தி?

படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவுவிடமே கேட்டதற்கு... ``கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பாரம்பர்ய மல்யுத்த விளையாட்டு. மணலில்தான் மல்யுத்தம் செய் வார்கள். மல்யுத்தக் களத்தில் யார் இறுதிவரை நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். ஆரம்ப காலத்தில் இந்த விளையாட்டில் இத்தனை சுற்றுத் தாக்குப்பிடிக்க வேண்டும்; இத்தனை புள்ளிகள் பெற்றிருக்க வேண்டுமென்கிற அவசிய மில்லை. காலப்போக்கில் கட்டா குஸ்தியும் நவீன விளையாட்டுகளில் ஒன்றான பிறகு, மணல், ‘மேட்’ போட்ட மேடையாகிவிட்டது. இத்தனை சுற்று, இத்தனை புள்ளி என விதிகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது'’ என்று சொன்னார். `கட்டா குஸ்தி' திரைப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது.

நிறைவாக, `ஹேண்ட் ரெஸ்லிங்' எனப்படும் குஸ்தியை மேடையிலேயே கணவன் - மனைவி இருவரும் அரங்கேற் றினர். ஒரு டேபிளில் இருவரும் முஷ்டியை மடக்கி, மல்லுக்கட்டினர். மிகவும் ஜாலியாக இருவரும் மோதிய இந்தப் போட்டியில் வெற்றி வாகை சூடினார் ஜுவாலா குட்டா.